Last Updated : 19 Mar, 2017 11:42 AM

 

Published : 19 Mar 2017 11:42 AM
Last Updated : 19 Mar 2017 11:42 AM

புதிய பாதை: புது அவதாரம் எடுக்கும் அங்கன்வாடி மையங்கள்!

குழந்தைகள் உலகம் அற்புதமானது! மிகக் கவனமாகவும் அக்கறையாகவும் குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டியது நம் கடமை என்பதை உணர்ந்த அரசு, 1975-ம் ஆண்டு ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டுச் சேவைகள் திட்டத்தின் கீழ் (ICDS) அங்கன்வாடி மையங்களை ஆரம்பித்தது. குழந்தைகள் பசியால் வாடி ஆரோக்கியம் குன்றுபவர்களாக மாறுவதைத் தடுப்பதும் ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் போக்குவதும் அங்கன்வாடி மையங்களின் முக்கியப் பணிகள்.

தமிழகத்தில் பால்வாடி என்று அறியப்படும் அங்கன்வாடி மையங்கள் போதிய பராமரிப்பின்றியும் முறையான பணியாளர்கள் இல்லாமலும் மக்களின் வரவேற்பைப் பெற முடியாமல் பாழடைந்த கட்டிடங்களாகக் காட்சியளிக்கின்றன.

தற்போது சமூக நலத்துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பணியாளர்களுக்குப் புதிய வடிவிலான பயிற்சிகள் அளிக்கப்பட்டுவருகின்றன. அதன்மூலம் அங்கன்வாடி மையங்களின் தரம் உயர்த்தப்பட்டுவருகிறது. நகர்ப்புறம் மட்டுமின்றி கிராமப்புறங்களிலும் அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளின் வருகை அதிகரித்துள்ளது. முதற்கட்டமாக அங்கன்வாடி கட்டிடங்களைத் தூய்மைப்படுத்தியுள்ளனர். குழந்தைகளைக் கவரக்கூடிய வண்ணங்களால் அறையை அலங்கரித்துள்ளனர். சிறிய விளையாட்டு உபகரணங்களையும் வைத்திருக்கின்றனர்.

விருத்தாசலம் வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் கிரிஜா, “சமூக நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம் கிராம மக்களுக்கு ஊட்டச்சத்து, சுகாதாரக் கல்வி ஆகியவற்றில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்படுகிறது. குழந்தைகள் 3 கிலோ எடையுடன் பிறக்க வேண்டும் என்றும் ஊட்டச்சத்து குறைபாடின்றிப் பிறக்க வேண்டும் என்றும் செயல்பட்டு வருகிறோம்.

கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், வளரிளம் பருவத்தினர் ஆகியோர் இந்தத் திட்டத்தில் தனிக் கவனம் பெறுகிறார்கள். தொடர்ந்து குழந்தைகள் பராமரிப்பு, வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் அங்கன்வாடி மையங்களில் சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டுவருகிறது. குழந்தைகளுக்கான நவீன விளையாட்டு உபகரணங்கள் மூலமாகவும் பாடல்கள் மூலமாகவும் மொழியையும் கல்வியையும் கற்பிக்கிறோம். வாரம் முழுவதும் விதவிதமான கலவை சாதங்கள், புதன், வியாழன் கிழமைகளில் முட்டை, பயறு வகைகளை வழங்குகிறோம்” என்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x