Published : 14 Nov 2013 12:00 AM
Last Updated : 14 Nov 2013 12:00 AM

சிறு துவாரம் மூலம் சிறுமிக்கு இதய அறுவை சிகிச்சை - சென்னை அரசு பொதுமருத்துவமனையில் சாதனை

தமிழக அரசு மருத்துவமனைகளில் முதன் முறையாக, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனை, 17 வயது சிறுமிக்கு சிறு துவாரம் மூலம் இதய அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளது.

திருவாரூர் மாவட்டம், அலிவலம் கிராமத்தைச் சேர்ந்தவர் வளர்மதி(17). கூலித் தொழிலாளி மகளான இவர், அலிவலம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 தேர்ச்சி பெற்று, இந்தாண்டு பிளஸ் 2 படித்துக் கொண்டு இருந்தார். இச்சூழலில், இதய நோய் பாதிப்பு காரணமாக பிளஸ் 2 படிப்பை பாதியில் நிறுத்தினார்.

இந்நிலையில், வளர்மதிக்கு சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனை, சிறு துவாரம் மூலம் இதய அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளது.

இதுகுறித்து, ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையின் இதய அறுவை சிகிச்சைத் துறைத் தலைவர் டாக்டர் ராஜாவெங்கடேஷ், பேராசிரியர் டாக்டர் கே.எஸ். கணேசன் ஆகியோர் செய்தியாளர்களிடம் புதன் கிழமை தெரிவித்ததாவது:

பிறவியிலேயே இதய நோயால் பாதிக்கப்பட்டவர் சிறுமி வளர்மதி. இதயத்தின் இரு ஆரிக்கிள்களுக்கும் மையத்தில் 5 செ.மீ., அளவில் துவாரம் ஏற்பட்டுள்ளது.அதன் காரணமாக, அசுத்த இரத்தமும், சுத்த இரத்தமும் கலந்து மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்துள்ளார். வளர்மதி மேல் சிகிச்சைக்காக கடந்த செப்டம்பர் 28-ம் தேதி ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

வழக்கமாக, இதய நோயாளிகளுக்கு மார்பின் மையப்பகுதியில், ஸ்டெர்னம் எனப்படும் எலும்பை 15 செ.மீ., அளவுக்கு வெட்டி மார்பை திறந்து, இதயப் பிரச்சினையை சரி செய்வதற்குப் பதில்,(Open Heart surgery) வளர்மதிக்கு சிறு துவாரம்(Minimally invasive cardiac surgery) மூலம் இதய அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி, அக்டோபர் 22-ம் தேதி, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் பேராசிரியர் டாக்டர் கே.எஸ். கணேசன், டாக்டர்கள் நந்தகுமார், விநாயக் செந்தில் மற்றும் மயக்க மருத்துவர் பேராசிரியர் லட்சுமி உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் வளர்மதிக்கு சிறு துவாரம் மூலம் அறுவை சிகிச்சை செய்தனர்.

வளர்மதியின் வலது மார்புக்கு கீழ்ப் பகுதியில் 4 செ.மீ., அளவுக்கு ஒரு துவாரம் செய்து, வலதுபக்க நுரையீரலை செயலிழக்க வைத்து, அதன் மூலம் இதயம் நிறுத்தப்பட்டு மூன்றரை மணி நேரம் இந்த அறுவை சிகிச்சை நடந்தது.

இரத்த இழப்பு, எலும்பு இழப்பு எதுவும் இல்லாமல் செய்யப்பட்ட இந்த அறுவை சிகிச்சையினால், வழக்கமான இதய அறுவை சிகிச்சை பெற்ற நோயாளிகள் எடுக்க வேண்டிய ஆறு மாத ஓய்வு தவிர்க்கப்பட்டுள்ளது. தற்போது அறுவை செய்யப்பட்ட நான்காம் நாளே எடை தூக்கும் அளவிற்கு தயாராகி உள்ள வளர்மதி பூரண குணமடைந்துள்ளார். அவர் மீண்டும் பிளஸ் 2 படிப்பை தொடர உள்ளார்.தமிழக அரசு மருத்துவமனைகளில் முதன் முறையாக, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனைதான், சிறு துவாரம் மூலம் இதய அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளது.

தனியார் மருத்துவமனைகளில் ரூ.5 லட்சம் செலவாகும் இந்த இதய அறுவை சிகிச்சை முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் இலவசமாக செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x