Last Updated : 24 Feb, 2017 09:52 AM

 

Published : 24 Feb 2017 09:52 AM
Last Updated : 24 Feb 2017 09:52 AM

நாடோடிப் பாடகன்!

இசையின் வரலாறு நெடியது. இந்த உலகுக்கு இசையை யார் முதலில் அறிமுகம் செய்தது என்ற விவரங்கள் எல்லாம் யாருக்குமே தெரியாது. ஆனால், இசையைப் பதிவு செய்யும் வரலாற்றுக்கு ஒரு தொடக்கம் உண்டு. அந்த வரலாறு தாமஸ் ஆல்வா எடிசனிலிருந்து தொடங்குகிறது.

காது கேளாத ஒருவர், ஒலிகளைப் பதிவு செய்வதற்கான கருவியை நமக்கு அளித்துவிட்டுச் சென்றார் என்பது ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? ஆம். 1877-ம் ஆண்டு எடிசன் கண்டுபிடித்த ‘போனோகிராஃப்’ என்ற கருவிதான் முதன்முதலில் ஒலிகளைப் பதிவு செய்வதற்கு உதவியது. சிறு வயதிலிருந்து எடிசனுக்குக் காது கேட்காது என்பது குறிப்பிடத்தகுந்த விஷயம்.

பிற்காலத்தில், பல இசைக் கலைஞர்கள் தங்களின் இசையை இவ்வாறு வட்ட வடிவத் தட்டுகளில் பதிவு செய்து விற்பனை செய்து வந்ததால், இசைத் துறை ‘ரெக்கார்டிங் இண்டஸ்ட்ரி’ என்றும் அழைக்கப்பட்டது. என்றாலும், இசைத் துறைக்கும், பதிவுத் துறைக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. இசைத் துறையின் ஓர் அங்கம்தான் ‘ரெக்கார்டிங்’. இசைக் கலைஞர்கள் மேடைகளில் நிகழ்த்தும் படைப்புகளைப் பதிவு செய்து, அவற்றை விற்பனைக்குக் கொண்டு செல்வதுதான் இந்த ரெக்கார்டிங் துறையின் முக்கியப் பணி.

இந்த ரெக்கார்டிங் உலகை, பிரான்ஸ் நாட்டின் ‘யுனிவெர்சல் மியூஸிக் குரூப்’, ஜப்பானின் ‘சோனி மியூஸிக் என்டர்டெயின்மென்ட்’ மற்றும் அமெரிக்காவின் ‘வார்னர் மியூஸிக் குரூப்’ ஆகிய மூன்று நிறுவனங்கள்தான் (ரெக்கார்டிங் உலக‌ மொழியில் ‘லேபிள்ஸ்’) ஆட்சி செய்துவருகின்றன. இந்த மூன்றையும் சார்ந்து நிற்காமல் தங்களின் படைப்புகளைத் தாங்களே சுதந்திரமாக வெளியிட்டுக்கொள்ளும் இசைக் கலைஞர்களை, அவர்களது படைப்புகளை ‘இண்டிபெண்டென்ட் லேபிள்ஸ்’ அல்லது சுருக்கமாக‌ ‘இண்டீஸ்’ என்று அழைக்கின்றனர்.

இவ்வாறு ஒரு ‘இண்டீ’யாக இருந்தவர்தான் அபி. டிஜிட்டல் இசைத் தளமான ‘ஸ்பாட்டிஃபை’ தளத்தில், இவர் பதிவேற்றிய ‘வேர் ஆர் மை ஃப்ரெண்ட்ஸ்’ எனும் ஆல்பத்தை இதுவரை பல லட்சம் பேர் கண்டுகளித்திருக்கிறார்கள். அந்தத் தளத்தில் தனக்கென சுமார் 93 ஆயிரம் நேயர்களைக் கொண்டிருக்கும் அவருக்கு, ‘வார்னர் மியூஸிக் குரூப்’பின் ஓர் அங்கமான ‘டாமி பாய்’ இசைக் குழுவில் இணைந்து இசைப் படைப்புகளை உருவாக்குவதற்கான வாய்ப்புக் கிடைத்துள்ளது.

