Published : 05 Feb 2017 01:04 PM
Last Updated : 05 Feb 2017 01:04 PM

திருச்சி மகளிர் திருவிழா: மலைக்கோட்டை வாசகிகளின் உற்சாகக் கொண்டாட்டம்!

நெய்வேலி, மதுரை வாசகிகளின் மனங்களைக் கொள்ளையடித்த ‘தி இந்து - பெண் இன்று’ மகளிர் திருவிழா, கடந்த ஜனவரி 29-ம் தேதி திருச்சி வாசகிகளை அசத்தியது. ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரியின் ஆர்.வி. அரங்கத்தில் இந்தத் திருவிழாவில் நூற்றுக்கணக்கான வாசகிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

விழாவில் கலந்துகொண்ட வாசகிகளை ‘தி இந்து’ இணைப்பிதழ்களின் ஆசிரியர் டி.ஐ. அரவிந்தன் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக வழக்கறிஞர் த. ஜெயந்தி ராணி, காவல்துறை ஆய்வாளர் ஷீலா, உதவி ஆய்வாளர் ஷண்முகபிரியா, கவிஞர் லால்குடி ஜோதி, ஆசிரியர் அன்னலட்சுமி, பேராசிரியர் ஜோதிலட்சுமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தற்காப்பே பெண்காப்பு!

திருச்சி கன்டோன்மென்ட் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஷீலாவுடனான கலந்துரையாடலில் வாசகிகள் சமூக ஆர்வத்துடன் பல கேள்விகளை எழுப்பினர். தனியாக இருக்கும் பெண்களின் பாதுகாப்பு, பேருந்துப் பயணங்களில் எதிர்கொள்ளும் பாலியல் சீண்டல்கள், செயின் பறிப்பு சம்பவங்கள் போன்றவை குறித்து இந்தக் கலந்துரையாடலில் வாசகிகள் கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது. அத்துடன், மாநகர ஆயுதப் படையைச் சேர்ந்த காவலர் ஆர்.அரவிந்தன் தலைமையில் கமாண்டோ பயிற்சி முடித்த பெண் காவலர்கள் வி.பஞ்சவர்ணம், ஆர்.சத்யா இருவரும் பெண்கள் எப்படித் தங்களைத் தற்காத்துக்கொள்வது என்பது தொடர்பாகச் செயல்முறை விளக்கம் அளித்தனர். துப்பட்டாவைப் பயன்படுத்தி எப்படி எதிரியிடமிருந்து தப்பிப்பது, கைப்பையைப் பறிக்க வரும்போது எப்படித் தடுப்பது, செயின் பறிப்பை எப்படிச் சமாளிப்பது உள்ளிட்ட பல தற்காப்பு செயல்முறை விளக்கங்கள் வாசகிகளுக்கு வழங்கப்பட்டன. இந்தத் தற்காப்பு செயல்முறை விளக்கங்களை மேடையில் வாசகிகளும் தன்னம்பிக்கையுடன் முயற்சி செய்துபார்த்தனர்.

அரங்கை அதிரவைத்த பறை

கரூர் சைக்கோ அறக்கட்டளை யின் ‘குட்டீஸ் ராஜ்ஜியம்’ கலைக் குழுவினரின் கிராமியக் கலை நிகழ்ச்சிகள் வாசகிகளை ஆட்டம்போடவைத்தன. சாட்டைக் குச்சி ஆட்டம், ஆதிவாசிகளின் இயற்கை மீதான நேசத்தை வெளிப்படுத்தும் ‘தம்சாலை’ ஆட்டம், பறையாட்டம், மான் கொம்பு ஆட்டம் உள்ளிட்டவை வாசகிகளை வெகுவாகக் கவர்ந்தன.

