Last Updated : 04 Jun, 2017 11:46 AM

 

Published : 04 Jun 2017 11:46 AM
Last Updated : 04 Jun 2017 11:46 AM

தொடரும் போராட்டம்: பிரதமரைக் கேள்வி கேட்ட பினாலக்ஷ்மி!

பினாலக்ஷ்மி நெப்ரம், மணிப்பூரைச் சேர்ந்த மனித உரிமைச் செயல்பாட்டாளர். இந்திய ஆயுதக் கட்டுப்பாடு மையம் (Control Arms Foundation of India), துப்பாக்கிகளுக்குத் தப்பிப் பிழைத்த மணிப்பூர் பெண்கள் கட்டமைப்பு (Manipur Women Gun Survivors Network) போன்றவற்றை நடத்திவருகிறார். 2004-ம் ஆண்டு தொடங்கிய இவரது சமூகச் செயல்பாடுகள் இன்றளவும் தீவிரமாகத் தொடர்ந்துவருகின்றன.

மணிப்பூரின் ஆளும் கட்சி பாஜக. முதல்வர் என். பீரேன் சிங்கின் மகன் அஜய், ஒரு கொலைக் குற்றவாளி. முதல்வரின் மகனுக்கு எதிராகக் கருத்து தெரிவித்ததால் பினாலக்ஷ்மி, மாநிலக் காவல் துறையால் மிரட்டப்பட்டுவருகிறார். சில வாரங்களுக்கு முன் காவல் துறையினர் பினாலக்ஷ்மியின் வீட்டுக்கு ஆயுதங்களுடன் சென்று, அவருடைய வயதான பெற்றோரை மிக மோசமான முறையில் மிரட்டியிருக்கின்றனர். இந்த மிரட்டலைத் துணிச்சலுடன் டிவிட்டரில் பிரதமர், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டவர்களின் கவனத்துக்கு எடுத்துச் சென்றார் பினாலக்ஷ்மி.

2011-ம் ஆண்டு இம்பாலைச் சேர்ந்த இரோம் சித்ராவின் மகன் இரோம் ரோஜர் காரில் பயணம் செய்துகொண்டிருந்தபோது, பீரேன் சிங் மகன் அஜயின் கார் வழிவிடாமல் சென்றிருக்கிறது. வழிவிடச் சொல்லி ஹாரன் அடித்ததற்காகத் தனது காரிலிருந்த துப்பாக்கியால் 18 வயது ரோஜரைச் சுட்டுக் கொன்றிருக்கிறார் அஜய். இந்த வழக்கில், ரோஜருக்கு நியாயம் கிடைப்பதற்காக அவருடைய பெற்றோர் ஆறு ஆண்டுகள் போராட்டத்தை நடத்தியிருக்கின்றனர். அந்தப் போராட்டத்தின் விளைவாகவே வழக்கு சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் அஜய்க்கு ஐந்து ஆண்டுகள் தண்டனை வழங்கி, இம்பால் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

சமீபத்தில் மணிப்பூர் உயர் நீதிமன்றத்தில் அஜய் தரப்பில் ஜாமீன் கேட்டு விண்ணப்பித்தார்கள். இந்த ஜாமீனை எதிர்த்து மணிப்பூர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர எந்த வழக்கறிஞரும் முன்வராததால் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் உத்சவ் சிங் பெய்ன்ஸ் உச்ச நீதிமன்றத்துக்கு இந்த வழக்கைக் கொண்டுசென்றார். இதனால், உத்சவ் சிங்குக்குப் பல தரப்பிலிருந்தும் கொலை மிரட்டல் வந்திருக்கிறது. இந்தப் பிரச்சினையில் உத்சவ்க்கு ஆதரவாக டிவிட்டரில் குரல் கொடுத்திருந்தார் பினாலக்ஷ்மி. அதனால் முதலில் சமூக ஊடகங்களில் அவருக்கு மிரட்டல் விடப்பட்டது. பிறகு, அவரது வீட்டுக்கே சென்று பெற்றோரை மிரட்டியிருக்கிறது மாநிலக் காவல் துறை.

மாநிலத்திலும் மத்தியிலும் பாஜக ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிற நிலையில் இந்த விவகாரம் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

“மாநிலக் காவல் துறையைச் சில ஊழல் அரசியல்வாதிகள் தனிப்பட்ட காரணங்களுக்காகவும் குடும்ப உறுப்பினர்களின் குற்றங்களை மறைப்பதற்காகவும் பயன்படுத்திக்கொள்கிறார்கள்” என்று பாஜக அரசின் மீது வெளிப்படையான குற்றச்சாட்டை டிவிட்டரில் தெரிவித்திருந்தார் பினாலக்ஷ்மி. அதில் பிரதமர் மோடியையும் மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜ்ஜுவையும் இணைத்திருந்தார். பினாலக்ஷ்மிக்கு இன்றுவரை இருவருமே பதிலளிக்கவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x