Last Updated : 02 Jul, 2016 01:08 PM

Published : 02 Jul 2016 01:08 PM
Last Updated : 02 Jul 2016 01:08 PM

இன்னும் எத்தனை பலி கொடுக்கப் போகிறோம்?

’மிஷன் மதுக்கரை மகராஜ்’ என்ற பெயரில் மதுக்கரை மக்களின் கோரிக்கையை ஏற்று ஒற்றை யானையை உயிருடன் பிடிக்கப் போடப்பட்ட திட்டம், அந்த யானையின் மரணத்தில் முடிந்தது ஆர்வலர்கள் மட்டுமில்லாமல் மக்களையும் உலுக்கியிருக்கிறது. உண்மையில் வனத்துறையிடம் பிடிபட்ட கணத்திலேயே, அந்த யானை செத்துவிட்டது என்றே சொல்ல வேண்டும். எஞ்சிய காலம் முழுவதும் தன் குடும்பத்தைப் பிரிந்து ஏதோ ஒரு பாகன் கையில் அடிமையாய் இருப்பதைவிட, அந்த யானை இறந்ததே மேல் என்று எண்ணத் தோன்றுகிறது.

யானை இறந்ததற்கு மயக்க மருந்து அதிகமாகச் செலுத்தப்பட்டது ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. மயக்க மருந்து செலுத்தப்பட்டதற்குப் பின் மயக்கத்தினூடே 10 மணி நேரம் வரகளியாறு முகாமுக்குப் பயணித்து, சொந்தங்களைப் பிரிந்து, உணவு தண்ணீரின்றிக் கடும் உளைச்சலுக்கு ஆளான நிலையில் கொட்டிலில் அடைக்கப்பட்டிருக்கிறது.

பாதி மயக்கத்தில், என்ன செய்வதெனத் தெரியாத நிலையில், அலைக்கழிக்கப்பட்ட எரிச்சலும் சேர்ந்துகொள்ள இவற்றிலிருந்து மீள முயற்சித்துத் தன் மத்தளத்தால் (முன்தலை) முட்டி மோதியிருக்கிறது. அப்போது ஏற்பட்ட காயத்தால் மண்டையோட்டில் ரத்தம் உறைந்து மூளை மரணமடைந்திருப்பதாகத் தெரியவருகிறது. இந்த மரணம் நமக்குப் பல செய்திகளை அழுத்தந்திருத்தமாக உணர்த்தியிருக்கிறது.

மரணம் உணர்த்தும் சேதி

ஏன் யானைகள் காட்டை விட்டு வெளியே வருகின்றன? இன்று நாம் காடு என வரையறுத்து வைத்துள்ள இடமே மிகவும் ஒருதலைப்பட்சமானது. காட்டுயிர்கள் வாழ மிகவும் சொற்பமான பகுதியே ஒதுக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் காடு என்பது விலங்கு காட்சி சாலைபோல வேலியிடப்பட்ட கூண்டல்ல. உயிரினங்கள் காட்டை விட்டு வெளியே வருவது தப்பு என்ற பார்வை, அடிப்படையிலேயே தவறு. யானைகள் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது என்பதற்கும் அறிவியல்பூர்வமான சான்றுகள் இல்லை.

இந்தியா முழுவதுமே நன்கு பாதுகாக்கப்படும் காடுகள் வெறும் ஐந்து சதவீதம்தான். எஞ்சி உள்ள காடுகள் தொடர்ச்சியற்றும், சிறுசிறு துண்டுகளாகச் சின்னாபின்னப்படுத்தப்பட்டு வளமற்றும் உள்ளன. மனிதர்களால் பயிர் செய்ய முடியாத பாறைகளும் முகடுகளுமே காடு என்ற பெயரில் பெருமளவு எஞ்சியுள்ளன.

காட்டுயிர்கள் வாழ்வதற்குத் தோதான ஆற்றுப் படுகைகள், பள்ளத்தாக்குகள், ஆற்றோரங்கள், தடாகங்கள் போன்றவை ஆன்மிகவாதிகள், கல்வி வள்ளல்கள், கார்பரேட் நிறுவனங்கள், ரிசார்ட்கள், முள்வேலியிடப்பட்ட பெரும் விவசாய நிலங்கள் என ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அது மட்டுமின்றி காட்டை ஒட்டியுள்ள நீர்நிலைகளும் நாலாபுறமும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

கோடைக் காலத்தில் நீர்நிலைகள் வற்றும்போது, அந்த இடங்களில் நன்கு புல் வளர்ந்திருக்கும். வறட்சியான சூழலில் அங்கே மட்டுமே தீனியும் தண்ணீரும் கிடைக்கும். அதையும் ஆக்கிரமித்து குறுகிய கால வெள்ளாமை செய்வதாலும் ஆடு மாடுகளை மேய்ப்பதாலும் எந்நேரமும் மனித நடமாட்டம் இருந்துகொண்டே இருக்கிறது.

