Last Updated : 30 May, 2017 10:40 AM

 

Published : 30 May 2017 10:40 AM
Last Updated : 30 May 2017 10:40 AM

ஆங்கிலம் அறிவோமே 162: ஒரு நிமிடம் கிடைக்காதா?

கேட்டாரே ஒரு கேள்வி

Bumpkin என்றால் மிகவும் பருமனானவரா?

சில வாரங்களுக்கு முன்னால், ‘போட்டியிலே கேட்டுவிட்டால்’ பகுதியில் “Dissatisfied என்பதுதான் சரியான வார்த்தை. Unsatisfied என்பதன் பொருள் வேறு, என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். இந்த இரு வார்த்தைகளுக்குமான வேறுபாடு என்ன என்பதையும் கூறுங்கள்” எனக் கேட்டிருக்கிறார் ஒரு வாசகர்.

இரண்டுமே satisfaction-க்கு எதிரானவை. என்றாலும் இருவேறு கோணங்களில் பயன்படுத்தப்படுகின்றன.

Dissatisfied என்றால் எதிலோ திருப்தியடையாமல் இருப்பது.

Unsatisfied என்றால் எதுவோ முழுமை பெறாமல் இருப்பது.

I am dissatisfied with his conduct என்றால் அவனது நடத்தை எனக்கு மகிழ்வை அளிக்கவில்லை. எனக்கு அதிருப்தியை அளிக்கிறது என்று அர்த்தம்.

ஒரு ஒப்பந்தம் unsatisfied நிலையில் உள்ளது என்றால் அதில் இன்னும் நிறைவேற்றப்பட வேண்டிய கட்டங்கள் மீதம் இருக்கின்றன என்று பொருள்.

Murali's mother was unsatisfied with the teacher's explanation of her son's injuries. இந்த வாக்கியம் உணர்த்துவது, ஆசிரியரின் விளக்கத்தில் சில முக்கிய விவரங்கள் காணப்படவில்லை என்ற சந்தேகம் முரளியின் அம்மாவுக்கு ஏற்பட்டுள்ளது.

Murali's mother was dissatisfied with the teacher's explanation of her son's injuries. இந்த வாக்கியம் உணர்த்துவது, ஆசிரியரின் விளக்கத்தில் பொய்கள் கலந்திருப்பதாக (அல்லது உண்மை மறைக்கப்படுவதாக) முரளியின் அம்மா எண்ணுகிறார்.

தோராயமாகச் சொல்வதென்றால் dissatisfied என்றால் அதிருப்தி அடைதல், unsatisfied என்றால் முழுமை அடையாமல் இருத்தல்.



Super, superb என்ற இரு வார்த்தைகளுக்கிடையே என்ன வித்தியாசம் என்று கேட்டிருக்கிறார் ஒரு வாசகர்.

Super என்பதை superior என்பதன் சுருக்கமாகக் கொள்ளலாம். அதாவது வேறு ஒன்றைவிட இது மேம்பட்டது என்று அர்த்தமே தவிர, அது தலைசிறந்ததாகத்தான் இருக்க வேண்டும் என்பதல்ல. மகிழ்வைக் குறிக்கவும் super பயன்படுத்தப்படுகிறது. Are you coming to the picnic? Super.

Superb என்பது super-ஐவிட super. அதாவது superb என்றால் excellent.

ரஜினி ரசிகர்கள் வருத்தப்பட வேண்டாம். நடைமுறையில் super என்பதை ‘வேறு யாரும் அடிச்சுக்க முடியாது’ என்ற பொருளிலும் பயன்படுத்துகிறார்கள். Superman!

Super nova என்பது ஒரு மிகப் பெரிய நட்சத்திரம். அது வெடிக்கும்போது ஒரு லட்சம் மடங்கு பிரகாசமாக அந்த இடம் இருக்கும்.

நடைமுறையில் Superb என்பதைப் பெரும்பாலும் எழுத்து வழக்கிலும், super என்பதைப் பேச்சு வழக்கிலும் குறிப்பிடுகிறோம் என்றும் சொல்லாம்.



Pumpkin என்றால் பூசணி. எனவே Bumpkin என்றால் பருமனானவர் என்ற முடிவுக்கு வந்துவிட்டார் ‘கேட்டாரே ஒரு கேள்வி’ வாசகர். ஆனால் அது சரியல்ல.

Bumpkin என்று குறிப்பிடப்படுபவர் கரடுமுரடானவர். நாசூக்கில்லாதவர். அதற்காக நல்லவராக இருக்கக் கூடாது என்பதல்ல. முந்தைய பல படங்களில் ராஜ்கிரண் ஏற்ற கதாபாத்திரம்போல என்று கூறலாமா?

Hobson’s choice என்றால் என்ன? எதனால் இந்தப் பெயர்?

நண்பரே, இது குறித்து இந்தத் தொடரின் தொடக்க அத்தியாயத்திலேயே எழுதியுள்ளேன். என்றாலும் அந்தப் பெயர்க் காரணத்தின் பின்னணியையும் சேர்த்து இங்கே பார்த்துவிடலாம்.

Hobson’s choice என்றால் சாய்ஸே இல்லை என்று அர்த்தம்!

