Last Updated : 16 May, 2017 10:14 AM

 

Published : 16 May 2017 10:14 AM
Last Updated : 16 May 2017 10:14 AM

தேர்வு முடிவுகள் வந்தாச்சு: இனிய தொடக்கமாகட்டும்!

பிளஸ் டூ, பத்தாம் வகுப்பு பள்ளி மாணவர்களின் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டன. இத்தருணத்தில் மாணவர்கள் கடுமையான மன நெருக்கடியை எதிர்கொள்கிறார்கள். ஏனெனில், தேர்வு முடிவுகள் என்பது ஒரு நாளோடு முடிந்துவிடும் விஷயம் அல்ல. கட் ஆஃப் மதிப்பெண், விரும்பிய கல்லூரி, எதிர்பார்க்கும் பாடப்பிரிவு என ஒவ்வொன்றாகக் கைக்குக் கிடைப்பதோ, தட்டிப்போவதோ தேர்வு முடிவுகளின் தொடர்ச்சியாக நீள்கிறது. எனவே உயர் கல்வியில் மாணவர்கள் ஐக்கியமாகும் அடுத்த ஒன்றிரண்டு மாதங்கள் வரை அவர்களுக்குத் தேவையான மன ஆறுதலைத் தருவது குடும்பத்தினரின் கடமை.

வரவேற்புக்குரிய முன்னெடுப்பு

பிளஸ் டூ தேர்வுகள் அறிவிப்பில் இதுவரையிலான நடைமுறைகளுக்கு மாற்றாக ‘கிரேடு’ முறையிலான அறிவிப்பைத் தமிழக அரசு இம்முறை வெளியிட்டிருக்கிறது. பாடவாரியாக முதன்மை பெற்றவர்கள், மாநிலத்தில் முதலிடம், மாவட்டத்தில் முதலிடம், பள்ளியில் முதலிடம் எனத் தேர்வு முடிவுகள் வெளியாகும்போது, அதனைப் பறிகொடுத்த பிற மாணவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாவார்கள்.

100 மதிப்பெண் பெற்றவரைவிட 99 பெற்றவர் எந்த வகையிலும் குறைந்தவர் அல்ல. ஆனால், ஒரு மதிப்பெண்ணை இழந்ததற்காக அந்த மாணவர் தனது வாழ்க்கையில் மறக்க முடியாத மன வடுவைச் சுமந்திருப்பார். மேலும் வழக்கத்திலிருக்கும் தேர்வு முறையும் அவை வழங்கும் மதிப்பெண்களும் மாணவர்களின் ஒட்டுமொத்தத் திறமையை உரசிப் பார்ப்பதாகச் சொல்ல முடியாது. முதலிடம் பெற்றவர்கள் கால ஓட்டத்தில் காணாமல் போவதும், சராசரி மதிப்பெண் பெற்றவர்கள் பின்னாளில் சாதித்துக்காட்டுவதும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

எனவே தமிழக அரசின் வரவேற்கத்தக்க இந்த முடிவின் மூலம், பெரும்பான்மை மாணவ மாணவியரின் மன அழுத்தத்துக்கு இம்முறை விடிவு பிறந்திருக்கிறது. மாணவர்களை உளவியல் அழுத்தத்திலிருந்து விடுவிக்க அரசுத் தரப்பிலான முன்னெடுப்பைப்போல, பெற்றோர், குடும்பத்தினர் உள்ளிட்டோரும் தங்களது அரவணைப்பை வழங்க வேண்டும்.

பெற்றோரின் பக்குவம்

தஞ்சாவூரைச் சேர்ந்த பள்ளி மாணவருக்கான மனநல ஆலோசகர் கே.சிவகுமார், “மதிப்பெண் என்பது பெற்றோர் மற்றும் குடும்பத்தினரின் கவுரவப் பிரச்சினையாகவும், சமூக அந்தஸ்துக்கான நெருக்கடியாகவும் மாணவர்கள் மீது திணிக்கப்படுகிறது. இதனால் ஒன்பதாம் வகுப்பிலிருந்தே மாணவர்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகிறார்கள். பக்குவமடைந்த பெற்றோரால் மாணவர்களின் நெருக்கடிகளுக்குத் தீர்வு காண முடியும். எதிர்காலப் படிப்புகள், அவை தரும் வேலைவாய்ப்பு குறித்த விவரங்களை அறிந்துகொள்வதோடு, மாணவர்களின் விருப்பப் பாடம், பிடித்த துறைகள் குறித்தும் அவர்கள் சரிவரத் தெரிந்து வைத்துக்கொள்வது அவசியம். பெற்றோரில் சிலர் தங்கள் விருப்பத்தைப் பிள்ளைகளிடம் திணிப்பதும், அதற்கான மதிப்பெண்கள் தவறும்போது பழியை மாணவர்கள் மீது சுமத்தவும் தவறு.