இதனால் கடும் கோடைக் காலத்தில் தாகத்தைத் தணித்துக்கொள்வதற்கே, காட்டுயிர்கள் பல மணி நேரம் காத்திருக்க நேரிடுகிறது. இப்படியாகக் காட்டை ஒட்டியுள்ள மேய்ச்சல் பகுதியும் அவற்றுக்கு மறுக்கப்படுகிறது. அவை உயிர்வாழ்வதற்கு அவசியமான முக்கிய இடங்களைப் பலவந்தமாக எடுத்துக்கொண்டு, வறண்டு கிடக்கும் பொட்டல் தரைகளை மட்டும் விட்டால் உணவுக்கும் தண்ணீருக்கும் அவை எங்கே செல்லும்?

எங்கே செல்லும் பாதை?

இந்தச் சூழலில்தான் காட்டுக்கு அருகில் பசுமையாகத் தெரியும் வெள்ளாமை செய்யப்பட்ட இடங்களை நாடி யானைகள் வருகின்றன. ஏற்கெனவே கடன் வாங்கி விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு, இது பெரும் இடைஞ்சலாகிவிடுகிறது. காட்டுயிர்களால் ஏற்படும் பயிரிழப்புக்கான நஷ்டஈட்டை உரிய அளவில் அவ்வப்போதுப் பட்டுவாடா செய்துவந்தால், விவசாயிகள் அமைதி காப்பார்கள்.

இதில் ஏற்படும் அலைக்கழிப்பாலும் தாமதத்தாலும் உருவாகும் எரிச்சலை, காட்டுயிர்கள் மீதே அவர்கள் காட்டுகின்றனர். இதனால்தான் ‘உங்கள் விலங்கைக் காட்டுக்குள்ளேயே வைத்துக்கொள்ளுங்கள்' என்று வனத்துறையினரிடம் விவசாயிகள் கூச்சலிடுகின்றனர்.

நிர்ப்பந்தம் காரணமாகக் காட்டை விட்டு யானைகள் வெளியே வந்தாலும், தங்களுக்குப் பாதுகாப்பு காடுதான் என்று அவை திரும்பிச் செல்ல நினைக்கும்போது, அது முடிவதில்லை. காரணம் ரியல் எஸ்டேட், ரிசார்ட், சுரங்கம் தோண்டும்போது வெடிக்கும் வெடி, மணல் குவாரிகள், செங்கல் சூளைகள், மின்வேலிகள், முள் கம்பிவேலிகள், பார்வையைக் கூசச் செய்யும் மின்விளக்கு போன்றவற்றால் திரும்பிச் செல்வதற்கான வலசைப் பாதை தெரியாமல் ‘கண்ணைக் கட்டி நாட்டில் விட்டதைப் போல’ அவை திக்குமுக்காடுகின்றன.

திக்குமுக்காடும் வனத்துறை

வனத்துறையினருக்கு யானைகளைச் சமாளிப்பது பெரிய சவாலாக உள்ளது. பொதுவாக ஊருக்குள் புகுந்த காட்டு யானைகளை விரட்டுவதற்குத் தற்காலிகத் தீர்வாக வெடி வெடித்துக் காட்டுக்கு விரட்டும் மேலோட்டமான செயல்களை அவர்கள் மேற்கொள்கிறார்கள்.

மனித - யானை எதிர்கொள்ளலைத் தவிர்க்கப் பல்வேறு வழிவகைகளை ஆராய்ச்சியாளர்கள் முன்வைத்தாலும் மக்களின் மனநிலையைத் திருப்திப்படுத்தும் வகையிலும் ஆட்சியாளர்களைத் திருப்திப்படுத்தும் செயல்பாடுகளையும் முன்னெடுக்கவே பெரும்பாலான அதிகாரிகள் முயற்சிக்கின்றனர்.

