Published : 10 Nov 2014 10:05 AM
Last Updated : 10 Nov 2014 10:05 AM

சாப்பிடுவதற்கு மட்டுமா மீன்கள்?

பனிச்சிகர உச்சி, குகை நீருற்று, அலைகடல், குளிர்ந்த. இருண்ட. அசைவற்ற ஆழ்கடல் என எல்லா நீர்நிலைகளிலும் மீன்கள் வாழ்கின்றன. எந்த உயிரினமும் வாழ இயலாத சாக்கடலில்தான் மீன்கள் இல்லை.

மீன் நானுாறு கோடி ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய உயிரினம்-அழகான வடிவம் கொண்ட நீருயிரி-உடலின் அமைப்புக்குப் பொருந்தாத சற்றுப் பெரிய கண்களோடு இருக்கும். உலகம் முழுவதும் விரும்பி உண்ணப்பட்டும் வளர்க்கப்பட்டும் வரும் சிற்றுயிரி.

மூளைக்கு வலிமை

மீன்களில் இருபதாயிரம் இனங்கள் உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.தாடை இல்லாதவை, தாடை உள்ளவை என அவை பிரிக்கப்பட்டுள்ளன. தாடை இல்லாத வகையில் வட்ட வாயுள்ள ஒரு பிரிவைத் தவிர மற்றவை எப்போதோ அழிந்து அற்றுவிட்டன. தாடை உள்ளவற்றில் குருத்தெலும்பு மீன்கள், எலும்பு மீன்கள் என இரு வகைகள் உள்ளன. சுறா, திருக்கை போன்றவை குருத்தெலும்பு மீன்கள்.கெண்டை, விரால் போன்றவை எலும்பு மீன்கள்.

மாமிசத்தைவிட மீன் உணவு எளிதில் செரிக்கக்கூடியது. மூளைக்கு வலிமை கொடுக்கும். புரதமும் நல்கொழுப்பும் வைட்டமின்கள் ஏ,டீ ஆகியவையும் உள்ளன. கால்சியம், சோடியம், அயோடின் போன்றவை உள்ளன. பால்சுறா போன்றவை நோயாளிகளுக்கும் பாலுாட்டும் தாய்மாருக்கும் சத்துணவாகக் கருதப்படுகிறது.

வேறொரு கோணம்

சாப்பிடுவதற்கு மட்டுமல்ல மீன்கள். மீன் முள், செதில் கொண்டு கோழித்தீவனம் மற்றும் உரம் தயாரிக்கப்படுகிறது. மீன் தசையிலிருந்தும், ஈரலில் இருந்தும் எடுக்கப்படும் மீன் எண்ணெய் மாரடைப்பைத் தடுக்கும் தடுப்பு மருந்தாகப் பயன்படுகிறது.

மீன் பஜ்ஜி, குழம்பு, வறுவல் போன்ற உணவுப்பொருள்கள் செய்யும்போது வெளியேற்றப்படும் கழிவுகளும் வீணாவதில்லை.அவற்றை அப்படியே மக்கவைத்து எருவாக்கி மீன் உரம் ஆக்குவர், மீன் எண்ணெய் தயாரிக்கும்போது கழிவாகக் கிடைக்கும் புண்ணாக்கு சிறந்த இயற்கை உரமாகும்.கார், ஹடாக், ஹேக்,போலக் ஆகிய மீன்களில் இருந்து, அவற்றின் தோல், எலும்பு, துடுப்புகளில் இருந்து தகுந்த முறையில் பக்குவப்படுத்தி “மீன் கோந்து” தயாரிப்பர்.

அது நல்லதொரு ஒட்டுப்பசையாகப் பயன்படுகிறது.கார்ப், கெளுத்தி, காட், ஹேக் மீன்களின் காற்றுப்பையின் உட்சுவர்களிலிருந்து ஐசிங் கிளாஸ் எனும் துாய ஜெலாட்டின் பொருள் பெறப்படுகிறது.வினிகர் போன்றவற்றைத் தெளிய வைக்கவும், சிலவகை சிமெண்ட் தயாரிப்பிலும் அது பயன்படுகிறது.ரஷ்யாவில் பல சிறப்பின ஸ்டர்ஜியன் மீன்களின் காற்றுப்பையிலிருந்து பெறும் ரஷ்ய ஐசிங் கிளாஸ் முதல் தரமானதாக உள்ளது.

சுறா,திருக்கை மீன்களின் தோல் பலவழிகளில் பயன்படுகிறது. முட்செதில்கள் அடர்ந்த தோலானது, தச்சர்கள், பெட்டிகள் செய்வோர், மரக்கட்டைகளைப் பளபளப்பு ஏற்ற பயன்படுகிறது. உலோக வேலைப் பொருட்கள் தயாரிப்போர்,பாலிஷ் ஏற்ற அந்தத் தோலைப் பயன்படுத்து கின்றனர்.நல்ல முறையில் தயாரித்து, சாயம், மெருகு ஏற்றிய மீன்தோல் “ஷக்ரீன்” எனப்படும்.

நகைப்பெட்டிகள், வாள்உறைகள் செய்ய அது உதவுகிறது.செதில்களை அகற்றி சிறப்பாகப் பதனிட்ட சுறா, திருக்கைகளின் தோல் நீடித்து உழைக்கும் வார் போல உதவுகிறது. உப்பிய பேத்தை மீனின் உலர்ந்த தோல் ஜப்பானில் விளக்கு செய்ய உதவுகிறது. ப்ளீக் வகை மீனின் செதில்களிலிருந்து சுரண்டியெடுத்த வெள்ளிநிறமிகளை, உட்குழிவான கண்ணாடி மணிகளில் பூசி, மெழுகால் நிரப்பி, செயற்கை முத்துக்கள், ஐரோப்பா கண்டத்தில் பரவலாகத் தயாரிக்கப்பட்டுப் பிரபலமாகி வருகின்றன.

தென்கடல் தீவுப் பழங்குடியினர் பேத்தை மீனின் (க்ளோப் ஃபிஷ்) முட்கள் நிறைந்த தோலைக் காயவைத்துப் போர்க்காலத் தலைக் கவசம் செய்கின்றனர்.காட், ப்ரீம் போன்ற எலும்பு மீன்களின் தோலிலிருந்து வார் தயாரித்து சித்திர வேலைப்பாடுகளுக்கு பயன்படுத்துகின்றனர். மீன் துாளின் கொழுப்புப் பகுதியை அகற்றி எஞ்சியதை உலர்த்திப் பெறும் சுத்தமான மீன் புரதம் மிகச்சிறந்த அறிவியல் பொருள். கேக்,ஐஸ்க்ரீம், விலை உயர்ந்த மருந்துகள் தயாரிப்பில் அது பயன்படுகிறது.அதில் மீன் வாடையே இருக்காது.

கரையக்கூடிய மீன்புரதம் வெள்ளை நிறம். மீன்தோல், கைப்பை, நகைப்பெட்டிகள் தயாரிக்க உதவுகிறது.இயற்கையிலேயே மீன்தோல் நெகிழ்வுத் தன்மை கொண்டது.

- தி.பாலகுமார்,
அரசு முஸ்லிம் மேனிலைப்பள்ளி, வேலூர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x