Published : 07 Oct 2014 12:48 PM
Last Updated : 07 Oct 2014 12:48 PM

தவளைகள் பாடிய தாலாட்டு

மழைக்காடு என்றுமே தூங்குவதில்லை. மழைக்காட்டு பகல் பறவைகளின் இசையாலும், சிள்வண்டுகளின் இரைச்சலாலும் நிரம்பியிருக்கும். மாலை வேளையில் சற்று ஓய்வெடுத்த பின், மீண்டும் இரவில் மழைக்காடு உயிர்த்தெழுவது தவளைப் பாட்டுக் கச்சேரியால்தான். மழைக்காட்டுக்குள், குறிப்பாக மழைக்காலங்களில் இந்த ஜுகல்பந்தியை நிச்சயமாகக் கேட்கலாம்.

மேற்குத் தொடர்ச்சி மலையில் இருக்கும் ஒரு காட்டுப் பாதை வழியே ஒரு மழைக்கால மாலை வேளையில் தனியே பயணம் செய்யும் நிலை ஏற்பட்டது. வேலைக்காக என்பதால் தவிர்க்க முடியவில்லை. சுமார் 50 கி.மீ. காட்டுப் பகுதி, ஏற்றமும் இறக்கமும், வளைவுகளும் நெளிவுகளும் நிறைந்த பாதை அது. பலவகையான வாழிடங்களைத் தாண்டிப் போகவேண்டும்.

பொதுவாகக் காட்டுப் பாதையில் ஜீப்பில் பயணிப்பது என்றால், வேகமாகச் செல்வதில்லை. ஏதாவது காட்டுயிர் சாலையைக் கடக்கலாம். மாலையிலும் இரவிலும் சற்றுக் கவனமாகவே வண்டியை ஓட்ட வேண்டும்.

பஞ்சுருட்டானும் கரிச்சானும்

அந்திமாலைப் பொழுது. சூரியனும் உயிரினங்களும் அடையும் வேளையாதலால், பலவிதப் பறவைகளின் குரல்கள் கலவையாகக் காதுகளை வந்தடைந்து கொண்டிருந்தன. காட்டை ஊடறுத்துச் சென்றுகொண்டிருந்த தந்திக் கம்பிகளில் செந்தலைப் பஞ்சுருட்டான் கூட்டம் ஒன்று கத்தி கொண்டிருந்தது. அவ்வப்போதுக் காற்றில் மேலெழுந்து பறந்து கொண்டிருந்த பூச்சிகளைப் பிடித்துவிட்டு, பிறகு மீண்டும் கம்பியில் அமர்ந்தன. தலையை இப்படியும் அப்படியும் ஆட்டி ஆட்டிப் பிடித்த பூச்சியை உயிரிழக்க வைத்து, தான் தின்னமுடியாத பாகங்களை விலக்கிக் கொண்டிருந்தன.

துடுப்புவால் கரிச்சான்கள் இரண்டு அங்குமிங்கும் பறந்து பூச்சிகளைப் பிடித்துக் கொண்டிருந்தன. பறக்கும்போது கூடவே குஞ்சம் போன்ற வால் சிறகும், அவற்றைப் பின்தொடர்ந்ததைப் பார்க்கும் போது வேடிக்கையாகத்தான் இருந்தது. அருகிலிருந்த மரக்கிளையில் அமர்ந்து வாலை வெடுக் வெடுக்கென ஆட்டிக்கொண்டு பிடித்த பூச்சியை விழுங்கிக் கொண்டி ருந்தன. இருநோக்கியில் பார்த்தபோது மேல் நோக்கிப் பறந்துகொண்டிருந்த அப்பூச்சிகள், ஈசல்கள் என்பது தெரிந்தது.