இதில் சிறப்பு என்னவென்றால்... அபி, தமிழர்! அமெரிக்காவின் புகழ்பெற்ற இசை நிறுவனத்தில் தமிழர் ஒருவர் இடம்பிடித்திருப்பது எவ்வளவு பெருமைக்குரிய விஷயம். விடுவோமா நாம்? மின்னஞ்சல் மூலம் அவரைத் தொடர்பு கொண்டு பேசியதிலிருந்து...

‘அபி தி நொமாட்’ என்று உங்களின் ஃபேஸ்புக் பக்கத்துக்குப் பெயர் சூட்டியிருக்கிறீர்கள். என்ன‌ காரணம்?

பெயரைச் சுருக்கிக் கொள்ளவில்லை. முழுப்பெயரே அபி தான். நான் சென்னையில் 1993-ல் பிறந்தவன். ஆனால், என் அப்பாவின் வெளியுறவுத் துறைப் பணி காரணமாக, என் வாழ்நாள் முழுவதும் நாடு நாடாகப் பயணம் செய்துகொண்டிருக்கிறேன்.

என் நாடோடி வாழ்வு முறையை அடிப்படையாகக் கொண்டே ‘அபி எனும் நாடோடி’ (அபி தி நொமாட்) என்று பெயர் சூட்டிக்கொண்டேன். இப்படி நாடு நாடாகப் பயணிப்பது, என்னை ஒரு மனிதனாக உருவாக்கியிருக்கிற‌து என்று நினைக்கிறேன். இந்த வாழ்வு முறையை நான் யாராக இருக்கிறேன் என்பதன் ஒரு அங்கம் என்றே புரிந்துகொள்கிறேன்.

சென்னை, டெல்லி, பெய்ஜிங், ஹாங்காங், ஃபிஜித் தீவுகள், அமெரிக்கா, தற்போது பிரான்ஸ் என்று என் கல்விப் பயணம் தொடர்கிறது. பன்னாட்டுப் பள்ளிகளில் படித்தேன். பின்பு அமெரிக்காவில் இசையமைப்பதிலும் இசைப் பதிவு செய்யும் படிப்பிலும் இளங்கலைப் பட்டம் பெற்றேன். இசைக் கலைஞனாக நான் உருவாகிக் கொண்டிருந்தாலும், இப்போது இசையில் மேற்படிப்பு படிக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறேன்.

இசையில் எப்படி இவ்வளவு நாட்டம்?

12 வயதில் என் ‘மேக்புக்’ லேப்டாப்பில் ‘கராஜ்பேண்ட்’ என்னும் இசை மென்பொருளில் விளையாட்டாக இசையை உருவாக்க ஆரம்பித்தேன். முதலில் சின்னச் சின்ன விஷயங்கள் செய்து பார்த்தேன். பிறகு முழுப் பாடல்களையும் உருவாக்கினேன். என்னால் செய்ய முடியும் என்ற நம்பிக்கை கிடைக்கும் வரையில், விளையாட்டாகத்தான் செய்து வந்தேன்.

தவிர, எனக்கு கிட்டார், பேஸ் கிட்டார், கீ போர்ட் மற்றும் பியானோ போன்றவற்றை வாசிக்கத் தெரியும். சின்ன வயதில் கிட்டார் வகுப்புகளுக்குப் போனேன். ஆனால் அது பெரும்பாலும் தண்டம்தான். கூகுளில் தேடித் தேடி நானாகக் கற்றுக்கொண்டதுதான் அதிகம்.

நீங்கள் ‘ஹிப் ஹாப்’ இசை வடிவத்தைத் தேர்ந்தெடுக்கக் காரணம் என்ன?

நான் தேர்ந்தெடுக்கவில்லை. அதுதான் என்னைத் தேர்வு செய்துகொண்டது என்பதுதான் சரி. என் இசை இந்த வகைப்பட்டது என்று வரையறுக்க மாட்டேன். ஆனால் அதில் ‘ஹிப்-ஹாப்’ அடித்தளமாக அமைந்துள்ளது என்பது நிஜம்.