கலாட்டா நிகழ்வுகளும் பரிசு மழையும்

இந்தத் திருவிழாவின் ஒரு பகுதியாகப் பல விதமான போட்டிகளும் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றிபெற்ற வாசகிகளுக்கு மட்டுமல்லாமல் கலந்துகொண்டவர்களுக்கும் பரிசுகள் வழங்கப் பட்டன. இயற்கைப் பாதுகாப்பு என்ற தலைப்பில் நடைபெற்ற ரங்கோலி போட்டியில் பல வாசகிகள் கலந்துகொண்டனர். ‘கருவேல மரங்களை அழித்து, நிலத்தடி நீரைப் பாதுகாப்போம்’ என்ற கருப்பொருளில் ரங்கோலி போட்டிருந்த வாசகி பி. கௌசல்யா முதல் பரிசைத் தட்டிச்சென்றார்.

‘மைமிங்’ எனப்படும் வசனமில்லா நாடகப் போட்டியில் வாசகிகள் தங்களுடைய படைப்பாற்றலை வெளிப்படுத்திப் பரிசுகளைத் தட்டிச்சென்றனர். அத்துடன், கோலி-ஸ்பூன் போட்டி, ரப்பர்பேண்ட்டில் செயின் செய்யும் போட்டி, பந்து பாஸ் செய்தல் போட்டி உள்ளிட்ட பல்வேறு சுவாரஸ்மான போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவின் இடையிடையே ‘பெண் இன்று’ இணைப்பிதழ் தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டு, சரியான பதிலைச் சொன்னவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. அத்துடன், திடீர் போட்டியில் பழைய மாடல் செல்போன் வைத்திருந்த வாசகி, பாப் கட் செய்திருக்கும் வாசகி உள்ளிட்டவர்களுக்கு ஆச்சர்யப் பரிசுகளும் வழங்கப்பட்டன. வாசகிகள் கிருஷ்ணவேணி, மாணிக்கவாசகி, சரோஜா, பொன்னம்மாள் உள்ளிட்டோர் பம்பர் பரிசுகளைத் தட்டிச்சென்றனர். ‘பெண் இன்று’ மகளிர் திருவிழாவின் பரிசு மழையால் வாசகிகள் நனைந்தனர். காலை நிகழ்ச்சியைப் பேராசிரியர் ஜெயலட்சுமியும், பிற்பகல் நிகழ்ச்சியை சின்னத்திரை நடிகை தேவி கிருபாவும் தொகுத்து வழங்கினர்.

‘தி இந்து’ தமிழ் நாளிதழுடன் லலிதா ஜூவல்லரி, சென்னை சில்க்ஸ், கரூர் எச் டு எச் ஆரஞ்ச் இம்பெக்ஸ், திருச்சி ராசி புராடெக்ட்ஸ், ஹால்மார்க் பிசினஸ் ஸ்கூல், பொன்மணி வெட்கிரைண்டர்ஸ், திருச்சி ஈட்-ரைட், தமிழ்நாடு பனானா புரொடியூசர் கம்பெனி, தஞ்சாவூர் ஃபார்ம் புராடெக்ட்ஸ், சமயபுரம் எஸ்.ஆர்.வி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஹோட்டல் ரம்யாஸ் பிரைவேட் லிட்., ஜெஃப்ரானிக்ஸ், ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரி, ஈரோடு ப்ரெசிசன் பார்ம் புரொடியூசர் கம்பெனி, குமுதம் ஆன்-லைன் ஷாப்பிங் உள்ளிட்ட நிறுவனங்கள் நிகழ்ச்சியை இணைந்து வழங்கின.

காக்கும் சட்டங்கள்

“வீட்டிலேயே நிம்மதியாக இருந்தோமா என்றில்லாமல் என் உரிமைகள் எனக்கு வேண்டும் எனக் கேட்டு கோர்ட்டுக்குப் போவது சாத்தியமா என்கிற கேள்வி பொதுவாகவே பெரும்பாலான பெண்களுக்கு எழுகிறது. ஆனால், கருவறை முதல் கல்லறைவரை பெண்களுக்கென்றே 80-க்கும் மேற்பட்ட பிரத்யேகச் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. ஒவ்வொரு சட்டத்துக்கும் நீண்ட நெடிய வரலாறு உண்டு. 15 வருடங்களுக்கு முன்பு டெல்லியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கருவிலேயே பெண்ணை அழிக்கக் கர்ப்பிணிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. இந்தக் கொடுமையைத் தடுக்கவே ஸ்கேனிங் மையங்களில் குழந்தையின் பாலினத்தை அறிவிக்கக் கூடாது என்ற

சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அதேபோல பாலியல் வன்முறை தொடர்பான தனிச் சட்டம், நிர்பயா சம்பவத்துக்குப் பிறகுதான் கொண்டுவரப்பட்டது. பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளைப் பாலியல் துன்புறுத்தலில் இருந்து பாதுகாக்க, குழந்தைத் திருமணத்தைத் தடுக்க, பணிச் சூழலில் பெண்களைப் பாதுகாக்க என ஒவ்வொரு கட்டத்திலும் பெண்களுக்கெனப் பல சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பற்றிய விழிப்புணர்வு இன்றியமையாதது” என்றார் வழக்கறிஞர் ஜெயந்தி ராணி.

தேவை மனவலிமையே!

நிகழ்ச்சியில் பங்கேற்ற வாசிகளிடம், “இன்று நீங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் என்னவென்று வெளிப்படையாகப் பகிர்ந்துகொள்ளுங்கள்” என்று எடுத்த எடுப்பிலேயே கலந்துரையாடத் தொடங்கினார் திருச்சி மாவட்டக் காவல் ஆய்வாளர் ஷீலா. தங்களுடைய பிரச்சினைகளை உரக்கச் சொன்ன வாசகிகளுக்கு நம்பிக்கை தரும் விதமாக வழிகாட்டினார். “குழந்தைகளைக் கட்டுப்படுத்திக்கொண்டே இருக்காதீர்கள். அதற்குப் பதிலாகச் சூழலை எப்படி அணுகுவது எனச் சொல்லிக்கொடுங்கள். பிரச்சினை ஏற்படும்போது காவல்துறை உங்கள் நண்பன் என்பதை நம்பி எங்களை அணுகுங்கள்” என்றார்.

நூற்றாண்டு போராட்டம்

‘யாருக்குச் சுமை அதிகம்? வேலைக்குச் செல்லும் பெண்களுக்கா? இல்லத்தரசிகளுக்கா?’ என்ற தலைப்பில் கலகலப்பாகத் தொடங்கியது பேச்சரங்கம். “உலகத்தைக் கற்றுத் தருவது வீடல்ல, சமூகம்தான். நாற்று நடுவது முதல் நாட்டை ஆள்வதுவரை வெளியுலகில் பெண்கள் சந்திக்கும் சவால்கள் ஏராளம். ஆகவே வேலைக்குச் செல்லும் பெண்களுக்குத்தான் சுமை அதிகம்” என்றார் பேராசிரியர் ஜோதி லட்சுமி.

“வேலைக்குச் செல்லும் பெண்களுக்குக் குடும்பத்தாரின் கூடுதல் மரியாதையும் பணிச் சுமையைக் குறைக்கும் விதமாக ஒத்துழைப்பும் கிடைக்கிறது. ஆனால் அத்தனையும் செய்தாலும் அங்கீகாரம் இல்லாமல் மீண்டும் மீண்டும் வீட்டு வேலையில் உழலுபவர்கள் இல்லத்தரசிகளே” என்று வலுவாக எதிர்வாதத்தை முன்வைத்தார் அன்னலட்சுமி. இருவரின் வாதங்களையும் அலசிய நடுவர் லால்குடி ஜோதி, “வேலைக்குச் செல்லும் உரிமையைப் பெறப் பல நூற்றாண்டுகளாகப் பெண்கள் போராடியிருக்கிறார்கள். அப்படிப் பெற்ற உரிமையைத் தக்கவைத்துக்கொள்ள அவர்கள் அதிகச் சுமையைச் சுமக்க வேண்டியுள்ளது” எனத் தீர்ப்பு வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x