Last Updated : 20 May, 2017 11:12 AM

 

Published : 20 May 2017 11:12 AM
Last Updated : 20 May 2017 11:12 AM

பத்திரப்பதிவு செலவுக்கு வரிச் சலுகை உண்டா?

வங்கியில் வாங்கிய வீட்டுக் கடனுக்கு வழங்கப்படும் வரிச் சலுகை பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். வாங்கிய வீட்டை பத்திரப் பதிவு செய்யும்போது செய்யப்படும் தொகைக்கும் வரிச் சலுகை பெற முடியும். ஆனால், அதற்காக வரிச் சலுகை பெறுவது பற்றி பலருக்கும் விழிப்புணர்வு இல்லை அல்லது தெரிந்திருந்தாலும் கண்டுகொள்வதில்லை.

புதிதாக வீடு வாங்க உத்தேசிக்கும்போதே பத்திரப்பதிவுக்கான செலவையும் சேர்த்து சிந்திப்பார்கள். நகர்ப்புறங்கள் என்றால் பத்திரப்பதிவுக்கான செலவு மட்டும் ஒரு லட்சம் ரூபாயையும் தாண்டி வந்துவிடும். வரிச் சலுகை என்று வரும்போது வீட்டுக்கடனுக்கு வாங்கிய தொகைக்கு உண்டு. தற்போதைய நிலையில் வீட்டுக் கடனில் வாங்கிய வீட்டில் குடியிருப்பவருக்கு 2 லட்சம் ரூபாய் வரை வரிச் சலுகை வழங்கப்படுகிறது. அந்த வரிச் சலுகையை வீட்டுக் கடன் வாங்கிய அனைவரும் நிச்சயம் பயன்படுத்திக்கொள்வார்கள். ஆனால், பத்திரப்பதிவுக்கான செலவும் என்பதும் வீட்டுக்காக வாங்கியது என்பதால் அதற்கும் வரிச் சலுகை உண்டு.

பத்திரப்பதிவு செலவு என்பது சொத்து அமைந்துள்ள இடத்தின் அரசு வழிகாட்டி மதிப்பு (கைடு லைன் வேல்யூ) என்னவோ அதையொட்டி செலவு இருக்கும். அரசு வழிகாட்டி மதிப்பு அதிகமாக இருந்தால் முத்திரைக் கட்டணச் செலவும் அதிகமாக இருக்கும். குறிப்பாக நகர்ப்புறங்களில் அரசு வழிகாட்டி மதிப்பு அதிகமாக இருக்கும். நகர்ப்புறங்களில் சொத்து வாங்கி பத்திரப்பதிவு செய்பவர்களுக்கு செலவு மிகக் கூடுதலாகவே இருக்கும். இப்படி செய்யப்படும் தொகைக்கும் வரிச் சலுகை கோர முடியும்.

அந்த வரிச் சலுகை எப்படி வழங்கப்படுகிறது? இந்த வரிச் சலுகை என்பது மனையின் மதிப்பில் 8 சதவீதமாக செலுத்தப்படும் முத்திரைக் கட்டணத்துக்கு மட்டும்தான் வழங்கப்படுகிறது. அதாவது, உங்களுடைய வீட்டுடன் சேர்ந்து மனையை வாங்கினால் வீட்டின் மதிப்புக்கு கட்டும் முத்திரைக் கட்டணத்துக்கு இந்த வரிச் சலுகை கிடையாது. அடுக்குமாடி குடியிருப்பு என்றால் யு.டி.எஸ். எனப்படும் பிரிக்கப்படாத மனையின் மதிப்பில் 8 சதவீதம் தொகையாக கட்டப்படும் முத்திரைத்தாள் கட்டணத்துக்கு வரி விலக்கு வழங்கப்படுகிறது. அதுவே இப்போது வசூலிக்கப்படும் கட்டுமான ஒப்பந்த பதிவுக்கான 2 சதவீத தொகைக்குக் கிடையாது. செலுத்தப்படும் பிற வரிகளுக்கும் கிடையாது.

இந்த வரிச் சலுகையை நீங்கள் எந்த நிதியாண்டில் செலவு செய்தீர்களோ அந்தக் குறிப்பிட்ட ஆண்டுக்கு மட்டுமே வருமான வரிச் சட்டம் 80 சி பிரிவின் கீழ் கோரலாம். ஒரு வேளை 8 சதவீத முத்திரைக் கட்டணத்தைத் தாண்டி செலவு செய்திருந்தால், அதற்குரிய தொகையைக் கழித்து விட்டு மீதி தொகைக்கு மட்டும் வரி கட்டினால் போதுமானது. இந்த வரிச் சலுகையைக் கோர வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும்போது ஆவணங்கள் இணைக்க வேண்டும். பத்திரப்பதிவுக்காக செலவு செய்த ரசீதின் நகலை இணைக்க வேண்டியிருக்கும்.

அதே நேரத்தில் நீங்கள் லே அவுட் மனையையோ அல்லது நிலத்தையோ மட்டும் வாங்கி செலவு செய்யும் முத்திரைக் கட்டணத்துக்கு எந்த வரிச் சலுகையும் கிடையாது. வீட்டு மனையை தவணை அல்லது கடனில் அல்லது ஒரே தவணையில் செலுத்தி வாங்கியிருந்தாலும் வரிச் சலுகை கிடைக்காது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x