Published : 16 Jan 2017 12:00 PM
Last Updated : 16 Jan 2017 12:00 PM

யாகூ, இனி அல்டபா!

யாகூவின் எதிர்காலம் என்ன வாகும் என கடந்த மே மாதம் வணிக வீதியில் கட்டுரை எழுதி இருந்தோம். அதனைத் தொடர்ந்து பல மாற்றங்கள் யாகூ நிறுவனத்தில் நடந்துள்ளன. கடந்த ஜூலை மாதம் யாகூ நிறுவனத்தை வெரிசான் நிறுவனம் 480 கோடி டாலருக்கு கையகப்படுத்துவதாக அறிவித்தது. ஆனால் இந்த இணைப்பு இதுவரை முழுமையடையவில்லை.

யாகூ தொடரும் ஆனால்?

யாகூ என்னும் பெயர் இனி இல்லையா என பதட்டப்பட வேண்டாம். மெயில் உள்ளிட்ட சில சேவைகளில் யாகூ என்னும் பெயர் தொடரும். அப்படியானால் அல்டபா என்னும் பெயர் எதற்கு என்று தோன்றும். கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம். வெரிசான் நிறுவனம் யாகூவை கையகப்படுத்தியபோது மொத்த நிறு வனத்தையும் வாங்கவில்லை. யாகூ மெயில், யாகூ செயலி, ஸ்போர்ட்ஸ் சேவைகள் மற்றும் சில செயலிகளை மட்டுமே வெரிசான் வாங்கியது.

அலிபாபா நிறுவனத்தில் யாகூ நிறுவனத்துக்கு 15 சதவீத பங்கு இருக்கிறது. தவிர யாகூ ஜப்பான் நிறுவனத்தில் யாகூ நிறுவனத்துக்கு 35.5 சதவீத பங்குகள் இருக்கிறது. இது தவிர சில முதலீடுகள் இருக்கிறது. இவை அனைத்தும் தனியாக ஒரு நிறுவனமாக இருக்கும். இந்த நிறுவனத்துக்கு அல்டபா என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த முதலீடுகளின் மதிப்பு சுமார் 4,000 கோடி டாலர் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அதே சமயத்தில் யாகூ என்னும் என்னும் பெயரை அப்படியே பயன்படுத் தவும் வெரிசான் முடிவெடுத்திருப்ப தாகத் தெரிகிறது. alternative மற்றும் Alibaba என்னும் வார்த்தைகளின் இணைப்பு வார்த்தையாக அல்டபா இருக்கும் என பெயர் காரணம் கூறுகின்றனர்.

இணைப்பு நடைபெறுமா?

பெயரை மாற்றுவதாக அமெரிக்க பங்குச்சந்தை ஒழுங்குமுறை (எஸ்இசி) நிறுவனத்துக்கு யாகூ நிறுவனம் கடந்த திங்கள் கிழமை அறிவித்தது. நிறுவனத் தின் பாதி பிரிவுகள் விற்கப்படுகின்றன என்பதால்தான் புதிய பெயரை அறிவித்தது. ஆனால் இப்போது வெரிசான் நிறுவனம் யாகூவின் முக்கியமான தொழில்களை வாங்குமா என்பது கேள்விகுறியாகி உள்ளது.

கடந்த 2013 மற்றும் 2014 ஆண்டு களில் 100 கோடி யாகூ வாடிக்கை யாளர்களின் தகவல்கள் திருடப்பட்ட தாக சமீபத்தில் தகவல் வெளியானது. இந்த தகவல் திருட்டு குறித்து விசா ரித்து வருவதாகவும், இணைப்பு குறித்து இன்னும் வெரிசான் முடிவெடுக்க வில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

மரிஸா ராஜினாமா?

தகவல் திருட்டு குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது என வெரிசான் நிறு வனம் தெரிவித்திருந்தாலும், இந்த இணைப்பு நடைபெறும் பட்சத்தில் பெயர் மாற்றம் தவிர வேறு என்ன நடக் கும் என்பது குறித்தும் யாகூ தெரிவித் திருக்கிறது. இணைப்பு முழுமை யடையும் பட்சத்தில் தற்போதைய தலைமைச் செயல் அதிகாரி மரிஸா மேயர் ராஜினாமா செய்ய இருப்பதாக அமெரிக்க பங்குச்சந்தை அமைப்புக்கு அளித்த அறிக்கையில் யாகூ தெரிவித்திருக்கிறது. மரிஸா மட்டுமல்லாமல் நிறுவனர்களில் ஒருவரான டேவிட் ஃபிலோ மற்றும் இதர நான்கு இயக்குநர்களும் வெளியேற இருப்பதாக யாகூ தெரிவித்திருக்கிறது. நிறுவனத்தின் புதிய தலைவராக எரிக் பிராண்டிட் தொடர்வார் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

யாகூவில் இருந்து மரிஸா வெளியேற்றப்பட்டால் அவருக்கு 5.5 கோடி டாலர் தொகை இழப்பீடு கிடைக்கக் கூடும். ஏற்கெனவே அல்டபா நிறுவனத்தில் இடம் இல்லை என்பது தெளிவாகிவிட்டது. அதேசமயம் வெரிசான் கையகப்படுத்தும் யாகூ பிரிவுகளை மரிஸா கவனிப்பாரா என்பது இதுவரை தெளிவாகவில்லை.

2012-ம் ஆண்டு யாகூ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக மரிஸா நியமனம் செய்யப்பட்டார். இவர் பொறுப்பேற்ற பிறகு பல நிறுவனங்களை கையகப்படுத்தினார். ஆனால் நிறுவனங்கள் சரியாக செயல் படவில்லை. தவிர நிறுவனத்தின் செயல் பாடு காரணமாக முதலீட்டாளர்களிடம் இருந்தும் கடும் விமர்சனங்களை சந்தித்தார்.

இந்த நிலையில் தகவல் திரட்டு விஷயத்தை யாகூ எப்படி கையாளும், இணைப்பு நடைபெறுமா, தகவல் திருட்டு விஷயத்துக்காக எதிர்காலத்தில் இழப்பீடு கொடுக்க வேண்டி இருந்தால் எப்படி, யார் கொடுப்பது? என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x