Published : 30 May 2017 11:05 am

Updated : 28 Jun 2017 21:14 pm

 

Published : 30 May 2017 11:05 AM
Last Updated : 28 Jun 2017 09:14 PM

தொழில் தொடங்கலாம் வாங்க! - 17: நம்பிக்கை வைக்கும் முதலாளி கிடைப்பாரா?

17

தொழில்முனைவோர் அறிந்த விஷயம்தான் இது. பணியாளர்களைச் சரியாகப் பராமரிக்காமல் விட்டால் தொழில் வளராது என்பது. ஆனால் இதை அறிவு பூர்வமாகப் பார்க்கும் அளவுக்கு உணர்வு பூர்வமாக உணர்வதில்லை. வேலைக்கு இருப்பவர்களை நாம் எப்படி நோக்குகிறோமோ, அவர்கள் காலப்போக்கில் அதுவாகவே மாறிவிடுவார்கள்.

வேலைகளில் ஏற்றத்தாழ்வு பார்ப்பதும், வேலையை வைத்து ஒருவருக்கு மரியாதை தருவதும், தராமல் இருப்பதும், வேலை கொடுப்பவர் ஆண்டவன், வேலை பார்ப்பவர் அடிமை போன்ற எண்ணங்களினால்தான் பணியாளர் பங்களிப்பில் பெரும் பங்கம் வருகிறது.


ஆளுமை வளர்ச்சிக்கு என்ன செய்கிறோம்?

எனக்குத் தெரிந்து பலருக்குத் தங்களிடம் வேலை செய்பவர்கள் ஒரு நல்ல சட்டை போட்டாலோ, நல்ல வண்டி வைத்திருந்தாலோ, சற்று நவ நாகரிகமாக இருந்தாலோ பிடிக்காது. தங்களைவிடத் தங்கள் பணியாளர்கள் குறைவாகவே இருக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களை வளர்க்க விடாமல் தடுக்கிறது.

பெரிய நிறுவனங்கள்கூடத் திறன் சார்ந்த அடிப்படைப் பயிற்சி தவிர ஆளுமை வளர்ச்சிக்கு எதுவும் செய்வதில்லை. ஆனால் சிறு நிறுவனங்களிலும், ஸ்டார்ட் அப் போன்ற அமைப்புகளிலும் பணி செய்யும் மக்களின் வளர்ச்சிதான் நிறுவன வளர்ச்சி. பல திறன்களில் வாய்ப்பும் பயிற்சியும் தருவதுதான் பணியாளர் ஊக்கத்தை வளர்க்கும். தவிர அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு வழி செய்கையில் அவர்களைத் தக்கவைப்பதும் சாத்தியமாகிறது.

அவர்கள் ஏன் நிலைக்க வேண்டும்?

திருப்பூர் போன்ற ஊர்களில் பார்த்திருக்கிறேன். முதலாளி ஆடி காரில் வருவார். பண்ணையார் போலச் செயல்படுவார். அடுத்த நிலை பணியாளர் பைக்கில் வருவார். ‘ஆல் இன் ஆல்’ போல ஒருவர் இருப்பார். அவர் நிலையில் சிலர். பிறகு நூற்றுக்கணக்கான பணியாளர்கள் எந்தக் கம்பெனி மாறினாலும், அதே வாழ்க்கைத் தரத்தில் இருப்பார்கள். “யாருமே வேலையில் நிலைப்பதில்லை” என்பது எல்லோரும் சொல்லும் வாசகம். நான் கேட்பேன், “அவர்கள் ஏன் நிலைக்க வேண்டும்?” இதற்குப் பதில் சொல்லுங்கள். சம்பளம் மற்றும் வசதிகள் தவிர உங்களிடம் வேறு பதில்கள் உண்டா?

நல்ல ஸ்டார்ட் அப்களில் பணிபுரியும் பலர் குறைந்த சம்பளத்துக்கு வருவார்கள். ஆனால் அவர்களுக்கு ஒரு எதிர்காலம் காட்டப்படும். மும்மடங்கு வேலை செய்தாலும், பாதிச் சம்பளம் பெற்றாலும், கம்பெனிப் பங்குகள், அதிக அதிகாரம், பதவி உயர்வு, தன்னிச்சையாக முடிவு எடுக்கும் பொறுப்பு போன்றவை அவர்களை நிறுவனத்துடன் கட்டிப் போட்டுவிடும்.

ஒரு சிறு முதலாளியின் அடுத்த கட்டப் பணியாளரிடம் பேசிக்கொண்டிருந்தேன். “என்னை நம்பிச் சகலத்தையும் ஒப்படைச்சிட்டு நம்பிக்கையா வெளியூர் போவார். அந்த நம்பிக்கைக்காகத்தான் இங்கேயே கிடக்கறேன்!” என்றார். அவர் வெளியே போனால் அதிகச் சம்பளம் கிடைக்கும். இப்படி நம்பிக்கை வைக்கும் முதலாளி கிடைப்பாரா?

பணியாளர்களை நன்கு பராமரித்தல் ஒரு வியாபார உத்தியும்கூட. “பணியாளர்கள்தான் சிறந்த ஆலோசகர்கள். பணியில் அவர்கள் சொல்லும் தொடர் முன்னேற்ற ஆலோசனைகள்தான் தொழிலை வளர்க்கும்!” என்கிற தத்துவத்தில் வளர்ந்த தேசம்தான் ஜப்பான்.

