Last Updated : 27 Aug, 2016 02:17 PM

 

Published : 27 Aug 2016 02:17 PM
Last Updated : 27 Aug 2016 02:17 PM

ரியல் எஸ்டேட்டில் சென்னைக்கு எத்தனை மார்க்?

நாட்டில் வீடுகளின் விலை குறைந்துள்ளதா அல்லது அதிகரித்துள்ளதா? இப்போது வீடு வாங்குவது நல்லதா? ரியல் எஸ்டேட் துறையைப் பற்றி இத்தகைய கேள்விகள் எப்போதும் எழுப்பப்படுகின்றன. சில புள்ளிவிவரங்களின் அடிப்படையில் வீடுகளின் விற்பனை நிலையை அறிய முடியும். அந்த வகையில் தேசிய வீட்டு வசதி வங்கி வெளியிட்டு வரும் ரெசிடெக்ஸ் குறியீடு அதற்கு உதவுகிறது.

ரெசிடெக்ஸ் குறியீடு என்பது நகரங்களில் வீடு, மனை விலை அதிகரித்துள்ளதா, குறைந்துள்ளதா? தற்போதைய நிலவரம் என்ன போன்ற தகவல்களை உணர்த்தும் குறியீடு. பங்குச் சந்தையில் பங்குகளின் மதிப்புகளைக் குறியீடு முறையில் சொல்வதைப் போல ரெசிடெக்ஸ் குறியீடு முறையில் தேசிய வீட்டு வசதி வங்கி குறிப்பிடுகிறது. சொத்தின் சந்தை மதிப்பு, வழிகாட்டு மதிப்பு, உள்ளாட்சி நிர்வாகங்களால் வசூலிக்கப்படும் சொத்து வரி மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் ஆய்வு நிறுவனங்கள், வீட்டுக் கடன் அளிக்கும் வங்கிகள் ஆகியவற்றில் இருந்து பெறப்படும் தகவல்களின் அடிப்படையில் இக்குறியீடு வெளியிடப்படுகிறது.

கோவைக்கும் சென்னைக்கும் எத்தனை மார்க்?

நாடு முழுவதும் 27 நகரங்களுக்கு உரிய விலை நிலவரத்தை இக்குறியீட்டின்படி காலாண்டுக்கு ஒருமுறையோ அல்லது அரையாண்டுக்கு ஒருமுறையோ வெளியிடுவது வழக்கம். தேசிய வீட்டு வசதி வங்கி வெளியிட்டு வரும் பட்டியலில் தமிழகத்திலிருந்து சென்னை, கோவை என இரு நகரங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த ரெசிடெக்ஸ் குறியீட்டு முறை 2007-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. ஒவ்வொரு நகருக்கும் அடிப்படைப் புள்ளியாக 100 புள்ளிகள் வழங்கப்பட்டன. இதன் பின்னர் ரெசிடெக்ஸ் குறியீட்டு முறையின்படி புள்ளிகள் ஒவ்வொரு காலாண்டு அல்லது அரையாண்டுக்கு வெளியிடப்பட்டன. உதாரணமாக 2007-ம் ஆண்டில் சென்னைக்கு அடிப்படைப் புள்ளியாக 100 புள்ளிகள் வழங்கப்பட்டன. 2015-ம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி இப்போது அந்தப் புள்ளிகள் 364 ஆக உயர்ந்துள்ளது.

இந்த ஒன்பது ஆண்டுகளில் 264 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளன. அப்படியானால் வீடுகள் விலையும், வீட்டுத் திட்டங்களும் 2007-ம் ஆண்டுக்குப் பிறகு வளர்ந்தே வந்துள்ளன என்று அர்த்தம். அதேசமயம் 2014-ம் ஆண்டு நாலாவது காலாண்டில் சென்னையில் ரெசிடெக்ஸ் குறியீடு 366 புள்ளிகளாக இருந்துள்ளன. ஆனால், 2015-ம் ஆண்டு முதல் காலாண்டில் 364 ஆக ரெசிடெக்ஸ் குறியீடு புள்ளிகள் குறைந்துள்ளன. அதாவது 2 புள்ளிகள் குறைந்துள்ளன. இதனால், வீடுகளில் விலை அந்த காலகட்டத்தில் சிறிது குறைந்திருக்கும் என்று புள்ளிகள் மூலம் அறியலாம்.

இதேபோல கோவை நகருக்கு 2007-ம் ஆண்டில் ரெசிடெக்ஸ் குறியீடு அடிப்படைப் புள்ளிகளாக 100 புள்ளிகள் வழங்கப்பட்டன. 2015-ம் ஆண்டு நிலவரப்படி தற்போது புள்ளிகள் 179 ஆக அதிகரித்துள்ளது.2014-ம் ஆண்டு நான்காவது காலாண்டின்படி ரெசிடெக்ஸ் குறியீடு 176 புள்ளிகளாக கோவையில் இருந்துள்ளது. 2015 முதல் காலாண்டில் 3 புள்ளிகள் அதிகரித்திருப்பதால் வீட்டு விலை அதிகரித்திருக்கும். இப்படி நகரங்களுக்கு ரெசிடெக்ஸ் புள்ளிகள் வழங்கியது போல அகில இந்திய அளவிலும் புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.

2015-ம் ஆண்டு முதல் காலாண்டு நிலவரப்படி இந்திய அளவில் ரெசிடெக்ஸ் குறியீடு 238 புள்ளிகளாகக் குறைந்துள்ளது. இதற்கு முன்பு 2014 நான்காம் காலாண்டில் 240 புள்ளிகளாக இருந்துள்ளன. ஒட்டுமொத்தமாக 2011-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை வீட்டு ரெசிடெக்ஸ் குறியீடு சராசரியாக 214.69 புள்ளிகளாக இருந்துள்ளன. இதில் அதிகபட்சமாக 2014-ம் ஆண்டு நான்காவது காலாண்டில் 240 புள்ளிகளைப் பெற்றதே அதிகம்.

புள்ளிகள் கொடுப்பதால் என்ன பலன்?

இந்தக் குறியீட்டின்படி தற்போது நாம் வீடு, மனை வாங்கலாமா கூடாதா என்பதை வாடிக்கையாளர்கள் முடிவு செய்துகொள்ள முடியும். வீடு வாங்க உத்தேசித்துள்ள பகுதியில் சொத்தின் விலை தற்போது என்ன? 3 மாதங்களுக்கு முன்பு என்ன விலை? வீட்டின் விலை குறைந்துள்ளதா, அதிகரித்துள்ளதா போன்ற தகவல்களைக் கொண்டு முடிவு எடுத்துக்கொள்ளலாம். தேசிய வீட்டு வசதி வங்கி அளிக்கும் தகவல் ஆதாரபூர்வமானது என்பதால், வீடு அல்லது மனை வாங்கும் முன்பு ரெசிடெக்ஸ் குறியீடுகளைப் பார்ப்பது நல்லது. வெளிமாநிலங்களில் சொத்து வாங்க விரும்புபவர்களுக்கும் ரெசிடெக்ஸ் குறியீடு வழிகாட்டுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x