Last Updated : 02 Aug, 2016 11:41 AM

 

Published : 02 Aug 2016 11:41 AM
Last Updated : 02 Aug 2016 11:41 AM

யூ.பி.எஸ்.சி. தேர்வை வென்றவர்கள் 10: முதல் முயற்சியில் ஐ.பி.எஸ்.

ஒரு வருடம் மட்டுமே படித்து முதல் முயற்சியிலேயே யூ.பி.எஸ்.சி. பாஸ் செய்தவர் கே.கார்த்திக். 2011 பேட்ச்சில் ஐ.பி.எஸ். பெற்றவருக்குக் கேரள மாநிலப் பிரிவு கிடைத்துள்ளது. பாலக்காடு மாவட்ட ஆலத்தூரின் ஏ.எஸ்.பி., திருச்சூர் நகர காவல்துறை துணை ஆணையர், கேரள ஆளுநரான நீதிபதி ஆர்.சதாசிவத்தின் ஏ.டி.சி., திருச்சூர் மாவட்ட ஊரகக் காவல்துறைக் கண்காணிப்பாளர் ஆகிய பணிகளில் இருந்தவர் தற்போது வயநாடு மாவட்ட எஸ்பியாகப் பதவி வகிக்கிறார்.

திருவண்ணாமலை மாவட்டத்தின் துறிஞ்சாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக். தந்தை கண்ணன் அடிப்படையில் விவசாயி. தமிழக அரசின் வனத்துறையில் கார்டு பணியில் இருக்கிறார். கார்த்திக் படிப்பில் படு சுட்டி. பிளஸ் டூவில் 1111 மதிப்பெண் எடுத்து சென்னையில் எலக்ட்ரானிக்ஸ் பி.இ. படித்தார். துறிஞ்சாபுரம் கிராமத்துக்குக் கிடைத்த மூன்றாவது பொறியாளர் இவர். 2008-ல் எல் அண்ட் டி நிறுவனத்தில் வேலையில் சேர்ந்தார். அடுத்த ஆண்டு யூ.பி.எஸ்.சி. எழுத முடிவெடுத்து வேலையை ராஜினாமா செய்தார். சென்னையில் உள்ள தமிழக அரசின் அண்ணா இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மெண்ட்டில் சேர்ந்து கடுமையான பயிற்சி எடுத்து முதல் முயற்சியிலேயே ஐ.பி.எஸ். ஆகத் தேர்வுபெற்றார்.

“படிப்பு மட்டும்தான் கைகொடுத்து நம்மை வளர்த்துவிடும்னு அப்பா அடிக்கடி என்கிட்ட சொல்லுவார். நான் கஷ்டப்பட்டு படிச்சு முன்னேறி மாவட்ட ஆட்சியர் ஆகி சமூகத்துக்கு சேவை செய்யணுங்குறது அவரோட கனவு. பி.இ. இறுதியாண்டு படிக்கும்போது முதன்முதலில் யூ.பி.எஸ்.சி. தேர்வு எழுதும் ஆர்வம் எனக்கு வந்துச்சு. ஆனால் உடனடியாக அதில இறங்காமல் வேலையில் சேர்ந்தேன். சொல்லப்போனால் நான் வேலை செய்த பத்து மாதங்களில்தான் என்னுடைய வேலையை மேற்பார்வையிட்ட உயர் அதிகாரிகளைப் பார்த்து வியந்து யூ.பி.எஸ்.சி. மீது மேலும் ஈர்ப்பு உண்டானது” என்கிறார் கார்த்திக்.

விருப்பப் பாடம் எடுத்ததன் பின்னணி

விருப்பப் பாடமாகப் புவியியலையும் பொது நிர்வாகத்தையும் தேர்ந்தெடுத்து எழுதி முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றார் கார்த்திக். சிறு வயது முதல் நிலம், வானிலை போன்றவற்றில் ஆர்வம் இருந்ததால் புவியியலைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். அரசுப் பணிக்குப் பொது நிர்வாகம் தெரிந்துவைத்திருப்பது அவசியம் எனக் கருதி அதையும் தேர்ந்தெடுத்தார். அண்ணா இன்ஸ்டிடியூட்டில் பெற்றதை விடக் கூடுதலான பயிற்சி தேவைப்பட்டதால், பொது நிர்வாகத்தில் தயாராக சென்னை கணேஷ் ஐ.ஏ.எஸ். அகாடமியில் ஆறு மாதங்கள், புவியியலில் தேர்ச்சி பெற சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமியில் நான்கு மாதங்கள் பயின்றார். இரண்டாம் நிலைத் தேர்வுக்காக பிரத்யேகப் பயிற்சி ஏதுமின்றித் தானாகப் படித்தார்.

தினந்தோறும் 12 மணி நேரம் படித்திருக்கிறார். இதில் என்ன படிக்க வேண்டும், எதைப் படிக்கக் கூடாது எனவும் அவர் முக்கியமாகத் தெரிந்துவைத்திருக்கிறார். கிட்டத்தட்ட 13 மாதங்கள் செய்த இடைவிடாத உழைப்பால் முதல் முயற்சியிலேயே வெற்றி கிடைத்தது. நேர்முகத் தேர்வை எதிர்கொள்ள சைலேந்திரபாபு ஐ.பி.எஸ்., உதயசங்கர் ஐ.ஏ.எஸ். ஆகியோர் நடத்திய மாதிரித் தேர்வுகளில் கிடைத்த பயிற்சி போதுமானதாக இருந்தது.