அந்தக் காலத்தில் குதிரைகளை வாடகைக்கு விடுவதுண்டு. தேவைப்படுபவர்கள் அதுபோன்ற இடங்களுக்குச் சென்று தங்களுக்குப் பிடித்த குதிரைகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஆனால் 1600-களில் கேம்பிரிட்ஜ் பகுதியில் தாமஸ் ஹாப்ஸன் என்பவர் ஒரு குதிரை லாயத்தை நடத்திவந்தார். மிகப் பிரபலமான இந்த லாயத்தில் உள்ள தனது குதிரைகளை அவர் வாடகைக்குவிட்டார். ஆனால் ஒன்று. ஒரு குறிப்பிட்ட வரிசைக் கிரமத்தில்தான் அந்தக் குதிரைகளை வாடகைக்குவிடுவார். அப்போதுதான் எல்லாக் குதிரைகளுக்கும் சமமான வேலை (தேய்மானம்!) இருக்கும் என்பது அவர் எண்ணம்.

பிரபல ஆங்கிலக் கவிஞர் ஜான் மில்டன் தனது ஒரு கவிதையில் Hobson’s choice பற்றிக் குறிப்பிட்டார். “நீங்கள் உங்களுக்குப் பிடித்த குதிரையைத் தேர்ந்தெடுக்கலாம். அது லாயத்தின் கதவுக்கு மிக அருகிலுள்ள குதிரையாக இருந்தால்” என்பதுபோல. இது ஒருவித நகைச்சுவையான பாடல். மில்டன் குறிப்பிட்ட பிறகு Hobson’s choice பிரபலமடைந்துவிட்டது.



‘Give me a minute’ என்று ஒருவர் கேட்டால் அவர் எதை எதிர்பார்க்கிறார் என்று கூறுங்கள்.

“உங்களிடம் தினசரி இருக்கும் 24 மணி நேரத்தில் ஒரே ஒரு நிமிடத்தைத்தானே கேட்கிறார். கொடுங்களேன்” என்பது என் பதில் அல்ல (அது சாத்தியமும் அல்ல).

நீங்கள் எதையோ கேட்கிறீர்கள். அதற்கு அவர் பதில் கூறுவதற்குள் அவர் செல்போன் ஒலிக்கிறது அல்லது ஏதோ அவசர வேலை குறுக்கிடுகிறது என்ற நிலையில் அவர் ‘Give me a minute’ என்று கூறலாம். அதாவது உங்களுக்கு அவரால் உடனடியாகப் பதில் கூற முடியாது என்று பொருள்.

மூன்று பேர் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். அப்போது அவர்களில் ஒருவர் உங்களைப் பார்த்து “Could you just give us a minute?” என்று கேட்டால் அவரும் மற்றவரும் தனிமையில் ஏதோ பேச விருப்பப்படுகிறார்கள்.அதாவது உங்கள் முன்னிலையில் அதைப் பேசப் பிரியப்படவில்லை என்று பொருள். நீங்கள் அந்த இடத்தைவிட்டுக் கொஞ்சம் தள்ளிச் செல்ல வேண்டும் அல்லது அவர்கள் இருவரும் தள்ளிச் செல்வதை நீங்கள் தவறாக எண்ணக் கூடாது. இதுதான் அந்தக் கேள்விக்கான பொருள்.



போட்டியில் கேட்டுவிட்டால்?

Not only the leaders but also the ___________ of the party participated in the demonstration.

a) torchbearers

b) messiahs

c) rank and file

d) forerunner

e) majority

தலைவர்கள் மட்டுமல்ல வேறு ஏதோ பிரிவினரும்கூடப் பெருமளவில் இந்த எதிர்ப்பு ஊர்வலத்தில் கலந்து கொண்டார்கள் என்கிறது வாக்கியம்.

Torchbearers என்பது தலைவர்களைக் குறிக்கக்கூடிய வார்த்தை. Messiahs, forerunner ஆகியவை கூடத் தலைவர்களைக் குறிக்கும் சொற்கள்தான். எனவே வாக்கியத்தில் அவை பொருந்தவில்லை. “தலைவர்கள் மட்டுமல்ல, தலைவர்களும் கலந்து கொண்டார்கள்” என்று எழுதுவது அபத்தமானது அல்லவா!

தலைவர்களுடன் கட்சியின் பெரும்பாலானவர்களும் கலந்துகொண்டார்கள் என்றால் அர்த்தம்உண்டு. ஆனால் “தலைவர்கள் மட்டுமல்ல கட்சியின் பெரும்பாலானவர்களும் கலந்து கொண்டனர்” என்பது தவறு. எனவே majority என்பதும் இங்கு பொருத்தமாக இல்லை.

Rank and file என்ற வார்த்தைகள் தொண்டர்களைக் குறிக்கின்றன. இந்த வார்த்தைகள் வாக்கியத்தில் பொருத்தமாக அமைகின்றன. எனவே Not only leaders but also the rank and file of the party participated in the demonstration என்பதுதான் சரி.



சிப்ஸ்

# இந்த மனிதர்களே இப்படித்தான் என்பதை Men are all like என்று குறிப்பிடலாமா?

அது like அல்ல alike. மனிதர்களில் பெண்களை விடுவித்தது ஏனோ!

People are all alike.

# Danger என்பதற்கும், endanger என்பதற்கும் என்ன வேறுபாடு?

Danger என்பது ஆபத்து, noun. Endanger என்பது ஒருவித ஆபத்துக்கு உள்ளாக்குவது - verb. His foolishness endangers all our lives.

# As a last resort நான் ஒன்றைச் செய்கிறேன் என்றால் அதற்கு என்ன பொருள்?

வேறு வழியில்லாமல் நீங்கள் அதைச் செய்கிறீர்கள் என்று அர்த்தம்.

- தொடர்புக்கு - aruncharanya@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x