Published : 15 Aug 2016 02:54 PM
Last Updated : 15 Aug 2016 02:54 PM

கார்களின் பாதுகாப்புக்கு தரச் சான்று

கார்களின் செயல்பாடுகளுக்கு நிறுவனங்கள் வாரண்டி அளிப் பது வழக்கம். அதேபோல பாதுகாப்பான பயணத்தை அளிக்கும் கார்களின் தரம் குறித்து பரிசீலித்து அவற்றின் பாதுகாப்புத் தன்மைக்கேற்ப நட்சத்திர குறியீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

புதிய கார் மதிப்பீட்டு திட்டத்தின் கீழ் (என்சிஏபி) நட்சத்திர குறியீடு வழங்கும் முறையை அறிமுகப்படுத்த உள்ளது.

தொடக்கத்தில் கார் உற்பத்தியாளர் கள் தாமாக முன்வந்து தங்களது காரின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து பதிவு செய்து அதன் அடிப்படையில் நட்சத்திரக் குறியீடு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

முன் பகுதியில் விபத்து ஏற்பட்டால் அல்லது பக்கவாட்டில் மோதல் நிகழ்ந்தால், குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் சாலையில் நடந்து செல்வோரின் பாதுகாப்பு உள்ளிட்டவை எந்த அளவுக்கு பாதுகாக்கப்படுகிறது என்பதன் அடிப்படையில் நட்சத்திர குறியீடு அளிக்கப்படும்.

சர்வதேச அளவிலான நட்சத்திர குறியீடு வழங்கும் அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் சில இந்திய கார் தயாரிப்பு நிறுவனங்களின் தயாரிப்பு முழுமையான பாதுகாப்பு அம்சங்களைப் பூர்த்தி செய்யவில்லை.

இதையடுத்தே இந்திய கார்களின் பத்திரத் தன்மை குறித்து நட்சத்திர குறியீடு வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

விபத்து நிகழ்ந்தால் முன்பகுதியில் எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்படும், பக்கவாட்டில் நிகழ்ந்தால் எந்த அளவுக்கு கார் தாக்குப் பிடிக்கும் என்பது தொடர்பாக யூனிசெப் அமைப்பு சில வழிகாட்டுதலை வழங்கியுள்ளது. இதை 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து புதிய கார்களுக்கு அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. 2019-ம் ஆண்டு முதல் அனைத்து கார்களுக்கும் இது கட்டாயமாகும்.

காப்பீட்டில் அலட்சியம்

வாகனக் காப்பீட்டில் மக்களிடையே மிகுந்த அலட்சிய போக்கு காணப்படுகிறது. பொதுவாக காப்பீடு குறித்த விழிப்புணர்வு மக்களிடையே போதுமான அளவு இல்லை. தனி நபர் காப்பீடு, வாகனக் காப்பீடு என இவற்றில் விதி விலக்கே கிடையாது. எத்தகைய காப்பீடையும் மக்கள் சிறிதும் பொருட்படுத்துவதில்லை என்பதற்கு சமீபத்திய ஆய்வுகள் அதிர்ச்சிகரமான முடிவுகளை வெளியிட்டுள்ளன.

இந்தியாவில் இயக்கப்படும் இருசக்கர வாகனங்களில் 60 சதவீத வாகனங்கள் காப்பீடு செய்யப்படாமல் இயக்கப்படுகின்றன. அதேபோல நான்கு சக்கர வாகனங்களைப் பொறுத்தமட்டில் 40 சதவீத வாகனங்கள் காப்பீடு செய்யப்படவில்லை.

பொதுவாக வாகனங்கள் புதிதாக வாங்கும்போது அவற்றுக்கு காப்பீடு ஓராண்டுக்கு வழங்கப்படுகிறது. வாகனம் வாங்குவோர் இது கட்டாயம் என்பதால் பணத்தை செலுத்துகின்றனர். அடுத்து வரும் ஆண்டுகளில் காப்பீட்டை புதுப்பிப்பதில்லை. இந்த வகையில் காப்பீடு செய்யப்படாத வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

காப்பீடு செய்யப்படாத வாகனங்கள் விவரங்களை சேகரித்து ரூ. 2 ஆயிரம் முதல் ரூ. 4 ஆயிரம் வரை அபராதம் விதிக் கலாம் என்ற மத்திய அரசின் யோசனை யை காப்பீட்டு நிறுவனங்கள் வரவேற் றுள்ளன. இதேபோல சாலை விபத்து களில் உயிரிழப்போருக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற நிபந்தனையை அரசுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள் வரவேற்றுள்ளன.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x