சாலையும் காட்டுயிர்களும்

கரிய மேகங்கள் வானில் சூழ ஆரம்பித்தன. நேரமின்மையால் வண்டியை மெல்ல மெல்ல நகர்த்தினேன். மரக்கிளைகளால் வேயப்பட்ட கூரையைக் கொண்ட காட்டுப் பாதை என்பதால் விளக்கைப் போட்டுக்கொண்டு செல்ல வேண்டியிருந்தது. பலவகையான தகரைச் செடிகள் (பெரணிகள் - Ferns) சாலையோரத்தை அலங்கரித்திருந்தன. இயற்கையாக வளர்ந்த இந்தக் காட்டுத் தாவரங்களை எந்தக் கோணத்தில் பார்த்தாலும் அழகுதான்.

குண்டும் குழியுமாக இருந்தது அந்தச் சாலை. காட்டுச் சாலை அப்படித்தான் இருக்க வேண்டும். காட்டில் சாலைகள் இருப்பதே காட்டுயிர்களுக்கும், வாழிடங்களுக்கும் கேடுதான். நமக்கு சாலைகள் அவசியம், ஆனால் இயற்கையான வாழிடத்தின் வழியே செல்லும் சாலைகள் அங்குள்ள காட்டுயிர்களுக்கு மேலும் தொந்தரவு கொடுக்காத வகையில் இருக்க வேண்டும். செப்பனிடப்படாத, அகலப்படுத்தப்படாத சாலையும் காட்டுயிர்களுக்குப் பல வகையில் நன்மை பயக்கும்.

புது அனுபவம்

இதையெல்லாம் யோசித்தவாறே ஒன்று அல்லது இரண்டாம் கியரில் வண்டியை நகர்த்திக்கொண்டே சென்றேன். மதிய வேளையில் மழை பெய்திருக்க வேண்டும். சாலையெங்கும் ஈரமாகவும், ஓரங்கள் சகதி நிறைந்தும் இருந்தது. முற்றிலுமாக இருட்டிவிட்டிருந்தது. அப்போதுதான் உணர்ந்தேன். பறவைகளின் ஒலி முற்றிலுமாக நின்றுபோய், தவளைகளின் ஒலி கேட்க ஆரம்பித்ததை.

அவற்றின் குரலும் பல வகைகளில் இருந்தது. சில தவளைகளின் குரலை வைத்தே தவளை ஆராய்ச்சியாளர்கள் அது இன்ன வகைத் தவளை எனச் சொல்லி விடுவார்கள். வழி நெடுகத் தவளைகளின் பாட்டை கேட்டுக்கொண்டே, இரவில் தனியாக, வேறு வாகனங்கள் ஏதும் அதிகம் வராத காட்டுப் பாதையில் பயணம் செய்வது ஒரு புது வித அனுபவம்தான்.

சட்டென ஓர் எண்ணம் உதித்தது. கொஞ்ச நேரம் தவளைகளின் குரல்களைக் கேட்டுவிட்டுச் சென்றால் என்ன எனத் தோன்றியது. வண்டியை ஓரமாக நிறுத்தி கேட்க ஆரம்பித்தேன்.

தவளை இசை

இடைவெளியில்லாத டிக்.. டிக்.. டிக்..

சற்று நிதானமான இடைவெளியுடைய டக்..டக்..டக்..

மெல்ல ஆரம்பித்துப் பின் இடைவிடாமல் உச்சஸ்தாயியை அடையும்...டொக்.. ...டொக்.....டொக்.....டொக்.....டொக்.....டொக்....டொக்..

ஒரே ஒரு முறை குரலெழுப்பிப் பின் சில நிமிடங்கள் அமைதியடையும்..க்ராக்கக்கக்.

இன்னுமொரு குரலொலி கேட்டது.

சரியாக மூடாத குழாயிலிருந்து நிரம்பிய வாளியில் மெல்லச் சொட்டும் நீரின் ஒலியைப் போன்ற, தகுந்த இடைவெளியுடனான டப்.........டப்.........டப்.........