ஐ.பி.எஸ். ஆனவுடன்…

கார்த்திக் ஐ.பி.எஸ். ஆக கம்பீரமாக நடைபோடத் தொடங்கிய சில மாதங்களில் கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அப்போது கேரள ஆளும் கட்சியின் முக்கிய அரசியல் பிரமுகர் ஒருவர் தேர்தல் முறைகேடு மற்றும் அரசு அதிகாரிகளை மிரட்டிய குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டார். ஆனால் அவரை விடுவிக்க சிபாரிசு செய்யப்பட்டது. இதற்காக, கார்த்திக்கிடம் போனில் பேசியதாகக் கூறப்படுபவர், மாநிலத்தின் மிக முக்கியமான பொறுப்பை வகித்தவர். ஆனால் அதிகாரத்துக்குக் கீழ்ப்படியாமல், நிதானமாகப் பேசியிருக்கிறார் கார்த்திக். குற்றவாளியை விடுவித்தால் ஏற்படும் விளைவு, அதனால் அவரது கட்சிக்கும் ஏற்படும் இழப்புகள் போன்றவற்றை கார்த்திக் எடுத்துரைத்திருக்கிறார். இதைக் கேட்டு தன் கோரிக்கையை வாபஸ் பெற்றுள்ளார் அந்தப் பிரமுகர்.

இதுபோன்ற சமயங்களில் திரைப்பட நாயகன் போல் ஏட்டிக்குப் போட்டியாகவும், சவாலாகவும், கோபமாகவும், அதிகாரத் தொனியிலும் பேசாமல் நம் அறிவைப் பயன்படுத்தி அவர்களிடம் பொறுமையாக எடுத்துரைத்தால் கடமையைச் செய்ய முடியும் என்பது கார்த்திக்கின் நம்பிக்கை.



நேர்முகத் தேர்வு அனுபவம்

நேர்முகத் தேர்வு என்பது ஒருவரது திறனை அறிந்துகொள்ளும் தேர்வு. இதில் குடும்பம், கிராமம், ஊர், வாழ்க்கை, அரசாங்கம் என நமக்குச் சம்பந்தப்பட்ட அனைத்தையும் குறித்துக் கேள்விகள் கேட்கப்படும். உதாரணமாக, நீங்கள் விவசாயம் செய்திருந்தால் தேசிய அளவில் விவசாயத்தின் நிலை பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும். அதில் நிலவும் பிரச்சினைகளையும் முன்னேற்றங்களையும் அறிந்திருக்க வேண்டும். நீங்கள் வசிக்கும் கிராமத்தில் உள்ளவர்கள் எத்தனை பேர்? அதன் பொருளாதார நிலை என்ன? இப்படிப் பலவற்றை அறிந்திருக்க வேண்டும்.

தற்போதைய நிகழ்வுகள் குறித்தும் கேள்விகள் இருக்கும். இதை எதிர்கொள்ள அன்றாடம் ஆங்கிலம் மற்றும் தமிழ் நாளிதழ்களைத் தவறாமல் வாசிப்பது அவசியம். ஒரு நிர்வாகியாக இருக்கும்போது எழும் பிரச்சினைகளுக்கு நாம் காணும் தீர்வு என்ன என்பதையும் சோதிப்பார்கள். இந்த நேர்முகத் தேர்வு என்பது சில நிபுணர்களுடனான உரையாடலாகத்தான் இருக்கும். இதில், பயம் இல்லாமல், தயங்காமல் பதிலளிக்க வேண்டும்.

வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்து என்னிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. இதைச் சுற்றிப் பல துணைக் கேள்விகளும் பத்து நிமிடங்கள் கேட்கப்பட்டன. நான் முதலில் செய்த வேலையில் அகல ரயில் பாதை பணியில் இருந்ததால் ஆங்கிலேயர் காலத்தில் அத்திட்டம் எப்படி முன்னெடுக்கப்பட்டது போன்ற கேள்விகளையும் கேட்டார்கள். அத்தனைக்கும் நான் பதில் அளித்தேன்



என்னை உருவாக்கிய நூல்கள்

6 முதல் பிளஸ் டூ வரையிலான சி.பி.எஸ்.இ. பாட நூல்களில் உள்ள வரலாறு, அறிவியல், புவியியல் பாடங்களை முழுமையாகப் படிப்பது அவசியம். இவற்றைப் படிக்காமல் நேரடியாகப் பேராசிரியர்களின் நூல்களைப் படிப்பதில் பலனில்லை.

# ஸ்பெக்ட்ரம் பதிப்பகத்தின் ‘ஃபேசட்ஸ் ஆஃப் இந்தியன் கல்சர்’

(Spectrum Publishers’ Facets of Indian Culture)

# ‘இந்தியாஸ் ஸ்டிரகிள் ஃபார் இண்டிபெண்டன்ஸ்’- பிபின் சந்திரா

(Indian Struggle for Independence - Bibin Chandra)

# ‘ஃபிஸிக்கல் ஜியாக்ரஃபி’- சவிந்த்ரா சிங்,

(Physical Geography by Savindra Singh)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x