சிறு வயதில், கன்யே வெஸ்ட் என்பவரின் ஹிப்-ஹாப் இசையைக் கேட்டேன். நான் எதிர்பார்க்காத வகையில் என் நெஞ்சை அது தொட்டது. அப்போதிலிருந்து ஹிப் ஹாப் காதல் தொடர்கிறது.

நீங்கள் முன்னர் செய்த இசை ஆல்பங்கள் குறித்து... அவை என்ன மாதிரியான விஷயங்களைப் பேசுகின்றன..?

கடந்த பத்து வருடங்களில் நான் நூற்றுக்கணக்கான பாடல்களை உருவாக்கியிருக்கிறேன். என்றாலும், ‘அபி எனும் நாடோடி’ என்கிற பெயரில் அதிகாரபூர்வமாக இணையதள விற்பனைக்காக இதுவரை மூன்று இசை ஆல்பங்கள் வெளியிட்டிருக்கிறேன். ‘ஆரம்பம்’ (Beginning), ‘எங்கே என் நண்பர்கள்?’ (Where Are My Friends), ‘உணர்ச்சிவடிகால்’ (Catharsis) எனும் இந்த ஆல்பங்களை இணையதளத்தில் கேட்கலாம்.

என் பாடல்கள் பெரும்பாலும் வளர்ச்சி, அன்பு, சமூகம், மரணம், நவீன வாழ்வு, தொழில்நுட்பம் போன்ற விஷயங்களைப் பற்றிப் பேசுகின்றன. நாடோடிப் பயணம் பற்றியும், ‘வீடு’ எனும் உருவகம் பற்றியும் நான் பலமுறை பாடல்களில் எழுதியிருக்கிறேன்.

அந்த ஆல்பங்களுக்கு இசை ரசிகர்களிடம் வரவேற்பு எப்படி..?

என் ரசிகர்கள்தான் என் பலம். ஆரம்பத்திலிருந்தே என் பாடல்களைத் தொடர்ந்து மெச்சிப் பகிர்ந்து வருகிறார்கள். எப்போதும் என்னை உற்சாகப்படுத்திக் கொண்டேயிருக்கிறார்கள்.

ஒரு கலைஞனும் அவன‌து ரசிகர்களும் பல அடுக்குகளில் தொடர்பு கொள்வ‌து என்பது அற்புதமான விஷயம். என் இசையில் நான் வெளிப்படுத்தும் உணர்ச்சிகளையும் எண்ணங்களையும் அவர்களின் வாழ்விலிருந்து அவர்களும் உணர்கிறார்கள். உதாரணமாக, ‘ஸ்பாட்டிஃபை’ எனும் ஒரு இணையதளத்தை மட்டும் எடுத்துக்கொண்டால், தற்போது ஒவ்வொரு மாதமும் ஏறத்தாழ 95 ஆயிரம் இசை ரசிகர்கள் என் இசையைக் கேட்கிறார்கள். ஒவ்வொருவரும் எத்தனை முறை கேட்கிறார்கள் என்று தெரியாது.

‘எங்கே என் நண்பர்கள்?’ எனும் ஆல்பத்தை மட்டுமே ஒரு மில்லியன் தடவைக்கு மேலாக என் இசை ரசிகர்கள் கேட்டிருக்கிறார்கள். இது போக, ஆப்பிள் ஸ்டோர், பேண்ட்கேம்ப், சவுண்ட்க்ளவுட், யூடியூப் போன்ற தளங்கள் மூலமாகவும் என் இசையை அணுகுபவ‌ர்களும் இருக்கிறார்கள். என் வருமானம் என் இணையதள ரசிகர்கள் மூலமே வருகிறது.

‘டாமி பாய் என்டர்டைன்மெண்ட்’ வாய்ப்பு எப்படி கிடைத்தது?

