Last Updated : 19 Jul, 2016 12:09 PM

 

Published : 19 Jul 2016 12:09 PM
Last Updated : 19 Jul 2016 12:09 PM

சவுண்ட் இன்ஜினியர் ஆக ஆசையா?

நூற்றாண்டு கண்ட இந்திய சினிமாவில் இசையமைப் பாளரைத் தாண்டி ஒலிப்பதிவு சார்ந்த பிற பிரிவுகள் மீதும் பொது மக்களிடையே கவனத்தை ஏற்படுத்தியது இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான்தான். டிஜிட்டல் இசை என்னும் சொல் அவரோடு சேர்ந்தே தமிழ் சினிமாவுக்குள் கால் பதித்தது. குறிப்பாக சவுண்ட் இன்ஜினியரிங் பிரபலமானது.

சவுண்ட் இன்ஜினியர் என்பவர், ஒரு இசையமைப்பாளர் உருவாக்கும் இசையைக் கேட்பவருக்குத் தரமாக எடுத்துச் செல்பவர். ஒரு விளையாட்டு வர்ணனையையோ, ஒரு மேடைப் பேச்சையோ கேட்பவர்கள் நேர்த்தியாகக் கேட்கும் வகையில் ஒலிப்பதிவுக் கருவிகளைக் கையாள்பவர் அவர்தான்.

இசைக் கலைஞர்கள், திரைப்பட இயக்குநர்கள், தொலைக்காட்சி செய்தி நிலையங்கள் மற்றும் வானொலி நிலையங்களில் சவுண்ட் இன்ஜினியர்களின் பணி அத்தியாவசியமானது. ஒலிப்பதிவு மற்றும் ஒலிபரப்பைப் பொறுத்தவரை அதிகபட்சத் தரத்துடனும் துல்லிய மாகவும் ஒலியைக் கொடுக்க வேண்டியதுதான் ஒரு நல்ல சவுண்ட் இன்ஜினியரின் முதன்மையும் இறுதியுமான இலக்கு.

சவுண்ட் இன்ஜினியரின் பணிகள்

சவுண்ட் இன்ஜினியர் அல்லது ஆடியோ இன்ஜினி யர்கள் இசைக் கூடங்கள், திரைப்பட ஒலிப்பதிவுக் கூடங்கள், வானொலி மற்றும் தொலைக்காட்சி நிலையங்கள், நேரடி ஒலிபரப்புச் சூழல்களில் பணிபுரிபவர்கள். ஒலியைப் பதிவு செய்வது (ரெக்கார்டிங்), ஒலிக்கலவை செய்வது (மிக்சிங்), எலக்ட்ரானிக் எஃபக்ட்களையும் ஈக்வலைசிங்கையும் பயன்படுத்திச் சிறப்பு ஒலிகளை உருவாக்குவது போன்றவை சவுண்ட் இன்ஜினியரின் வேலைகள்.

ஒலி மற்றும் இசையின் இயந்திரரீதியான, தொழில் நுட்பரீதியான அம்சங்களை முழுமையாக சவுண்ட் இன்ஜினியர் ஒருவர் அறிந்திருக்க வேண்டும். ஒரு மேடையில் எங்கே மைக்ரோஃபோன்களை வைத்தால் ஒலிபரப்பு சிறப்பாக இருக்கும் என்பதில் தேர்ந்த அனுபவம் இருத்தல் வேண்டும். ஆடியோ கருவிகள் மற்றும் பிற தொழில்நுட்பக் கருவிகளின் ஒலிமட்டங்களைச் சீர்செய்யத் தெரிந்திருக்க வேண்டும். ஃபேஷன் ஷோக்கள் போன்ற நிகழ்வுகள், கணினி விளையாட்டு நிகழ்ச்சிகள், கார்ப்பரேட் நிகழ்ச்சிகள், கணினி விளையாட்டுகள் போன்றவற்றுக்கு இசையையும் சவுண்ட் எஃபக்டுகளையும் சரியானபடி சேர்ப்பவராக இருப்பார்.

எப்படிப்பட்ட வேலை?

