Published : 06 Jun 2016 03:06 PM
Last Updated : 06 Jun 2016 03:06 PM

ரெனால்ட்ஸ் போனது, ரோரிடோ வந்தது!

பெரும்பாலான இளைஞர்களின் முதலாவது பேனா அனேகமாக ரெனால்ஸ்ட் பால் பாயின்ட் பேனாவாகத்தான் இருக்கும். வெள்ளை வெளேரென்ற உடல் பகுதியையும், நீல நிற மூடியையும் கொண்ட அந்த பேனாவின் அழகே தனி. பேனாவில் உள்ள இங்க், திடீரென்று வெளியேறி சட்டையை பாழ் பண்ணாது. கடைசி சொட்டு வரை தடையின்றி எழுதும் தன்மையே இந்தப் பேனா பலரது பாக்கெட்டுகளிலும் நிரந்தர இடம் பிடிக்கக் காரணமானது.

உங்களிடம் இருப்பது நீல நிற பேனாவா? அல்லது கருப்பா? பச்சையா? சிவப்பா? என்பதை எளிதாக உணர்த்திவிடும் அதன் மூடி. இதுவும் பேனாவின் சிறப்பம்சங்களில் ஒன்று.

ஆனால் இத்தகைய சிறப்பு மிக்க இந்தப் பேனா இனி இந்தியச் சந்தையில் கிடைக்காது. இந்தப் பேனாவை உற்பத்தி செய்து வந்த நிறுவனம் கடந்த மார்ச் மாதத்திலிருந்து உற்பத்தியை நிறுத்திவிட்டது.

பேனா தயாரிப்பில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பிரபலமாக விளங்கும் சென்னையைச் சேர்ந்த ஜிஎம் பென்ஸ் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இந்த பேனா உற்பத்தியை நிறுத்திவிட்டது. அமெரிக்காவைச் சேர்ந்த பேனா தயாரிப்பு நிறுவனமான ரெனால்ட்ஸ் நிறுவனத்தின் லைசென்ஸைப் பெற்று இந்தியச் சந்தையில் அவற்றை விற்பனை செய்து வந்தது ஜிஎம் பென்ஸ்.

பின்னணி

பிரெஞ்சு பெயரான ரெனால்ட்ஸ் எனும் பெயரை தங்கள் தயாரிப்புக்கு சூட்டி அதை சர்வதேச அளவில் பிரபலமாக்கியது அமெரிக்காவின் நியூவெல் ரப்பர்மெய்ட் நிறுவனம். இந்நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்து இந்தியாவில் ரெனால்ட்ஸ் பால் பாயின்ட் பேனா மற்றும் பார்க்கர் பேனாக்களைத் தயாரிப்பதற்கான லைசென்ஸைப் பெற்றது ஜிஎம் பென்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம்.

இந்தியாவில் விற்பனையாகும் பெரும்பாலான ரெனால்ட்ஸ் பேனாக் களின் வடிவமைப்பை உருவாக்கிய பெருமை ஜிஎம் பென்ஸ் நிறுவனத் தையே சாரும்.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பிரபலமாக விளங்கும் ரெனால்ட்ஸ் பேனா உற்பத்திக்கான லைசென்ஸை புதுப்பிக்கவில்லை.

அதேசமயம் சொந்தத் தயாரிப்பில் உருவான அந்த பேனாக்களுக்கு `ரோரிடோ’ என பெயரிட்டு விற்பனைக்கு விட்டுள்ளது ஜிஎம் பென்ஸ்.

என்ன காரணம்?

ரெனால்ட்ஸ் பேனாக்களை இந்தியா மற்றும் சார்க் நாடுகளில் மட்டுமே விற்பனை செய்ய முடியும் என்ற கட்டுப்பாட்டை அமெரிக்க நிறுவனம் விதித்திருந்தது. இதனால் பிற நாடுகளுக்கு தங்களது தயாரிப்பை ஏற்றுமதி செய்ய முடியாத நிலையில் ஜிஎம் பென்ஸ் இருந்தது.

சர்வதேச அளவில் தங்களது வர்த்தகத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கில் ரெனால்ட்ஸ் தயாரிப்பை நிறுத்திவிட்டதாகக் கூறுகிறார் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநர் இந்திரகுமார் மகேந்திரன்.

தற்போது, அமெரிக்க நிறுவனமோ ரெனால்ட்ஸ் பேனாக்களை தயாரித்து விற்பனை செய்துகொண்டே ரோரிடோ பிராண்ட் பேனாக்களையும் விற்பனை செய்யலாம் என கூறியது. ஆனால் ரோரிடோ பிராண்ட் தயாரிப்புகளை பிரபலப்படுத்த வேண்டுமானால் அதற்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும் என்பதாலேயே ரெனால்ட்ஸ் உற்பத் தியை நிறுத்திவிட்டதாக அவர் மேலும் கூறியுள்ளார். இருப்பினும் தொடர்ந்து ரெனால்ட்ஸ் நிறுவனம் பேச்சு நடத்தி வருவதாகவும் ரெனால்ட்ஸ் பேனாக்களை மீண்டும் உற்பத்தி செய்வது குறித்து இறுதி முடிவு செய்யவில்லை என்கிறார் அவர்.

பிறந்தது ரோரிடோ

சர்வதேச சந்தையில் நுழைவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட ரோரிடோ பேனாக்கள் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக செயல்படுவதாக இந்நிறு வனத்தைச் சேர்ந்தவர்களே தெரிவிக் கின்றனர்.

உற்பத்தியை அதிகரிக்க இந்நிறு வனம் திட்டமிட்டுள்ளது. அடுத்த 18 மாதங்களில் நாளொன்றுக்கு 38 லட்சம் பேனாக்களை உற்பத்தி செய்யும் வகையில் உற்பத்தி ஆலைகளை மேம்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தற்போது நாளொன்றுக்கு 30 லட்சம் பேனாக்கள் தயாராகின்றன.

இந்தியாவில் எழுதுபொருள் வர்த்தகச் சந்தை ரூ. 3,000 கோடியி லிருந்து ரூ. 3,400 கோடி வரை உள்ளது. இதில் 7 சதவீதம் முதல் 9 சதவீத வளர்ச்சி ஆண்டுதோறும் உள்ளது. இந்த சந்தையில் 17 சதவீதம் முதல் 18 சதவீதம் வரையிலான சந்தையைப் பிடித்து முன்னிலையில் திகழ்கிறது ஜிஎம் பென்ஸ். ரெனால்ட்ஸ் பேனாக்களுக்கு கடந்த 9 ஆண்டுகளாக விளம்பர தூதராக இருந்த சச்சின் டெண்டுல்கர், இனி ரோரிடோ பேனாவின் விளம்பர தூதராக தொடர்வார்.

உலகில் காகிதம் இருக்கும் வரை பேனாக்களின் தேவை இருந்து கொண்டுதானிருக்கும். ஜிஎம் நிறுவனத்தின் எதிர்காலத்தை ரோரிடோ எப்படி எழுதும்?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x