Last Updated : 18 Oct, 2014 01:16 PM

 

Published : 18 Oct 2014 01:16 PM
Last Updated : 18 Oct 2014 01:16 PM

வளர்கிறது சென்னை ரியல் எஸ்டேட்

சென்னை ரியல் எஸ்டேட் சந்தை ஒருவிதமான தள்ளாட்டத்திலிருந்து மீண்டுவருகிறது. மத்தியில் புது அரசு பதவியேற்றதிலிருந்தே ரியல் எஸ்டேட் ஆக்கப்பூர்வமான திசையில் நகரத் தொடங்கியுள்ளது. ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் ரியல் எஸ்டேட் துறை ஆரோக்கியமான சூழல் உருவாகியுள்ளது எனச் சந்தோஷமடைகிறார்கள் கட்டுமானத் துறையில் ஈடுபட்டுவருபவர்கள்.

பொதுவாகவே இந்தியாவிலுள்ள மற்ற நகரங்களை ஒப்பிடுகையில் சென்னையைப் பொறுத்தவரை ரியல் எஸ்டேட் சந்தை நுகர்வோருக்குச் சாதகமாகவே எப்போதும் இருந்துவருகிறது. இங்கு வீடுகளின் விலை பெருமளவில் உயர்ந்து தாழ்வதில்லை. அதாவது பெரிய வித்தியாசங்கள் இல்லாமல் ஓரளவு சீராகவே இருந்துவருகிறது. இதன் அனுகூலம் முழுக்க முழுக்க நுகர்வோருக்குப் பக்கபலமாக உள்ளது.

கடந்த ஆண்டு ரியல் எஸ்டேட் துறையில் குடியிருப்பு தொடர்பான திட்டங்கள் அநேக தடைகளை எதிர்கொண்டிருந்தது என்கிறார்கள் கட்டிடக் கலை நிபுணர்கள். ஏனெனில் அப்போது அடுக்குமாடிக் குடியிருப்புகளின் விற்பனை தொடர்ந்து சரிவடைந்தது, முதலீடுகளைக் கொட்டி எழுப்பப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புகள் விற்கப்படாத நிலை தொடர்ந்தது, நுகர்வோரும் வீடுகளை வாங்குவதில் பெரிய ஆர்வத்தைக் காட்டவில்லை. இந்த அனைத்துமே ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்து கிடந்தது. ஆனால் மத்திய அரசு தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்த பின்னர்.

ரியல் எஸ்டேட் துறையில் முன்னேற்றம் ஏற்படும் சூழல் உருவானது. வருமான வரி வரம்பு 2 லட்சத்திலிருந்து 2.5 லட்சமாக உயர்த்தப்பட்டதாலும், வீட்டுக்கடனில் சலுகைகள் காட்டப்பட்டதாலும் கிடைத்த பணம் வீடு வாங்கப் பயன்பட்டதால் இந்த முன்னேற்றகரமான சூழல் சாத்தியமானதாகச் சொல்லப்பட்டது.

இந்த ஆண்டில் முதல் ஆறு மாதங்களைக் கணக்கிலெடுத்துக்கொண்டு தற்போதைய நிலையைச் சீர்தூக்கிப் பார்த்தால், ரியல் எஸ்டேட் துறை மேம்பட்டிருப்பது கண்கூடான விஷயம் என்கிறார்கள் இத்துறையின் நிபுணர்கள். புது கட்டிடங்கள் தொடர்பான விசாரணைகள் அதிகரித்துள்ளன, புது அரசிடமிருந்தும் நேர்மறையான அறிகுறிகள் கிடைத்துள்ளன என்பவை எல்லாம் சாதகமாக இருந்தாலும் நுகர்வோர்கள் தேர்ந்தெடுக்க அநேக வாய்ப்புகள் பெருகியுள்ளதால் அவர்கள் முடிவெடுப்பதில் சுணக்கம் காட்டுகிறார்கள் என்பதே பாதகமாக உள்ளது என்பதையும் கட்டுமானர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

ஐடி நிறுவனங்களும் ஊடக நிறுவனங்களும் தங்களுக்கான அலுவலக இடங்களுக்காகத் தொடர்ந்து விசாரணை மேற்கொள்கிறார்கள் என்பது இத்துறையின் வணிகத்தை ஊக்குவிக்கும் சாதகமான செய்தியாகப் பார்க்கப்படுகிறது.