ஆலோசனை கேளுங்கள்

உங்களுக்குக் கீழே பணி புரிபவர் உங்களுக்கு ஆலோசனை சொல்வதா என்று நினைத்தால், நீங்கள் அவரின் கை கால்களைத்தான் பணிக்கு வைத்திருக்கிறீர்கள் தலையை அல்ல என்று புரிந்து கொள்ளுங்கள். பணியாளர் சொல்லும் அனைத்து யோசனைகளும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்றில்லை. ஆனால் எத்தனை யோசனைகள் வேண்டுமானாலும் எதில் வேண்டுமானாலும் சொல்லலாம் என்ற கலாச்சாரம் உங்கள் தொழிலை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும்.

லட்சக்கணக்கில் பணம் கொடுத்து ஆலோசகர்களிடம் செல்வதைவிட, முதலில் உங்கள் பணியாளர்களிடம் ஆலோசனை கேளுங்கள். ஆலோசனை சொல்லும் அளவு கலாச்சாரத்தை உருவாக்குங்கள். “எங்கள் பணியாளர்களை நன்குதான் நடத்துகிறோம். அவர்களும் சுதந்திரமாகத்தான் செயல்படுகிறார்கள்” என்று நீங்கள் பெருமிதம் கொண்டால் உங்களிடம் இரண்டே கேள்விகள்.

1.கடந்த ஓராண்டில் உங்கள் பணியாளர்கள் சொன்ன ஆலோசனைகளில் எத்தனை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன?

2.அவற்றால் அடைந்த லாபம் / செலவு குறைவு / பலன்கள் எவ்வளவு?

இதற்குத் தீர்மானமான பதில்கள் இல்லையென்றால் நீங்கள் உங்கள் பணியாளர்களைச் சிறப்பாக நடத்தவில்லை. அவர்களிடமிருந்து நிறுவனத்துக்குத் தேவையானதை முழுவதுமாகப் பெறவில்லை.

மனித வள மேம்பாடு தேவை

சரி, முதலில் என்ன செய்யலாம் என்கிறீர்களா? உங்களிடம் வேலை செய்பவர் எவ்வளவு எளியவராக இருந்தாலும் அவரின் பங்களிப்பும் ஒரு முதலீடு என்பதை உணருங்கள். அவரும் உங்கள் தொழிலுக்கு ஆலோசனை கூறத்தக்கவர் என்பதைப் புரிந்துகொண்டு அவருக்கான சுதந்திரத்தையும் பொறுப்பையும் கொடுங்கள். பெரிதாகச் சம்பளம் தர முடியாவிட்டாலும் மிகக் கண்ணியமாக நடத்துங்கள். அவரின் விசுவாசமும் நன்மதிப்பும் உங்கள் தொழிலுக்கு முக்கியம். பிறகு சேரும் பணியாளர்களின் எண்ணத்தை இவர் பாதிக்கக்கூடியவர் என்பதைக் உணர்ந்துகொள்ளுங்கள்.

தொழில் தொடங்கியதும் சேரும் ஆரம்பக் காலத்தில் சேரும் பணியாளர்களுக்குத் தாங்கள்தான் இந்தத் தொழிலை வளர்த்தெடுக்கிறோம் என்ற பெருமை இருக்கும். அதைப் போற்றுங்கள். உங்கள் குடும்ப உறுப்பினருக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை அவருக்கும் அளியுங்கள். வருங்காலத்தில் கூடுதல் பொறுப்பும் பதவி உயர்வும் அவர்களுக்கு விரைவாகக் கிடைக்கும் என்ற நம்பிக்கையைத் தோற்றுவியுங்கள். அவர்கள் படிப்பு, பயிற்சி, சிறப்பு அனுபவம் என்று அவர்கள் மேல் முதலீடு செய்யுங்கள்.

எப்படி எந்த ஒரு குழு விளையாட்டிலும் தனி மனிதப் பங்கீடு மட்டும் வெற்றியைத் தராதோ, அது போலத்தான் தொழில் உலகமும். உங்கள் வெற்றியை நிர்ணயிப்பவர்கள் உங்கள் பணியாளர்களே. தொடங்கிய நாள் முதல் அவர்களைப் பேணுங்கள். எல்லாக் காலத்திலும் அவர்கள் உங்களுக்குத் துணை நிற்பார்கள்.

வளர்ந்த நிறுவனங்களுக்குத்தான் மனித வள மேம்பாடு தேவை என்பதில்லை. இருவர் வேலை செய்யும் சின்ன கம்பெனிகளும் அது அவசியம் தேவை. தொழில் தொடங்கிய நாள் முதல் கவனிக்க வேண்டிய முக்கியக் கடமை இது.

தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com


தொழில் தொடங்கலாம்டாக்டர் கார்த்திகேயன் தொடர்தொழில் முனைவுசொந்தத் தொழில்தொழில் வழிகாட்டிதொழில் முனைவு வழிகாட்டிதொழில் முனைவோர்முதலாளி நம்பிக்கை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author