ஒவ்வொரு நாளும் அறிமுகமாகும் புதிய ஆடியோ கருவிகளுடன் புழங்கும் திறந்த மனநிலை கொண்டவராக சவுண்ட் இன்ஜினியர் இருத்தல் அவசியம். படத் தொகுப்பாளர், இயக்குநர், வீடியோ ஆப்பரேட்டர், சக சவுண்ட் இன்ஜினியர்களுடன் கலந்து பணியாற்ற வேண்டியிருக்கும்.

திட்டமிடுதல், நேர ஒதுக்கீடு செய்தல், சரியானபடி வேலையை முடித்துக் கொடுத்தல் ஆகியவற்றைக் கொண்டே ஒரு சவுண்ட் இன்ஜினியரின் பணி மதிக்கப்படும். பயணங்களுக்குத் தயங்கக் கூடாது.

எங்கே படிக்கலாம்?

# சென்னையில் உள்ள அடையார் இன்ஸ்டிட்யூட் அல்லது எம்ஜிஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்வி நிலையத்தில் மூன்று ஆண்டுகள் சவுண்ட் ரெக்கார்டிங் அண்ட் இன்ஜினியரிங்கில் டிப்ளமோ.

# அம்ரிதா ஸ்கூல் ஆப் ஆர்ட்ஸ் அண்ட் சயன்ஸ், கொச்சி, எம்.எஃப்.ஏ. விஷுவல் மீடியா; பி.எஸ்சி. விஷுவல் மீடியா.

# ஏ.ஆர்.எம். அகாடமி ஆஃப் ரேடியோ மேனேஜ்மெண்ட், புதுடெல்லி, சவுண்ட் ரெக்கார்டிங் அண்ட் ரேடியோ புரொடக் ஷன்; கல்விதகுதி: பத்தாம் வகுப்பு

# ஏசியன் அகாடமி ஆப் பிலிம் அண்ட் டெலிவிஷன், புதுடெல்லி; வீடியோ எடிட்டிங் அண்ட் சவுண்ட் ரெக்கார்டிங் (மூன்று மாதங்கள்)

# பவன்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மீடியா ஸ்டடீஸ், கொச்சி, போஸ்ட் கிராஜூவேட் டிப்ளமோ இன் டெலிவிஷன் அண்ட் ஜர்னலிசம் மற்றும் டிப்ளமோ இன் ஃபில்ம் மேக்கிங்.

எங்கெங்கு பணியாற்றலாம்?

நல்ல பயிற்சியும் அனுபவமும் பெற்ற சவுண்ட் இன்ஜினியர்கள் திரைத்துறை, மல்டிமீடியா நிறுவனங்கள், ரெக்கார்டிங் கூடங்கள், தொலைக்காட்சி சேனல்கள், சிடி தயாரிப்பு நிறுவனங்கள், விளம்பர நிறுவனங்கள், போஸ்ட் புரொடக்‌ஷன் யூனிட்கள், அனிமேஷன் ஒளிப்பதிவுக் கூடங்களில் சவுண்ட் இன்ஜினியர்களுக்கு பணிவாய்ப்புகள் உள்ளன.

கல்வித் தகுதி: ப்ளஸ் டூவில் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களைப் படித்தவர்கள் சவுண்ட் இன்ஜினியரிங், ஆடியோ இன்ஜினியரிங் அல்லது அக்கூஸ்டிக் (Acoustic) இன்ஜினியரிங்கில் இளங்கலை மற்றும் முதுகலை படிக்கலாம். பத்தாம் வகுப்பு படித்தவர்கள் டிப்ளமோ படிக்கலாம்.

இதையும் செய்யலாம்

# ஒலிப்பதிவுக் கூடங்களைக் கண்ணைக் கவரும்படி, அழகுணர்வுடனும் ஒலித் துல்லியத்துடன் உருவாக்குதல்.

# ஒலிப்பதிவுக் கருவிகள் பராமரிப்பு மற்றும் பழுதுபார்த்தல்.

# நேரடி ஒலிபரப்பு நிகழ்ச்சிகளின்போது சவுண்ட் சிஸ்டம்களைக் கையாளுதல்.

# திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்ச்சிகள், அனிமேஷன், கம்ப்யூட்டர் கேம்ஸ்களுக்கு சவுண்ட் டிசைனிங் செய்தல்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x