Last Updated : 25 Mar, 2014 02:02 PM

 

Published : 25 Mar 2014 02:02 PM
Last Updated : 25 Mar 2014 02:02 PM

பூமியைக் காக்க விளக்குகளை அணைப்போம்

உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் மின்சாரத்தை அணைத்து வைக்கும் எர்த் அவர் பிரசாரம், இந்த ஆண்டு மார்ச் 29ஆம் தேதி (சனிக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. இந்தப் பிரசாரத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வீடுகள், நிறுவனங்கள், வணிக வளாகங்களில் தேவையற்ற விளக்குகளை, மின்கருவிகளை இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை அணைத்து வைக்க வேண்டும். உலகில் நடக்கும் சுற்றுச்சூழல் பிரச்சாரங்களிலேயே மிகப் பெரியதாக இது கருதப்படுகிறது.

இப்படி ஒரு மணி நேரம் மின்சாரத்தை அணைத்து வைப்பதால், என்ன பெரிதாக மாறிவிடப் போகிறது என்ற கேள்வி எழலாம். இது ஓர் அடையாளப் பிரச்சாரம்தான். தேவையான நேரத்தில் தேவையான விளக்குகள், மின்விசிறிகள், மின்கருவிகளை மட்டும் பயன்படுத்தி, மற்ற நேரத்தில் அவற்றை அணைத்து வைக்கப் பழக்கப்படுத்த வேண்டும் என்பதே இந்தப் பிரச்சாரத்தின் அடிப்படை நோக்கம்.

ஒவ்வோர் ஆண்டும் மார்ச் கடைசி சனிக்கிழமை இந்தப் பிரசாரம் நடைபெறுகிறது. இரவில் நடத்தினால்தான் மின்சாரப் பயன்பாட்டைக் குறைப்பது வெளிப்படையாகத் தெரியும் என்பதால்தான், இந்தப் பிரசாரம் இரவில் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு தமிழகத்துக்கான பிரசாரத் தூதர் இசையமைப்பாளர் அனிருத். மரபுசாரா எரிசக்தி மூலம் மின் கருவிகளை இயக்க வேண்டும் என்பது, இந்த ஆண்டு பிரச்சாரத்தின் நோக்கம்.

இந்தப் பிரச்சாரத்தில் நீங்களும் பங்கேற்கலாம். இந்தப் பிரசாரத்தில் பங்கேற்குமாறு உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள், அக்கம்பக்கத்தினர், உடன் பணிபுரிபவர்கள் ஆகிய அனைவரிடமும் நாம் சொல்ல வேண்டிய செய்தி: மின்சாரத்தை அணைத்து வையுங்கள். புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாறுங்கள்.

தொடக்கம்

உலக இயற்கை நிதியம் (World Wide Fund for Nature) இந்தப் பிரச்சாரத்தை நடத்துகிறது. 2007ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் தொடங்கப்பட்ட இந்தப் பிரச்சாரம், உலகிலுள்ள 7000 நகரங்களில் நடைபெறுகிறது. உலகெங்கும் பல்வேறு நாடுகளில் உள்ள லட்சக்கணக்கான மக்கள், இதில் பங்கேற்கிறார்கள். புவி வெப்பமடைதலைக் குறைக்க மின்சாரப் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலேயே இந்தப் பிரச்சாரம் தொடங்கியது.

ஆரம்பத்தில் ஒரு மணி நேரம் மின்சாரத்தை அணைத்து வைக்கும் பிரசாரமாகத் தொடங்கிய இது, இந்த முறை “மாற்று எரிசக்திக்கு மாறுங்கள்” என்ற பிரச்சாரமாக வளர்ந்துள்ளது.

சூரியசக்தி, காற்றாலை, தாவர-உயிர்க்கழிவு எரிசக்தி, நீர்மின் சக்தி உள்ளிட்டவை புதுப்பிக்கத்தக்க அல்லது மாற்று எரிசக்திகள் எனப்படுகின்றன. இவை உலகம் உள்ளவரை உற்பத்தி செய்யக்கூடிய எரிசக்திகள். இவை சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதில்லை. இவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் பெட்ரோல், மின்சாரப் பயன்பாட்டுக்கான செலவும் குறையும்.

இந்தியாவில்...

2009 முதல் விளக்கை அணைக்கும் இந்த எர்த் அவர் பிரசாரம் இந்தியாவில் நடத்தப்பட்டு வருகிறது. முதல் ஆண்டு 58 நகரங்களில், 50 லட்சம் பேர் இந்தப் பிரசாரத்தில் பங்கேற்றனர். 2012இல் 150 நகரங்களுக்கு இந்தப் பிரச்சாரம் விரிவடைந்தது.

சச்சின் டெண்டுல்கர், வித்யா பாலன், ஆமிர் கான், அஜய் தேவ்கன், அபிஷேக் பச்சன் ஆகியோர் இதுவரை இதன் தேசியப் பிரச்சாரத் தூதர்களாகச் செயல்பட்டுள்ளனர்.

2011இல் குடியரசுத் தலைவர் மாளிகையிலும், நாடு முழுவதும் உள்ள 30 பாரம்பரியச் சின்னங்களிலும் விளக்குகள் அணைத்து வைக்கப்பட்டன. 2010இல் 120 பொது, தனியார் துறைகள் பங்கேற்றன. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மாணவர்கள் இந்தப் பிரச்சாரத்தில் பங்கேற்று வருகின்றனர்.

மறுமுகம்

ஒருபுறம் இப்படிப்பட்ட முயற்சிகள் அதிகரித்துவந்தாலும், மற்றொரு புறம் மின்சாரமே எட்டிப் பார்க்காத எளியோர் வீடுகளும், கிராமங்களும் நம் நாட்டில் லட்சக்கணக்கில் இருக்கின்றன என்பதையும் இந்த நேரத்தில் யோசிக்க வேண்டும். அவர் களுக்கு மின்சாரம் சென்று சேர்வதையும், இது போன்ற பிரச்சாரங்கள் வலியுறுத்த வேண்டும்.

எர்த் அவர் பிரச்சாரத்திலும் விளக்குகளுக்குப் பதிலாக மெழுகுவர்த்தி ஏற்றப்படுகிறது. ஆனால், இதிலும் எரிசக்தி செலவாகவே செய்கிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும். எந்த வகையான ஆற்றலையும் குறைவாகப் பயன்படுத்த வேண்டும் என்பதே இதுபோன்ற பிரச்சாரங்களின் நோக்கமாக இருக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x