Last Updated : 17 Jan, 2017 10:39 AM

 

Published : 17 Jan 2017 10:39 AM
Last Updated : 17 Jan 2017 10:39 AM

சேதி தெரியுமா? - புதிய நீர்மூழ்கிக் கப்பல்

இந்தியாவின் இரண்டாம் ஸ்கார்ப்பீன் வகை நீர்மூழ்கிக் கப்பல் ‘ஐ.என்.எஸ். கந்தேரி’ அறிமுகப்படுத்தப்பட்டது. பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் பினா பாம்ரீ இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கப்பலை அறிமுகப்படுத்திவைத்தார். கடற்படைத் தலைமை தளபதி அட்மிரல் சுனில் லம்பா உடன் இருந்தார். மும்பையை அடுத்துள்ள கந்தேரி (உந்தேரி) தீவில் மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜி கந்தேரிக் கோட்டையை எழுப்பினார். அதை நினைவுகூரும் வகையில் கந்தேரி என இந்த நீர்மூழ்கிக் கப்பலுக்குப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மும்பையில் உள்ள மசாகன் கப்பல் கட்டும் நிறுவனம் (எம்.டி.எல்.), பிரெஞ்சு நிறுவனமான டி.சி.என்.எஸ்.ஸின் ஒத்துழைப்புடன் இந்தியக் கடற்படைக்கான நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கிவருகிறது. ஐ.என்.எஸ். கல்வாரி எனப் பெயரிடப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல் ஏற்கெனவே கட்டி முடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கடந்த செப்டம்பர் மாதம் இந்த நீர்மூழ்கிக் கப்பல் கடற்படைக்கு அறிமுகபடுத்தப்பட்டது. ‘திட்டம் 75’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் அடிப்படையில் இன்னும் 4 நீர்மூழ்கிக் கப்பல்கள் 9 மாத காலத்துக்குள் கப்பற்படைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியக் கப்பற்படையில் இதுவரை 13 நீர்மூழ்கிக் கப்பல்களும் 2 அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்களும் உள்ளன.

வாக்கு இயந்திரத்தில் புதிய முறை

வாக்காளர்கள் தங்கள் வாக்கைச் சரிபார்த்துக்கொள்ளும் விதமாக வாக்கு எந்திரத்தில் சரிபார்ப்பு ஒப்புகைச் சீட்டு (Vote Verifier Paper Audit Trail-VVPAT) வழங்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இதன் மூலம் வாக்காளர்கள் தங்கள் வாக்குகள் சரியான நபருக்கு சரியாக அளிக்கப்பட்டுள்ளனவா எனச் சரிபார்த்துக்கொள்ள முடியும். சுதந்திரமான தேர்தலுக்கு இது வழி வகுக்கும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

2013-ம் ஆண்டு வழங்கப்பட்ட ஒரு தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் இதை வலியுறுத்தியது. 2013-ம் ஆண்டு நாகாலாந்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் நோக்சென் தொகுதியில் முதன்முதலில் இந்த முறை சோதித்துப் பார்க்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 2014-ம் ஆண்டின் நாடாளுமன்றத் தேர்தலில் 8 தொகுதிகளில் இந்த முறை சோதித்துப் பார்க்கப்பட்டது. தற்போது நடைபெறவிருக்கும் ஐந்து மாநிலத் தேர்தல்களில் கோவா மாநிலத்தில் எல்லாத் தொகுதிகளிலும் சரிபார்ப்பு ஒப்புகைச் சீட்டு (Vote Verifier Paper Audit Trail-VVPAT) முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

நாட்டிலேயே முதல் முறையாக ஒரு மாநிலம் முழுவதும் இந்த முறை அறிமுகப்படத்தப்படவுள்ளது இதுதான் முதல்முறை. பஞ்சாப்பில் மாவட்டத்துக்கு ஒரு தொகுதி என 13 தொகுதிகளிலும் மணிப்பூர் மாநிலத்தில் நான்கு தொகுதிகளிலும் உத்தரப் பிரதேசத்தில் 20 தொகுதிகளிலும் உத்தராகண்ட்டில் நான்கு தொகுதிகளிலும் சரிபார்ப்பு ஒப்புகைச் சீட்டு (Vote Verifier Paper Audit Trail-VVPAT) முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

புதிய இஞ்சி கண்டுபிடிப்பு

இந்தியத் தாவரவியல் ஆய்வு நிறுவனம் அந்தமான் தீவில் புதிய இஞ்சி ரகத்தைக் கண்டுபிடித்துள்ளது. ஸின்ஜிபர் சூடோ ஸ்கோர்சம் (Zingiber pseudo squarrosum) எனப் பெயர் கொண்ட இந்தத் தாவரம் இஞ்சிக் குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் தண்டு சிவப்பு நிறத்தில் உள்ளது. இதன் பூ தாமரையின் வடிவத்தைப் போல இருக்கிறது. இது மருத்துவ குணம் வாய்ந்தது. வயிற்று வலி, தோல் வியாதிகளுக்கு இது சிறந்த மருந்தாகப் பயன்படும். அங்குள்ள பழங்குடிகள் பல்லாண்டு காலமாக இதை மருத்துவத்துக்காகப் பயன்படுத்திவருகிறார்கள். சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய நாடுகளிலிருந்து இதுவரை 140 இஞ்சி ரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலிருந்து 20 ரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 7 அந்தமானில் கண்டுபிடிக்கப்பட்டவை.

அண்டவெளியில் ஒரு மோதல்

அண்டவெளியில் விண்மீன் கொத்து மோதல் (collision of giant galaxy clusters) நிகழ்ந்துள்ளது. இது அண்டவெளியில் நடந்த மாபெரும் நிகழ்வு எனச் சொல்லப்படுகிறது. இந்த நிகழ்வு பூமியிலிருந்து 2 மில்லியன் ஒளியாண்டு தூரத்தில் நடந்துள்ளது. பெருநிறை கருந்துளையால் (supermassive black hole) இந்த விண்மீன் கொத்து மோதல் நிகழ்ந்துள்ளது. இதனால் இயற்கையான பிரபஞ்சத் துகள் முடுக்கி (cosmic particle accelerator) உருவாகியுள்ளதாக வானியலாளர்கள் தெரிவிக்கிறர்கள். இந்த மாபெரும் நிகழ்வு பூனேயில் உள்ள பிரம்மாண்டமான தொலைநோக்கியாலும் (Giant Metrewave Radio Telescope (GMRT)) நாசாவில் உள்ள சந்திரா எக்ஸ்ரே ஆய்வகம் (Chandra X-ray Observatory) மூலமாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

2016-ன் சிறந்த வீரர்

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (ஃபிஃபா) 2016-ம் ஆண்டுக்கான ‘சிறந்த கால்பந்து வீரர்' விருதுக்கு போர்ச்சுகல் நாட்டு கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் 34.54% ஆதரவைப் பெற்றதன் மூலம் இந்த விருதுக்குத் தகுதிபெற்றுள்ளார். பார்சிலோனா அணியைச் சேர்ந்த லயனல் மெஸ்ஸி (26.42%), அட்லாட்டிகோ மாட்ரிட் அணியின் ஆண்டோய்னி கிரீஸ்மான் (7.53%) ஆகிய இருவரையும் வீழ்த்தி ரொனால்டோ இந்த விருதைத் தட்டிச் சென்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x