Published : 25 Nov 2013 12:00 AM
Last Updated : 25 Nov 2013 12:00 AM

முப்படைகளில் அதிகாரியாக ஆசையா? - பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு

நாட்டுப்பற்றும் சவால்களை தைரியத்துடன் எதிர்கொள்ளும் துணிச்சலும் நிறைந்த இளைஞர்களுக்கு உரித்தான பணி முப்படை பணி.

முப்படைகளில் படைவீரர்கள், இளநிலை அதிகாரிகள், அதிகாரிகள் என 3 நிலைகள் உள்ளன. முப்படைகளில் நேரடியாக அதிகாரி பணியில் சேருவதற்காக ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணி தேர்வு (கம்பைன்டு டிபன்ஸ் சர்வீசஸ் எக்ஸாம்) என்ற பிரத்யேகத் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த தேர்வை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) நடத்துகிறது.

ராணுவம், விமானப் படைகளில் அதிகாரி ஆவதற்கு ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு முடித்திருந்தால் போதும். ஆனால், கடற்படையில் அதிகாரியாகப் பொறியியல் பட்டம் அவசியம்.

கலைப் பட்டதாரியாக இருந்தால் பிளஸ் 2வில் கணிதம், இயற்பியல் பாடங்களைப் படித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களுக்கு திருமணம் ஆகியிருக்கக் கூடாது. இறுதி ஆண்டு மாணவர்கள்கூடத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். பெண்கள் குறுகிய கால பணிக்கு (எஸ்.எஸ்.சி.) விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

எழுத்துத்தேர்வு, அறிவுத்திறன் தேர்வுடன் கூடிய ஆளுமைத்தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதி பெற்றவர்கள் அதிகாரிப் பணிகளுக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள். எழுத்துத்தேர்வில் ஆங்கிலம், பொது அறிவு, கணிதம் ஆகிய பாடங்களில் அப்ஜெக்டிவ் முறையில் கேள்வி கேட்கப்படும். கணித கேள்விகள் 10ஆம் வகுப்பு நிலையிலும், மற்ற பாடங்கள் பட்டப் படிப்பு நிலையிலும் அமைந்திருக்கும். எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அறிவுத்திறனையும் மனவலிமையையும் சோதித்து அறியும் வகையில் குழு விவாதம், களப்பணி தொடர்பான தேர்வு போன்றவை நடத்தப்படும். இறுதியாக வெற்றிபெறுவோர் முப்படைகளில் அதிகாரி பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

ராணுவ அதிகாரிகளுக்கு டெராடூனில் உள்ள இந்திய மிலிட்டரி அகாடெமியிலும், சென்னையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்திலும் (ஓ.டி.ஏ.), கடற்படை அதிகாரிகளுக்கு கேரளா இந்திய நேவல் அகாடெமியிலும், விமானப்படை அதிகாரிகளுக்கு ஐதராபாத் இந்திய ஏர்போர்ஸ் அகா டெமியிலும் பயிற்சி அளிக்கப்படும்.

2014ஆம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணித் தேர்வுக்கான அறிவிப்பை யு.பி.எஸ்.சி. தற்போது வெளியிட்டுள்ளது. இதன்மூலம், இந்திய மிலிட்டரி அகாடெமிக்கு 250 பேரும், இந்திய நேவல் அகாடெமிக்கு 40 பேரும், ஏர்போர்ஸ் அகாடெமிக்கு 32 பேரும், சென்னை ஓ.டி.ஏ.வுக்கு 175 பேரும், 12 பெண்களும் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள்.

எழுத்துத்தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி 9ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வுக்கு ஆன்லைனில் (www.upsconline.nic.in) டிசம்பர் 2ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கான வயது வரம்பு, பாடத்திட்டம், தேர்வுக்கட்டணம் உள்பட அனைத்து விவரங்களையும் யு.பி.எஸ்.சி. இணையதளத்தில் (www.upsc.gov.in) விரிவாக அறிந்துகொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x