Last Updated : 02 May, 2017 10:20 AM

 

Published : 02 May 2017 10:20 AM
Last Updated : 02 May 2017 10:20 AM

யூ.பி.எஸ்.சி. நேர்முகத் தேர்வு: தமிழிலேயே பேச விருப்பமா?

யூ.பி.எஸ்.சி. தேர்வுக்கான விருப்பப் பாடப் பட்டியலில் ஏகப்பட்ட பாடப் பிரிவுகள் இருந்தாலும் பெரும்பாலோர் தேர்ந்தெடுப்பது அரசியல் அறிவியல், இந்தியப் பொருளாதாரம், வரலாறு, பொது நிர்வாகம் ஆகிய பாடப்பிரிவுகளைத்தான். எழுத்துத் தேர்வில் இந்தப் பாடங்களில் நல்ல மதிப்பெண் பெற்றாலும் நேர்முகத் தேர்வில் கூடுதல் கவனம் எடுத்து அதற்காகத் தயாராக வேண்டியது அவசியம். குறிப்பாக அரசியல் அறிவியலில் நிறைய கேள்விகள் அண்மை நிகழ்வுகளைப் பொருத்தே கேட்கப்படும் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

அரசியல் அறிவியலைத் தேர்ந்தெடுத்தவர்களுக்கு:

1. அடிப்படை உரிமைகளில் முதன்மையானது எது? ஏன்?

புதிதாக அடிப்படை உரிமைகளில் சேர்க்கப்பட்ட உரிமை எது?

2. லோக்பால் சட்டம் இன்னும் நடைமுறைக்கு வராதது குறித்து உங்களுடைய கருத்து என்ன?

3. நீதித் துறையில் நீதிபதிகள் நியமன முறையில் எத்தகைய சீர்திருத்தங்கள் தேவை?

4. தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் பதவிக்காலம் முடிந்த பின்னர், அம்மாநில நிர்வாகத்தில் ஆளுநரின் அதிகாரங்கள் என்ன?

5. இந்தியத் தேர்தல் ஆணையம், தேசிய மனித உரிமை ஆணையம் ஆகிய இரண்டு அமைப்புகளும் சுய அதிகாரம் பெற்றவையா? விளக்குக.

6. நதி நீர் பங்கீடு தொடர்பாக மத்திய மாநில உறவுகள் பாதிக்கப்படாமல் இருக்க அரசியல் சாசன சட்டப் பூர்வத் தீர்வுகள் ஏதும் உண்டா?

7. பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் குற்றங்களும் அதிகரிப்பதைத் தடுக்கச் சட்டத் திருத்தம், காவல் துறையில் புதிய பிரிவுகள் ஏதும் தேவையா?

இப்படி ஒவ்வொரு துறையைச் சம்பந்தப்பட்ட கேள்விகளும் உட்கேள்விகளுடன் கேட்கப்படும். ஆக, நீங்கள் தேர்ந்தெடுக்கும் பாடப் பிரிவுகளைப் புரிந்துணர்வோடு படிப்பது அத்தியாவசியம்.

கைகொடுக்கும் மொழிபெயர்ப்பாளர்

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு யூ.பி.எஸ்.சி. தேர்வு குறித்த பெரும்பயத்தில் ஒன்று எப்படி நேர்முகத் தேர்வை எதிர்கொள்வது என்பதாகும். இதற்கு நிச்சயம் வழி உள்ளது. தாய்மொழியில் பதிலளிக்க உதவும் தேர்வாணைய நடைமுறைகளை இப்போது தெரிந்துகொள்வோம்.

1. பிரதானத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போதே நேர்காணலில் தமிழில் பங்கேற்க விருப்பம் என்பதைத் தெரிவிக்க வேண்டும்.

2. நீங்கள் தமிழில் கூறும் விடையை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க ஒரு மொழிபெயர்ப்பாளர் நேர்காணல் அறையில் உங்கள் அருகில் அமர்த்தப்படுவார்.

3. தேர்வாணைய உறுப்பினர்கள் விரும்பினால் ஆங்கிலத்தில் பேசவும் நீங்கள் தயாராக இருக்க வேண்டும்.

4. ஒருவேளை நீங்கள் சரியான விடையைக் கூறி அதனை மொழிபெயர்ப்பாளர் தவறாக எடுத்துரைக்க நேர்ந்தால் தேர்வாணையர் அனுமதியுடன் நீங்கள் சரியான விடையை அளிக்கலாம்.

இதை மட்டும் செய்ய வேண்டாம்!

# எல்லாவற்றுக்கும் மேலாக விடையளிக்கும்போது செய்யக்கூடாத தவறுகளைக் காண்போம்.

# தெரியாத கேள்விகளுக்கு தவறான விடை அல்லது ஊகித்துப் பதில் சொல்லுவது.

# அரசியல் சாசனத்துக்கு எதிரான கருத்துகளைப் பகிரங்கமாகக் கூறுவது. (நிர்வாகத்தைச் சீர் செய்யத்தான் இப்பணிக்கு நீங்கள் அழைக்கப்படுகிறீர்களே தவிரக் குற்றம் சொல்ல அல்ல என்பதை மனதில் நிறுத்துவது அவசியம்.)

# எனக்கு எல்லாம் தெரியும் என்கிற மனநிலையில் தேர்வாளர்களிடம் எதிர்வாதம் செய்வது.

# சைகையில் பதிலளிப்பது.

நேர்முகத் தேர்வுக்காக வாசிக்க வேண்டியவை

1. இந்தியப் பொருளாதார ஆய்வு (Indian Economic Survey 2016-17)

2. இந்தியா இயர் புக் (India Year Book 2017)

3. மனோரமா இயர் புத்தகம் (இந்தியா குறித்த தகவல்களை ஆழ்ந்து படிக்க வேண்டும். தமிழகத்துக்குக் கூடுதல் முக்கியத்துவம் அளித்துத் தயாராக வேண்டும்.)

4. சமீபத்தில் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட முக்கிய கமிட்டிகளின் பரிந்துரைகள்.

5. சென்சஸ் 2011 (தகவல் மற்றும் பகுப்பாய்வு)

6. மத்தியப் பட்ஜெட் மற்றும் அது குறித்த முக்கியத் தகவல்கள்

7. இந்தியா கையெழுத்திட்ட முக்கிய சர்வ தேச ஒப்பந்தங்கள். (Bilateral and International Accords)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x