Published : 24 Jun 2017 10:58 AM
Last Updated : 24 Jun 2017 10:58 AM

தாராள மனத்துடன் சிக்கனமாக வீடு கட்டுங்கள்

அடுக்குமாடிக் குடியிருப்பு வீடு அல்லது கட்டுநர்களே கட்டி விற்கும் தனி வீடு போன்ற வீடுகளை வாங்குவதில் சில சவால்கள் இருக்கும். ஆனால், ஒரு இடத்தை வாங்கி வீடு கட்டுவது உண்மையிலேயே மிகப் பெரிய சவால். ஏனெனில், சொந்த வீடு என்பது வாழ்க்கையில் பெரும்பாலானவர்களுக்குக் கனவு. அந்தக் கனவை நாமே கட்டியெழுப்பும்போது ஒரு திருப்தி கிடைக்கும். அதே நேரத்தில் கட்டிய வீடு என்றால் அதற்கான விலை என்பது திடமானதாக இருக்கும். ஆனால், நாமே இடம் வாங்கி வீடு கட்டும்போது எவ்வளவு செலவாகும் எனத் திட்டமாகச் சொல்ல முடியாது. எவ்வளவுதான் பட்ஜெட் போட்டாலும் செலவு கைமீறிப்போகும்.

இந்தச் செலவுகளைக் கட்டுப்படுத்த முன்பே சில யோசனைகள் செய்துகொள்ளலாம். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் என்று சொல்வதைப் போல, வீடு கட்ட முக்கியத் தேவை, மனை. இதை வாங்க ஆகும் செலவு மிக முக்கியமானது. அடுத்ததாக, வீடு கட்டத் தேவையான பொருட்களைக் கொள்முதல் செய்வது. ஆவணங்கள் பதிவு, குடி நீர், மின் இணைப்புக் கோரி விண்ணப்பிப்பது, திட்ட அனுமதி வாங்குவது ஆகியவற்றுக்கு ஆகும் செலவு ஆகியவை அடிப்படைச் செலவிலேயே வரும். இச்செலவுகளைப் பற்றி அனுபவம் வாய்ந்தவர்களிடம் கேட்டுச் சிக்கனமாகச் செலவழிக்க முயல வேண்டும். இது தவிர நமக்கு ஏற்படும் செலவுகளில் அவசியச் செலவு எது, தவிர்க்கக்கூடிய செலவு எது என்பதைப் பிரித்துப் பார்க்கக்கூடிய திறமை நமக்கு இருந்தால் செலவினங்கள் நம் கட்டுக்குள் இருக்கும்.

கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ஊதியம் அளித்தல், மின்சாரச் செலவு, கட்டுமானப் பொருட்களை எடுத்து வரும் போக்குவரத்துச் செலவு ஆகியவையெல்லாம் அவசியச் செலவின் கீழ் வரும். இந்தச் செலவினங்களைத் தவிர்க்க முடியாது. ஆனால், நாம் போடும் திட்டச் செலவைவிடச் சில சமயங்களில் இந்தச் செலவினம் அதிகமாகிவிடும். சில நேரங்களில் வீடு கட்டுபவர்களுக்குப் பண நெருக்கடியை ஏற்படுத்தும் செலவினம் இது.

வீடு கட்ட முறையாகத் திட்டம் போட்டுப் பணிகள் நடந்துகொண்டிருக்கும். அப்போது நண்பர்கள் சொன்னார்கள், உறவினர்கள் சொன்னார்கள் எனப் புதிய யோசனையைப் பொறியாளரிடம் சொல்வார்கள். இன்னும் சில வீட்டில் உறுப்பினர்கள் ஆசைப்படுகிறார்கள் என்று புதிய யோசனையைச் செய்து முடிக்க வற்புறுத்துவார்கள். கூடுதல் செலவு ஆகும் என்றாலும், இப்போது விட்டால் எப்போது செய்து முடிப்பது என்று யோசனையை நிறைவேற்ற ஆயத்தமாகிவிடுவார்கள். இது எதிர்பாராத செலவுக் கணக்கில் வரும். ஆனால், கடைசி நேரத்தில் திட்டத்தில் மாற்றம் செய்து செய்யப்படும் பணிகளுக்கு மதிப்பிடப்படும் தொகையைவிடக் கூடுதல் செலவு ஆகவும் வாய்ப்புகள் உண்டு. கட்டுமானப் பொருட்களின் திடீர் விலை உயர்வும் எதிர்பாராத செலவைச் சாரும்.

எல்லாச் செலவுகளுக்கும் எப்போதும் ஒரு விஷயம் தீர்வாகவும் அமைந்திருக்கிறது. அதுதான் சிக்கனம். எல்லாச் செலவுகளிலும் ஓரளவு சிக்கனத்தைக் கடைபிடிக்க முயன்றால், கட்டுமானச் செலவு எகிறாமல் பார்த்துக் கொள்ளவும் முடியும். பணத் தேவை இல்லாமல் வீட்டுக் கட்டுமானத்தை மேற்கொள்ளவும் முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x