Last Updated : 10 Aug, 2016 10:54 AM

 

Published : 10 Aug 2016 10:54 AM
Last Updated : 10 Aug 2016 10:54 AM

சதுரங்க வேட்டையாடும் சகோதரர்கள்!

கிரிக்கெட் போட்டியில் மட்டும்தான் அண்ணனும் தம்பியும் ஒரே நேரத்தில் விளையாடி உலக அளவில் சாதிக்க முடியுமா? செஸ் (சதுரங்கம்) போட்டியிலும் விளையாடிச் சாதிக்க முடியும் என்று நிரூபித்துக்காட்டி வருகிறார்கள் சென்னையைச் சேர்ந்த சகோதரர்கள். அந்தக் குட்டி சூப்பர் ஸ்டார்கள் வேறு யாருமில்லை. பரத் சுப்பிரமணியம் மற்றும் பாலசுப்பிரமணியம்!

சென்னையில் உள்ள பத்மா சேஷாத்ரி பால பவனில் பரத் 4-ம் வகுப்பு படிக்கிறான். பாலா 7-ம் வகுப்பு படிக்கிறான். அண்ணன் தம்பி இருவருமே செஸ் விளையாட்டைக் கரைத்துக் குடித்திருக்கிறார்கள். இவர்கள் இருவருமே தேசிய அளவிலும் உலக அளவிலும் வாங்காத பதக்கங்களே இல்லை. ஐந்தரை வயதிலிருந்தே செஸ் விளையாடும் பரத் 9 வயதுக்குட்பட்டவர்களுக்கான பல போட்டிகளில் பங்கேற்றுள்ளான்.

2015-ல் தென் கொரியாவில் நடைபெற்ற ‘ஆசிய யூத் சாம்பியன்ஷிப்’ போட்டியில் பங்கேற்றுத் தங்கப் பதக்கம் வென்றது பரத்தின் செஸ் விளையாட்டு ஆர்வத்துக்குத் திருப்புமுனையாக அமைந்தது என்கிறார் அவரது அம்மா யாமினி. அதன் பின்னர் கிரீஸில் உலக சாம்பியன்ஷிப் போட்டியிலும் தங்கப் பதக்கம் வென்றுள்ளான் பரத்.

சின்ன வயதிலேயே செஸ் விளையாட்டில் வெற்றிக்கொடி கட்டிய பரத்துக்குச் செஸ் விளையாட்டில் எப்படி ஆர்வம் வந்தது? “அதற்கு அவனோட அண்ணன் பாலசுப்பிரமணியம்தான் காரணம். பாலசுப்பிரமணியம் 5 வயசுல அவனோட அப்பா ஹரிசங்கரிடம் செஸ் விளையாடக் கத்துக்கிட்டான். அண்ணன் விளையாடுவதைப் பார்த்து பரத்தும் சேர்ந்து விளையாட ஆரம்பிச்சான். இப்படித்தான் செஸ் விளையாட்டு பரத்துக்கு அறிமுகமாச்சு.

சீக்கிரமாவே செஸ் மேலே ரெண்டு பேருக்கும் ஆர்வம் அதிகமாயிடுச்சு. முறைப்படி செஸ் கத்துக்க பயிற்சியாளர் கிராண்ட் மாஸ்டர் ரமேஷிடம் சேர்த்துவிட்டேன். அவரு ரெண்டு பேருக்கும் நிறைய நுணுக்கங்களைக் கற்றுக்கொடுத்தார். அதன் பிறகு மாநிலம், தேசிய அளவுல செஸ் போட்டியில் கலந்துக்க வாய்ப்பு கிடைச்சது” என்கிறார் இவர்களின் அம்மா யாமினி.

தற்போது பரத் 9 வயதுக்குட்பட்டவர்களுக்கான தரவரிசையிலும், பாலசுப்பிரமணியம் 14 வயதுக்குட்பட்டவர்களுக்கான தரவரிசையிலும் அதிக ஈலோ [ELO] புள்ளிகளைப் பெற்றுள்ளனர். இதனால் இருவரும் தேசிய அளவிலும் உலக அளவிலும் முன்னணியில் உள்ளனர். ‘ஈலோ’ புள்ளி என்பது தரவரிசையைக் குறிப்பதாகும்.

இந்த ஆண்டு பிரான்ஸில் நடைபெற்ற கேன்ஸ் சர்வதேசச் செஸ் திருவிழாவில் பங்கேற்று 200 ஈலோ புள்ளிகளைப் பெற்றுள்ளான் பாலசுப்பிரமணியம். இப்படி இதுவரை 2,000 ஈலோ புள்ளிகளைப் பெற்றுள்ளான். பாலாவின் திறமையையும் ஆர்வத்தையும் பார்த்து அடுத்த ஆண்டும் கான் சர்வதேசச் செஸ் திருவிழாவில் விளையாடக் கூப்பிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x