இவை சில சமயம் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை முறித்துவிடும் என்பதை உணர அவர்கள் மறுக்கிறார்கள். முதலாவதாகப் பிள்ளைகளை உற்றுக் கவனித்து அவர்களுக்கு விருப்பமான துறை, படிப்பு குறித்துப் பரிசீலிக்க வேண்டும். அதை அடுத்து ஆசிரியர்களிடம் ஆலோசிப்பது, ‘கரியர் கைடன்ஸ்’ தொடர்பான விஷயங்களைத் தெரிந்துகொள்வது அவசியம். தேவைப்பட்டால் மனநல ஆலோசகர் உதவியுடன் அறிவியல்பூர்வமான சில ‘ஆப்டிடியூட்’ தேர்வுகள் வாயிலாகவும் அவற்றை அறிந்துகொள்ளலாம்” என்கிறார்.

அதற்காக இவை அனைத்தையும் ஒட்டுமொத்தமாக ஒரே நேரத்தில் செய்துபார்ப்பதும் தவறு. மாணவர்களுக்குச் சிறிது சிறிதாக அவர்களுடைய திறன் என்ன, அவர்களுக்கு எதில் ஆர்வம் இருக்கிறது என்பதை நாமும் புரிந்துகொள்ள வேண்டும் அவர்களுக்கும் புரியச்செய்ய வேண்டும். அவற்றின் மூலம் மாணவர்களுக்குப் பாடமும், தேர்வும் ஒரு சுமையாக இருப்பதை மாற்ற முடியும். “தாமாக விரும்பிப் படிக்கும் மாணவர்கள் தங்கள் திறமைக்கு ஏற்ற மதிப்பெண்களைப் பெறுவதோடு, மதிப்பெண்ணில் சறுக்கினாலும் அவற்றிலிருந்து சளைக்காது மீண்டெழுவார்கள்.

அவர்களுடைய அப்போதைய தோல்வி என்பதும் தள்ளிப் போடப்பட்ட வெற்றியாகவே இருக்கும். தோல்வி என்பதை அவமானமாகக் கருதாது, ஒரு அனுபவமாக எதிர்கொள்ளவும் பழக்க வேண்டும். இப்படித்தான் பள்ளிகளில் சராசரியாக வளையவரும் மாணவர்கள் பின்னாளில் அசத்தும் வெற்றியாளர்களாக மாறுகிறார்கள். அக்கறையும் புரிதலும் உடைய பெற்றோர்கள் இம்முறையைப் பின்பற்றுவதே முதிர்ச்சியான வளர்ப்பு முறையாக இருக்கும்” என்கிறார் சிவகுமார்.

தேவை தொடர் கண்காணிப்பு

எதிர்பார்த்த மதிப்பெண் பெறாதது, விரும்பிய உயர்கல்வி கிடைக்காதது போன்ற காரணங்களுக்காக மனம் உடைந்துபோகும் மாணவர்கள் இருக்கிறார்கள். இவர்களில் பலருக்கு மனச்சோர்வு, மன அழுத்தம், விரக்தி போன்றவை தற்காலிகமாக ஏற்படுவது இயல்பு. அந்தத் தருணங்களில் குடும்பத்தினரின் ஆதரவு சரியாகக் கிடைக்கும்போது அவர்கள் விரைவில் சகஜமாவார்கள்.

