Published : 20 Mar 2014 12:00 AM
Last Updated : 20 Mar 2014 12:00 AM

குரூப்-4 தேர்வில் தேர்வானவர்களுக்கு கலந்தாய்வு 24-ல் தொடக்கம்: முதல்கட்டமாக 6 ஆயிரம் பேருக்கு அழைப்பு

குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் முதல்கட்டமாக 6 ஆயிரம் பேருக்கு கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு பணி வரும் 24-ம் தேதி (திங்கள்கிழமை) தொடங்குகிறது.

தேர்வில் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் எடுத்த சுமார் 12 லட்சம் பேரின் மதிப்பெண் விவரங்கள் அடங்கிய ரேங்க் பட்டியல், டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியானது. காலியிடங்களின் எண்ணிக்கை 5,853 ஆக அதிகரிக்கப்பட்டது.

கலந்தாய்வு அட்டவணை

தேர்வில் வெற்றி பெற்று கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவோரின் விவரம் ஏதும் வெளியிடப்படவில்லை. வழக்கமாக தேர்வு முடிவை வெளியிடும்போது, தேர்ச்சி பெற்றவர்களின் பதிவு எண்களை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுவிடும். இந்தமுறை அவ்வாறு தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியல் வெளியிடப்படாததால், தேர்வர்கள் குழப்பம் அடைந்தனர். இந்நிலையில் இளநிலை உதவியாளர், வரைவாளர், நில அளவர் ஆகிய பதவிகளுக்கான கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புக்கான பட்டியலை டி.என்.பி.எஸ்.சி. புதன்கிழமை வெளியிட்டது.

6,000 பேருக்கு அழைப்பு

அதன்படி, பொது தரவரிசையில் முதல் 6 ஆயிரம் இடங்களுக்குள் இடம்பெற்றிருப்பவர்கள் கலந்தாய்வுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கலந்தாய்வு, வரும் 24-ம் தேதி தொடங்குகிறது. 28-ம் தேதி வரை சிறப்புப் பிரிவினருக்கும் ஏப்ரல் 1 முதல் பொது தரவரிசையில் இடம்பெற்றிருப்பவர்களுக்கும் கலந்தாய்வு நடத்தப்படும்.

முதல் நாளில் கலந்தாய்வு, மறுநாள் சான்றிதழ் சரிபார்ப்பு என்ற வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு பணி மே 8-ம் தேதி முடிவடையும் என்று டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் மா.விஜயகுமார் அறிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x