அகழி வெட்டுதல், சூரியசக்தி மின்வேலி அமைத்தல், தொட்டி கட்டித் தண்ணீர் ஊற்றுதல், தீவனப்புல் வளர்த்தல், சாலையைக் கடக்க மேம்பாலம் அமைத்தல் போன்ற மேலோட்டமான தீர்வுகளையே பொதுவாகச் செயல்படுத்த விரும்புகின்றனர். இவற்றால் யானைகளுக்கு அல்ல, மனிதர்களுக்கு மட்டுமே ஆதாயம் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

வருங்காலத்தில் மக்கள்தொகை மேலும் அதிகரிக்கும். அதற்கேற்ப ஆக்கிரமிப்பும் அதிகரிக்கும். எனவே, பிரச்சினைக்குரிய யானைகளைப் பிடிப்பதை மட்டும் இலக்காகக் கொண்டு செயல்படாமல், யானைகளுக்கும் மனிதர்களுக்குமான பிணக்கை எதிர்காலத்தில் எப்படித் தடுப்பது; யானைகளுடன் இணக்கமாக வாழ்வதற்காக மனிதர்களை எப்படித் தயார்படுத்துவது என்பது போன்ற திட்டங்களைப் பற்றி சிந்திக்க வேண்டிய நேரம் இது. ஏனென்றால் யானைகளே காட்டின் ஆதார உயிரினம். காட்டில் யானைகள் இருந்தால் குடிநீர் முதற்கொண்டு பல இயற்கை வளங்கள் மனிதர்களுக்குத் தொடர்ச்சியாகக் கிடைக்கும். நிலைமை கைமீறுவதற்கு முன் ஊர்கூடித் தேர் இழுக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்?

என்ன செய்ய வேண்டும்?

# யானைகள் வெளியேறும் பகுதிகள், மனிதர்களுடன் பிணக்கு நேரும் இடங்களை அடையாளம் கண்டு தொடர் கண்காணிப்புக்கு உட்படுத்துவதோடு நீண்டகால ஆராய்ச்சியையும் மேற்கொள்ள வேண்டும்.

# யானை மனித எதிர்கொள்ளலில் வனத்துறையினருடன் வருவாய்த் துறை, பொதுப்பணித் துறை, விவசாயத் துறை, காவல் துறை கைகோக்க வேண்டும்.

# ஆற்றோரக் காடுகள் என்ற அற்புதமான சூழலியல் மண்டலத்தை முற்றிலும் அழித்துவிட்டோம். ஆயிரம் ஏக்கர் வளமற்ற காட்டுப் பகுதியைவிட, சில நூறு ஏக்கர் வளமான ஆற்றுப்படுகைகள் #

வனத்துறையில் உள்ள ஆற்றல்மிகு அலுவலர்கள் மூலம் ஆற்றோரங்களிலும் நீர்நிலைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிக் காட்டுயிர்கள் சுதந்திரமாக வாழ வழி செய்ய வேண்டும்.

# சிதறுண்ட காட்டுப் பகுதிகளை இணைக்கும் நடவடிக்கைகளை அவசரகால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.

# வருவாய்த் துறையினரிடம் உள்ள வளமான இடங்களைக் கண்டறிந்து, அவை தனியார் கைகளிலும், கல்குவாரித் தொழிலுக்காகவும் சிக்காமல் சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்த வேண்டும்.

# ஒப்பந்தம் காலாவதியான, லாபம் தராத தேயிலை, காபி தோட்டங்களை அழித்துவிட்டு மறுபடியும் காடாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

# யானைகள் மேயாத மாற்றுப் பயிர் என்ன, அதை வளர்த்தால் விவசாயிகளுக்கு வருவாய் கிடைக்குமா என்பதை வேளாண் துறை ஆய்வு செய்ய வேண்டும்.

# யானைகளின் மரபார்ந்த வழித்தடத்தில் புதிதாக முள் கம்பிவேலி அமைப்பதைத் தடுப்பதோடு, ஏற்கெனவே உள்ளதை அகற்றவும் நடவடிக்கை தேவை. அவற்றின் வலசைப் பாதைகளை மீட்டெடுக்க வேண்டும். மலைப்பகுதி பாதுகாப்புக் குழுமத்தையும் திறம்படச் செயல்படுத்த வேண்டும்

# யானைகளைக் காட்டுக்குள் விரட்டும் நடவடிக்கையில் உதவிசெய்கிறேன் பேர்வழி என்று மக்களும், படம் எடுப்பவர்களும் வனத்துறையினருக்கு இடைஞ்சல் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