ஒரு சிலர் மட்டுமே இந்த மனநலப் பாதிப்பிலிருந்து மீள முடியாமல் தவிப்பார்கள். உயர் கல்வியில் கவனம் செலுத்த முடியாதது, சக மாணவர்களுடன் பழக முடியாதது. அதைத் தொடர்ந்து கல்லூரிப் படிப்பில் தோல்வி, தேவை அற்ற சகவாசம், படிப்பைப் பாதியில் நிறுத்துவது உள்ளிட்டவையாகவும் அவை மாறக்கூடும். எனவே தேர்வு முடிவுகளை முன்னிட்டு அன்று ஒருநாள் மட்டும் மாணவர்களை அக்கறையாகப் பார்த்துக்கொண்டால் போதாது. தோல்வி மனப்பான்மையிலிருந்து அவர்கள் முழுமையாக மீண்டு, அடுத்த கட்டச் செயல்பாடுகளில் உற்சாகமாக ஈடுபடும் வரை தொடர் கண்காணிப்பு அவசியம்.

தற்கொலை மனப்பான்மையைத் தவிர்க்க

தோல்வி மனப்பான்மையில் சோர்ந்து கிடக்கும் மாணவர்களுக்கு உரிய ஆறுதலும் அரவணைப்பும் கிடைக்காதபோது அது நீடித்த மன நலப் பாதிப்புகளைத் தந்துவிடும் என்கிறார் திருச்சி மருத்துவ உளவியல் நிபுணர் டி.ரன்தீப் ராஜ்குமார். எந்த வயதினராக இருந்தாலும் எதிர்பார்த்தது நடக்காதபோது மன அழுத்தம் ஏற்படுவது சகஜம். அதிலும் தோல்வியை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லாதவர்களும், இந்தச் சூழலில் உணர்வுகளைப் பகுத்து ஆராயத் தெரியாதவர்களுமான இளம் வயதினர் அடையும் இடர்ப்பாடுகள் ஏராளம். தற்கொலை மனப்பான்மை, அது குறித்த பேச்சு, அதற்கு முயற்சிப்பது போன்றவையும் சிலரிடத்தில் காணப்படலாம். மற்றவரைத் தன் பக்கம் கவனிக்கச் செய்யவும், அதன் மூலம் தனக்குத் தேவையான ஆறுதலைப் பெறவுமே இது போன்ற முயற்சிகளில் ஈடுபடுவோரின் நோக்கம் இருக்கும்.

இந்தக் கோரிக்கை அலட்சியப்படுத்தப்படும்போது, தற்கொலை மனப்பான்மை தீவிரமாகும். கவனிப்பாரின்றி அதுவே நீடிக்கும்போது ஆறுதல் தேடிய மனம் தற்கொலை முயற்சி வழியாகத் தீர்வு காணவும் முயலும். தோல்வியின் முதல் கட்டமாக எழும் மனச்சோர்வு மற்றும் ஆளுமை தடுமாற்றங்களுக்குப் பெற்றோர் மற்றும் குடும்பத்தினரின் அரவணைப்பு மூலமே தீர்வு காணலாம்.

“இத்தகைய சூழலில் தோல்வியடைந்த மாணவரிடம் அவருடைய குறைகளைக் குத்திக் காட்டுவதைத் தவிர்ப்பது, அவருடைய நேர்மறையான திறமைகளை நினைவுகூர்வது, உடனடி தேர்வு மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிப்பது, காயப்படுத்தும் எதிர்மறையாளர்களைத் தவிர்ப்பது, இடமாற்றம், மாணவருக்குப் பிடித்த உறவினர் அல்லது ஆசிரியருடன் சந்திப்பு உள்ளிட்டவற்றைப் பெற்றோர் முயற்சிக்கலாம். இவை மூலம் ஆரம்ப நிலையிலேயே தோல்வி மனப்பான்மையின் தீவிரம் மனநலப் பாதிப்பாக மாறாமல் தடுக்கலாம்.

ஒரு வேளை தோல்வி அடைந்த மாணவர்கள் தற்கொலை குறித்துப் பேசினால், சிறு உடற்காயங்களை ஏற்படுத்திக்கொண்டால், தனித்திருந்தால், சுபாவத்தை இழந்து செயல்பட்டால், உறக்கம் இல்லாமல் இருந்தால், சரியாகச் சாப்பிடவில்லை என்றால் உடனடியாக மனநல ஆலோசனையை நாட வேண்டும். நிச்சயமாக அதன் மூலம் மாணவர் தனது பாதிப்பிலிருந்து முழுமையாக மீள முடியும்” என்கிறார் ரன்தீப் ராஜ்குமார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x