இதே ஒலியை இதற்கு முன் கேட்டதுண்டு. மரத்தின் உச்சியிலிருந்து வரும் இந்தக் குரல் ‘நீர்த்துளித் தவளை'க்குச் சொந்தமானது. ஆங்கிலத்தில் இதை water drop frog என்பார்கள்.

விநோதப் பை

நிச்சயமாக ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை. இவையனைத்தும் புதர் தவளைகள் (Bush frogs) இனத்தைச் சேர்ந்தவை. நான் கேட்டுக்கொண்டிருந்தது அனைத்துமே ஆண் தவளைகளின் குரல்கள். ஆம், தமது இணையக் கவரவே அவை அப்படிக் குரலெழுப்புகின்றன. இந்த ஆண் புதர் தவளைகளை எளிதில் பார்ப்பது சிரமம்.

ஆனால் பார்த்துவிட்டால், அதுவும் அவை குரலெழுப்பும்போது பார்த்தால், அவை நம்மை வியப்பில் ஆழ்த்தும். இத்தவளைகளின் மெல்லிய தோலுள்ள கீழ்த்தாடை அவை ஒலியெழுப்பும்போது பலூன் போல உப்பி, மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பும். எழுப்பும் ஒலியை வெகுதொலைவு கொண்டு செல்லவே, இவற்றின் கீழ்த்தாடை ஒரு ஒலிபெருக்கியைப் போலச் செயல்படுகிறது.

கையில் டார்ச் இருந்தாலும், இவை இருக்குமிடத்தை கண்டறிவதில் ஆர்வமின்றிச் சிறிது நேரம் கண்களை மூடி அவற்றின் குரலொலியில் லயித்திருந்தேன்.

டிக்..டிக்..டிக்....டப்....டக்..டக்..டக்....டப்....டொக்...டொக்...டொக்...டொக்...டப்....க்ராக்கக்கக்...டிக்..டிக்..டிக்....டப்....டக்..டக்..டக்....டப்....டொக்...டொக்...டொக்........டொக்......க்ராக்கக்கக்....டிக்..டிக்..டிக்....டப்....டக்..டக்..டக்....டப்....டொக்.......டொக்... டொக்....க்ராக்கக்கக்......

கலைந்தது தியானம்

இரவில் தவளைகள் பாடிய அந்தத் தாலாட்டைக் கண் மூடி கேட்டுக் கொண்டிருக்கும் போதே ‘ட்டப்...' என்று ஒரு மழைத்துளி எனது நெற்றியில் விழுந்து தெறித்து, அந்தக் கண நேர இன்பத்தைக் கலைத்தது. சற்று நேரத்தில் இலேசான தூறல் போட ஆரம்பித்தது. இன்னும் வெகுதூரம் பயணிக்க வேண்டியிருந்ததால், அங்கிருந்து புறப்பட்டேன்.

வண்டியின் முன் சில அடிகள் மட்டுமே தெரியும் அளவுக்குச் சாலை முழுவதுமாகப் பனிபடர்ந்து விட்டது. இருளில் விளக்கு வெளிச்சத்தில் மெல்ல வண்டியை ஓட்டிக்கொண்டு, சிறிய குடியிருப்புப் பகுதியைக் கடந்து சென்றேன். அந்தப் பகுதியில் சாலை ஒரே சீராக இருந்தது. மழை நின்றிருந்ததால், சாலை தெளிவாகத் தெரிந்தது.

திடீரெனச் சாலையின் ஒரு பக்கத்திலிருந்து தவளை ஒன்று குதித்து வண்டியை நோக்கி வருவது தெரிந்தது. வண்டியின் விளக்கினால் கவரப்பட்டு வரும் பூச்சிகளைப் பிடிப்பதற்காகவோ, என்னவோ பல வேளைகளில் இந்தத் தவளைகள் வண்டியை நோக்கி வருவதுண்டு. பல சக்கரங்களில் அரைபட்டு சாவதும் உண்டு. வண்டியை வளைத்து நெளித்து ஓட்டி வழியில் வந்த பல தவளைகளை அரைத்துவிடாமல், கடந்து சென்று கொண்டிருந்தேன்.

