Published : 03 Feb 2017 09:37 AM
Last Updated : 03 Feb 2017 09:37 AM

வெற்றிபெறும் படத்தில் நான் இருக்க வேண்டும்! - ஷிவதா பேட்டி

சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் ‘அதே கண்கள்’ படத்தில் தனது நடிப்பின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் ஷிவதா. ‘நெடுஞ்சாலை’, ‘ஜீரோ’ என முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்கள் அமையும் படங்களில் மட்டுமே நடித்து வருபவரிடம் பேசியதிலிருந்து…

‘அதே கண்கள்’ படத்தில் அமைந்த தீபா கதாபாத்திரம் உங்களைத் தேடி வந்ததா?

எப்போதுமே வித்தியாசமான கதைகளில் நடிக்க வேண்டும் என விருப்பப்படுவேன். கதையில் தீபா கதாபாத்திரத்தின் மாற்றங்கள் எனக்கு மிகவும் பிடித்தன. ரசிகர்கள் இதை எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்ற விஷயத்தை நான் யோசிக்கவே இல்லை. நல்ல கதை, நல்ல டீம் என ஒரு வாய்ப்பு வந்தபோது இதில் நாம் நடிக்கலாமா, வேண்டாமா என்ற யோசனைக்குள்ளேயே செல்லவில்லை.

ஆனால், இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. திரையுலக நண்பர்கள், ரசிகர்கள் எனப் பலரும் தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்துக்கொண்டே இருக்கிறார்கள். ஒரு நல்ல வெற்றிக்காகக் காத்திருந்தேன். அது இப்படம் மூலமாக அமைந்துவிட்டது. இனி ஷிவதா என்றால் ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டுவிடும். அதை நிறைவேற்றுகிற மாதிரியான கதாபாத்திரங்களுக்காக நான் காத்திருக்கத் தயார்.

அப்படியானால் வித்தியாசமான படங்களில் மட்டும்தான் உங்களைக் காண முடியுமா?

கண்டிப்பாக இல்லை. ஒரு நடிகையாக கமர்ஷியல் படங்கள், வித்தியாசமான படங்கள் என இரண்டிலுமே நடிக்க வேண்டும் என்பதே என் எண்ணம், விருப்பம். எந்த வகைப் படமாக இருந்தாலும் வெற்றியடையும் படத்தில் நாம் இருக்கிறோமா என்பதுதான் முக்கியமான விஷயம். நானும் கமர்ஷியல் படத்தில் நடித்துள்ளேன். விரைவில் வெளியாகவுள்ளது. சிறிய கதாபாத்திரம், பெரிய கதாபாத்திரம் என்ற வித்தியாசத்துக்குள் எல்லாம் நான் போவதில்லை.

‘நெடுஞ்சாலை’ படத்துக்காக மறக்க முடியாத பாராட்டு எதுவும் உள்ளதா?

ரசிகர்கள், திரையுலகினர் யாருக்குமே என்னைத் தெரியாது. படம் பார்த்துவிட்டு இயக்குநர்கள் பிரபு சாலமன், சீனு ராமசாமி என முக்கியமான இயக்குநர்கள் எனது தொலைபேசி எண்ணை வாங்கிப் பாராட்டிப் பேசினார்கள். அதுவே எனக்குப் பெரிய பாராட்டாக இருந்தது.

மலையாளம், தமிழ் இரண்டிலும் நடித்து வருகிறீர்கள். என்ன வித்தியாசத்தை உணர்கிறீர்கள்?

பணிபுரியும் விதத்தில் கண்டிப்பாக வித்தியாசம் உள்ளது. மலையாளத்தில் பொருட்செலவு குறைவு, தமிழில் அதிகம். நல்ல கதையாகப் புது இயக்குநர் கூறினாலும், நல்ல பொருட்செலவில் தமிழில் தயாராகிறது. மலையாளத்தில் 3 முதல் 4 மாதத்தில் அனைத்துப் பணிகளும் முடிந்து 6 மாதத்துக்குள் படம் வெளியாகிவிடும். தமிழில் அப்படியல்ல. ‘நெடுஞ்சாலை’, ‘ஜீரோ’ படங்கள் வெளியாக அவகாசம் எடுத்தன. ‘அதே கண்கள்’ படப்பணிகள் முடிந்து சீக்கிரமாக வெளியானதில் சந்தோஷமாக இருந்தது.

உங்களுடைய நடிப்புக்கு ஊக்குவிப்பாளர் யார்?

நிறைய பேர் என்னை ஊக்குவித்துள்ளார்கள். தமிழில் ரேவதி, சுஹாசினி, ஷோபனா, ஸ்ரீதேவி ஆகியோரின் நடிப்பை மிகவும் விரும்பிப் பார்ப்பேன். இப்போதுள்ள முன்னணி நடிகைகளில் நயன்தாராவின் நடிப்பு எனக்குப் பிடிக்கும். திரையிலும் சரி, வெளியிலும் சரி அவர் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளும் விதம் என்னை மிகவும் கவர்ந்துள்ளது. திரையுலகில் அறிமுகமாகும் போதிலிருந்து, தற்போது வரை அவருடைய வளர்ச்சியைப் பார்த்து “எப்படி இப்படி ஒருவர் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்கிறார்” என்று வியந்துள்ளேன். இப்படிப் பலர் இருக்கிறார்கள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x