ஆனால் குடியிருப்புத் திட்டங்களைப் பொறுத்தவரை பட்ஜெட்டின் அறிவிப்புகளால் கிடைக்க வேண்டிய அனுகூலமான விஷயங்கள் இன்னும் ரியல் எஸ்டேட் துறைக்கு முழுவதுமாக வந்துசேரவில்லை என்பதையும் அவர்கள் தெரிவிக்கிறார்கள். இதனிடையே பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள 2020-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு என்னும் திட்டமும் மலிவு விலை வீடுகளின் எண்ணிக்கையைப் பெருக்கி ரியல் எஸ்டேட் துறையை வளம் கொழிக்க வைக்கும் என்னும் நம்பிக்கையும் இத்துறையில் புழங்குவோரிடையே வலுப்பெற்றுள்ளது.

தங்களது மொத்த குடியிருப்புத் திட்டத்தில் 30 சதவீதத்தை மலிவு வீடுகளுக்கு ஒதுக்குவோருக்குச் சிறப்புச் சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளதும் மலிவு விலை வீடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் காரணியாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் சென்னைக் கட்டுமானர்களைப் பொறுத்தவரை இதில் ஒரு சிக்கல் உள்ளது என்கிறார்கள்.

அதாவது, அவர்கள் இன்னும் இந்தப் பயனை அனுபவிக்கும் வகையிலான முயற்சிகளில் இறங்கவில்லை. அதற்கு சென்னையில் ரியல் எஸ்டேட் சூழல் ஒத்துழைக்கவில்லை என்பதைக் காரணம் காட்டுகிறார்கள் கட்டுமான அதிபர்கள்.

சென்னையில் நிலத்தின் மதிப்பு மிக அதிகமாக உள்ள நிலையில் ஒட்டுமொத்த முதலீட்டில் 30 சதவீதத்தை மலிவு விலை வீடுகளுக்கு ஒதுக்கி அதன் பயனை அறுவடை செய்யும் வேலையை முதலில் அரசு தொடங்கினால் நலமாக இருக்கும் எனக் கட்டுமான அதிபர்கள் கூறுகிறார்கள். ஆனால் வீட்டுக் கடன் வட்டி தொடர்பான சலுகை காரணமாக ரூ. 20,000 முதல் ரூ. 30,000 வரை வருவாய் ஈட்டுபவர்களும் வீடு வாங்க முன்வருவார்கள் என்பது பயன் விளைவிக்கக்கூடியது என்பதையும் தெரிவிக்க அவர்கள் மறக்கவில்லை.

தற்போது சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் உள்கட்டமைப்பு மேம்பட்டுவருகிறது. ஆகவே இப்போது வீடுகளை வாங்க உகந்த தருணம் என்றும் வரும் ஆண்டுகளில் ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சியடைவதுடன் அது வீடுகளின் விலைகளில் பிரதிபலிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் கட்டிட நிபுணர்கள்.

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளான பெரும்பாக்கம், மேடவாக்கம், கோவிலம்பாக்கம், வானகரம், அம்பத்தூர், ஆவடி, ஒரகடம் ஆகிய இடங்களில் முதல் வீடு வாங்குவோரைக் குறிவைத்து அநேக வீட்டுத் திட்டங்கள் நிறைவேற்றிவருகின்றன. ரியல் எஸ்டேட் துறை அடுத்த வருடத்தில் 7 முதல் 8 ஜிடிபியை எட்டிப் பிடிக்கும் என்றும் அவர்கள் நம்புகிறார்கள். பட்ஜெட் சலுகை காரணமான அந்நிய முதலீட்டு வாய்ப்பு, அமேசான், ஃபிளிப்கார்ட்

போன்ற நிறுவனங்கள் இந்தத் துறையில் காலடி எடுத்துவைக்கப்போவது, சென்னை மாநகரத்தின் எல்லை பல பகுதிகளில் விரிவாக்கப்படுவது, சென்னை மாநகராட்சி மேற்கொண்டுவரும் குடிநீர் வசதி, கழிவுநீர் வசதி, சாலை வசதி போன்றவையும் சேர்ந்து ரியல் எஸ்டேட் துறைக்கு நல்ல வளர்ச்சியையளிக்கும் என்று உறுதி தெரிவிக்கிறார்கள் கட்டுமான அதிபர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x