நான் விரும்பும் சில இசைக் கலைஞர்களின் இசையைக் கேட்கும் போது, ‘டாமி பாய்ஸ் என்டர்டைன்மெண்ட்’ எனும் இசை வெளியீட்டு கம்பெனி பற்றித் தெரிந்துகொண்டேன். அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் உள்ள இந்த கம்பெனி, வார்னர் இசைக் குழுமத்தைச் சேர்ந்தது. 1981-ம் ஆண்டு முதல் பல முக்கியமான இசைக் கலைஞர்களை உலகுக்கு அறிமுகப்படுத்தி பிரபலமாக்கிய கம்பெனி இது. ஆஃப்ரிக்கா பம்பாட்டா, குயின் லத்தீஃபா, ‘ஹவுஸ் ஆஃப் பெய்ன்’, ‘தெ லா சோல்’, ‘நாட்டி பை நேச்சர்’ போன்ற புகழ்பெற்ற‌ ‘ஹிப் ஹாப்’ கலைஞர்கள், இசைக் குழுக்கள் ஆகியவற்றுக்கு ‘பிள்ளையார் சுழி’ போட்டது இந்த ‘லேபிள்’தான் என்பது குறிப்பிடத்தக்கது.

‘டான்’ எனும் என்னுடைய எழுத்தாள நண்பர் என்னை அவர்களுக்கு ஆறு மாதங்களுக்கு முன் அறிமுகப்படுத்தினார். உடனே எனக்கு வாய்ப்புக் கிடைத்துவிட‌வில்லை. முதலில் அவர்கள் என்னை அழைத்துப் பேசினார்கள். பின் என் இசைத் திறன்களைக் கவனித்துக் கொண்டேயிருந்தார்கள். பிறகு, எனது சமீபத்திய ‘கதார்சிஸ்' ஆல்பத்தைக் கேட்ட பின்னர் அந்த கம்பெனி நண்பர்கள் எனக்கு இந்த வாய்ப்பை வழங்கியுள்ளனர்.

இந்திய இசை உள்ளிட்ட கீழைத் தேசங்களின் இசையைக் கேட்கிறீர்களா..? இசைத்துறையில் உங்களின் ரோல்மாடல்கள் யார்..?

இந்திய இசை உள்ளிட்ட கீழைத் தேசங்களின் இசையைக் கேட்பதில் எனக்கு ஆர்வம் உண்டு. பிறந்ததிலிருந்து பழைய தமிழ்த் திரைப்படப் பாடல்களும், கர்னாடக இசையும் என் பெற்றோர்களால் என் மூளைக்குள் நுழைந்துவிட்டன. என் இசையில் அவற்றின் தாக்கம் மிக அதிகம் என்றே நினைக்கிறேன்.

இசைத் துறையில் ‘ஜேஸ்’ மற்றும் ‘கன்யே வெஸ்ட்’ போன்றவர்கள் என் முன்மாதிரிகள் என்று சொல்லலாம். கலை உருவாக்கத்தில் அவர்கள் இசை, திரைப்படம், வடிவமைப்பு என்று பல துறைகளிலும் கிளை பரப்பி வெற்றி கண்டவர்கள். என்னிடம் அவர்களின் இசையின் தாக்கமும் நிறைய உண்டு.

இசைத் துறையில் உங்களின் லட்சியம்... எதிர்காலத் திட்டங்கள்..?

இந்தத் துறையில் மாபெரும் சாதனையாளனாக உருவாக வேண்டும். அற்புதமான இசைக் கலைஞர்களான ஜேஸ், மோஸ் டெஃப், தாலிப் க்வெலி, லூப் ஃப்யாஸ்கோ போன்றவர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். பின்னாளில் திரைப்படத் துறையிலும் கால் பதிக்க‌ வேண்டும். இப்படிப் பல எதிர்காலத் திட்டங்களைப் பட்டியலிடலாம்.

ஆனால், இவற்றைச் சாதிக்க‌, குறைந்தபட்சம் வரப்போகும் ஐந்து அல்லது பத்து வருட‌ங்களுக்காவது ‘நிரந்தர வேலை - நிர்ணயிக்கப்பட்ட சம்பளம்’ என்ற வட்டத்தில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க வேண்டும், என்பதே இப்போதைய என் லட்சியம்.

எட்டுத் திக்கும் பரவட்டும் உங்கள் இசை!

- இவரின் இசைப் படைப்புகள் பற்றி மேலும் அறிந்துகொள்ள
இங்கே சொடுக்கவும்: >https://www.facebook.com/abhithenomad/

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x