பெரிய மனம் படைத்தவை

பழங்குடிகள் யானையைப் பற்றி சொல்லும்போது ‘பெரியவர் அந்தப் பக்கம் இருக்கிறார். கவனமாகச் செல்லுங்கள்’என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். யானையால் தாக்கப்பட்டு இறந்த தன் உறவினரை ‘அவர் கஜமோட்சம் அடைந்துவிட்டார்', ‘சாமி கூப்பிட்டுக்குச்சு' என்று அவர்களுக்குள் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். இப்படிப்பட்ட மக்கள் அதிகம் வாழ்வதாலும் வனத்துறையினரின் கட்டுப்பாட்டாலும்தான் இன்றும் முதுமலையை ஒட்டியுள்ள காட்டுப் பகுதியில் ஆசியாவிலேயே நல்ல எண்ணிக்கையில் யானைகள் வாழ்ந்துவருகின்றன.

இந்தப் பெருமையைத் தக்க வைத்துக் கொள்ளும் பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கிறது, யானைகள் ‘பெரிய மனம் படைத்த கனவான்கள்’ என்பதில் சந்தேகமில்லை. ஒரு திருத்தத்துடன் - அவை தொந்தரவு செய்யப்படாதவரை என்பதையும் சேர்த்துப் புரிந்துகொண்டால் மனிதர்களுக்கு மட்டுமல்ல, இந்தப் பூமிக்கும் நல்லது.

என்ன நடந்தது?

மனிதர்கள் யானை எதிர்கொள்ளல் பிரச்சினையில் ஊடகத் துறையினரின் ஆக்கப் பூர்வமான பங்கு மிக அவசியம். பின்வரும் சம்பவம், அந்த முக்கியத்துவத்தை உணர்த்தும். ஒருமுறை தலமலையிலிருந்து அருள்வாடிக்கு இருசக்கர வாகனத்தில் பயணிக்க நேர்ந்தது. வழியில் சாலை ஓரத்தில் ஒரு ஒற்றை யானை மேய்ந்துகொண்டிருந்தது.

அது நிற்பது உறைத்தவுடன் போகலாமா, வேண்டாமா என்று ஒரு கணம் யோசித்தேன். என்னைப் பார்த்துவிட்டுத் தன் உடம்பைத் திருப்பிக்கொண்டு, அது மேய ஆரம்பித்தது. அதன் செய்கை, ‘நீ உன் வழியில் போக வேண்டியதுதானே’ என்று சொல்வதைப் போலிருந்தது. அதை உணர்ந்து படபடப்புடன் அந்த இடத்தை விருட்டென்று கடந்தேன். இரண்டு கிலோமீட்டர் தள்ளி வந்து வண்டியை நிறுத்திப் புள்ளினங்களைப் பார்த்து, என்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டேன்.

என்னைப் போலவே பொரிகடலை வியாபாரி, உர மூட்டை எடுத்துவந்த ஒரு விவசாயி, பால்காரர், எண்ணெய் வியாபாரி என நான்கு பேர் அந்த அரை மணி நேரத்தில், அந்த இடத்தைக் கடந்து சென்றுள்ளனர். யாருக்கும் எந்தத் தீங்கும் நேரவில்லை.

அடுத்த நாள் டீக்கடையில் நாளிதழைப் புரட்டிக் கொண்டிருந்தபோது ‘துரத்தியது காட்டு யானை’ என்ற தலைப்பில் தாளவாடியில் சுற்றித் திரியும் ஒற்றை யானையால் பொதுமக்கள் பீதி என்று, பலரும் அமைதியாகக் கடந்து சென்றிருந்த அதே யானையைப் பற்றி ஒரு செய்தி வந்திருந்தது.

இதைப் படித்ததும் ‘ஒண்ட வந்த பிடாரி, ஊர்ப் பிடாரியை விரட்டியதைப் போல' என்ற பழமொழிதான் நினைவுக்கு வந்தது. அவற்றின் வாழிடத்தை நாம் அபகரித்துக்கொண்டு, அவை ஊருக்குள் புகுந்துவிட்டன எனக் கூப்பாடு போடுகிறோம். இதுபோன்ற திசைதிருப்பும் செய்திகள் உயிரினங்களைப் பற்றி ‘தேவையற்ற எதிரி அவை’ என்ற உணர்வைக் கட்டியெழுப்பிவிடும். இதுபோன்ற புரிதலற்ற செய்திகள் பிரச்சினையை இன்னும் மோசமடையவே செய்யும்.

கட்டுரையாளர், காட்டுயிர் செயல்பாட்டாளர்

தொடர்புக்கு: arulagamindia@gmail.com

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x