Published : 04 Mar 2017 11:09 AM
Last Updated : 04 Mar 2017 11:09 AM

அலங்காரப் பொருட்கள் கண்காட்சி

சென்னை கல்பத்ருமா என்னும் தனியார் நிறுவனம் குத்ரி கைவினைப் பொருட்களை அறிமுகப்படுத்தும் விதமாக ஒரு கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறது. இந்தக் கண்காட்சியில் குத்ரி வேலைப்பாடுகளாலான படுக்கை விரிப்புகள், திரைச் சீலைகள், சுவர் மாட்டிகள், குஷன் உறைகள், இருக்கைகளுக்கான உறைகள், பாரம்பரியமான இருக்கைகள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.

“குத்ரி கைவினைப் பொருட்களை அறிமுகப்படுத்துவதற்காக இந்தக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். அதனால், இந்தப் பொருட்களைக் கண்காட்சி முடியும் வரை சலுகை விலையில் விற்பனை செய்யவிருக்கிறோம். இவையெல்லாம் ரூ. 2000 லிருந்து ரூ. 5000 வரையிலான விலையில் கிடைக்கின்றன. பாரம்பரிய பாணியில் வீட்டை அலங்கரிக்க நினைப்பவர்களுக்கு குத்ரி வேலைப்பாடுகள் நிறைந்த பொருட்கள் சிறந்த தேர்வாக இருக்கும்” என்று சொல்கிறார் கல்பத்ருமாவின் வர்த்தக வளர்ச்சி மேலாளர் நெபு தாமஸ்.

இந்த குத்ரி கைவேலைப்பாடுகள் காந்தா கைவேலைப்பாடுகளைப் போலவே இருக்கின்றன. ராஜஸ்தானின் கிராமங்களில் பெண்களால் தயாரிக்கப்படும் இந்த அலங்காரப் பொருட்கள் முழுக்கப் பருத்தியால் உருவாக்கப்படுகின்றன.

“குத்ரி கைவேலைப்பாடுகளாலான அலங்காரப் பொருட்கள் மட்டுமல்லாமல் பல்வேறு கைவேலைப்பாடுகளாலான அலங்காரப் பொருட்களும் விற்பனைக்கு இருக்கின்றன. சூழலுக்கு உகந்த பருத்தியிலான பொம்மைகள், பித்தளை, செம்பு, வெண்கலம், மரம், பீங்கான், போன்றவற்றாலான அலங்காரப் பொருட்களும் எங்களிடம் கிடைக்கின்றன. இந்தப் பொருட்கள் ஆயிரம் ரூபாயிலிருந்து கிடைக்கின்றன. பலரும் இந்தப் பொருட்களைப் பரிசாகக் கொடுக்கத் தேர்ந்தெடுக்கிறார்கள்” என்று சொல்கிறார் அவர்.

கதீட்ரல் சாலையில் இருக்கும் கல்பத்ருமாவில் நடைபெற்று வந்த இந்தக் கண்காட்சி இன்றுடன் நிறைவடைகிறது.

- கனி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x