ஒரு முடிவு

மலைப்பாதை கீழிறங்கிக் காட்டுச் சாலை முடிந்து விளைநிலங்களை நோக்கிப் பயணப்பட்டேன். இங்கே பாதை சீராகவும், இருவழிச் சாலையாகவும் இருந்தது. இங்கே பழைய அளவுக்குத் தவளைகளின் ஒலி நிச்சயமாக இல்லை. சாலையின் சற்றுத் தொலைவிலிருந்து க்ரோக்... க்ரோக்... க்ரோக்... எனும் ஒலி வந்தது. இது சமவெளிகளில் தென்படும் வேறு வகையான தவளை. சாலை அகலமாகத் அகலமாக தவளைகளின் ஒலியற்ற நகரப் பகுதி மெல்ல மெல்லச் சூழ்ந்து, முழுவதுமாக ஆக்கிரமித்துக் கொண்டது.

இப்பயணத்தின் முடிவில் மனதில் ஒரு கேள்வி எழுந்தது. சாலையில் பனிபடர்ந்து, மழை பொழியும் நேரத்தில் எனது வண்டிச் சக்கரங்களில் அரைபட்டு எத்தனை தவளைகள் உயிரிழந்திருக்கும்? அப்போது முடிவு செய்தேன், அவ்வழியே இனி எப்போதும் இரவில், குறிப்பாக மழைக்காலங்களில் பயணம் செய்வதே இல்லை என.

தட்டச்சுத் தவளை

தவளைகளைக் கண்டால் சிலர் அருவருப்பும், பயமும் கொள்வார்கள். ஆனால் பூச்சிகளையும் கொசுக்களையும் சாப்பிட்டு நமக்கு அவை நன்மை செய்கின்றன. தவளைகள் அழகானவை, குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளின் மழைக்காடுகளில் தென்படும் புதர் தவளைகள்.

பார்த்தவுடன் நம்மை ஈர்க்கக்கூடிய பச்சை, இளம்பச்சை, மஞ்சள் கலந்த பச்சை, சிவப்பு, செங்கல் நிறம், ஆரஞ்சு நிறம், மிட்டாய் நிறம் எனப் பல வண்ணங்களிலும், அழகிய புள்ளிகளையுடைய, வரிகளுடைய வடிவங்களில் பல தவளைகள் இங்குத் தென்படுகின்றன. இவை சுமார் 3 செ.மீ. நீளமே இருக்கும். சில நம் விரல் நகத்தின் அளவைவிடவும் சிறியவை (பார்க்க படம்). இந்தத் தவளைகள் பெரும்பாலும் மர இலைகளின் மேலோ, கீழோ, கிளைகளிலோ அமர்ந்திருக்கும்.
(வீடியோ இணைப்பு கீழே)

மழைக்காட்டின் விதானம், மத்தியப் பகுதி, தரைப் பகுதி எனப் பல அடுக்குகளில் இவை வாழ்கின்றன. பம்பாய் புதர் தவளை கத்துவது, தட்டச்சு செய்வதைப் போலிருப்பதால் அதற்குத் தட்டச்சுத் தவளை என்றே பெயர். இதைக் கீழ்க்கண்ட வீடியோவில் காணலாம்.

காட்டு நீரோடைகளில், இலைச் சருகுகளில், நமக்கு எட்டாத உயரத்தில் மரத்தின் மேல் வாழும் தவளை இனங்களும் உண்டு. அவை உருவில் சற்றுப் பெரியவை.

கட்டுரையாளர், காட்டுயிர் ஆராய்ச்சியாளர்
தொடர்புக்கு: jegan@ncf-india.org

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x