Published : 23 Oct 2013 02:59 PM
Last Updated : 23 Oct 2013 02:59 PM

விழுவதே எழுவதற்குத்தானே..!

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், பிய்ந்து போன பிளாஸ்டிக் வயர் நாற்காலிகளை கர்ம சிரத்தையாய் பின்னிக் கொண்டிருந்த ராஜனை ஏதேச்சையாக பார்க்க நேர்ந்தது. பார்வையற்ற அவருக்கு இடது கால் பாதிக்கப்பட்டிருந்தது. உடலில் தெரிந்த பாதிப்பு எதுவும் அவரது உழைப்பில் தெரியவில்லை. இந்த நிலையிலும், என்னால் முடியும் என்று நம்பிக்கை தளராமல் உழைத்துக் கொண்டிருந்தார்.

தூத்துக்குடி சண்முகபுரத்தை சேர்ந்தவர் டி.ராஜன். இரண்டரை வயதிலேயே போலியோ பாதிப்பால், இடது காலை பறிகொடுத்தவர். அடுத்து வந்த அம்மை நோய், இரண்டு கண்களிலும் பார்வை பறித்துக் கொண்டது தாங்க முடியாத இன்னொரு சோகம். பத்து வயதில், நெல்லையில் உள்ள பார்வையற்றோர் பள்ளியில் சேர்ந்து படித்தார். பத்தாம் வகுப்பில் 396 மதிப்பெண் எடுத்து, சக மாணவர்களை மட்டுமின்றி ஆசிரியர்களையும் புருவம் உயர்த்த வைத்தார் ராஜன். மேற்கொண்டு படிப்பதற்கு உடல்நிலை இடம் தரவில்லை. அதனால் பத்தாண்டுகள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தார். அப்புறம் என்னாச்சு? அதை அவரே சொல்கிறார்...

பத்து வருஷம் முடங்கிக் கிடந்துட்டு, 1993-ல் மும்பைக்கு போனேன். அங்கு, தேசிய பார்வையற்றோர் மையத்தில் டெலிபோன் ஆபரேட்டர் மற்றும் லேத் ஒர்க் பயிற்சியும் ஸ்டெனோ பயிற்சியையும் முடிச்சேன். வனத்தோட போனாலும் இனத்தோட சேருங்கிற கதையா, ஒரு வருஷம் கழிச்சு மறுபடியும் சொந்த ஊருக்கே வந்துட்டேன். என்னதான் தொழில் பயிற்சி எடுத்திருந்தாலும், கண் தெரியலைங்கிறதுக்காக எனக்கு யாரும் வேலை கொடுக்க முன்வரல. தூத்துக்குடியில பல இடங்கள்ல வேலை கேட்டு அலைஞ்சேன். ஏதோ, நான் பிச்சை கேட்டு போனமாதிரி எல்லோரும் துரத்தி விட்டாங்க. இனி, வேலைக்காக அலைவது வேஸ்டுன்னு தெரிஞ்சதும் கடைசியா, வயர் சேர் பின்ற தொழில்ல இறங்கிட்டேன்.

‘கலெக்டர் ஆபீஸ்ல வயர் சேர் எல்லாம் பிஞ்சி கெடக்கு; வேலை இருக்கு’ன்னு கூப்பிட்டாங்க. அதுதான் பத்துநாளா இங்க வேலை பாத்துக்ட்டு இருக்கேன். ஒரு நாற்காலி பின்னிக் குடுத்தா 200 ரூபாய் கிடைக்கும். அதுக்கு ஒருநாள் ஆகும். கட்டிலா இருந்தா ஆயிரத்து ஐநூறு வரைக்கும் கிடைக்கும். ஆனா, பத்து நாளைக்கு வேலை இழுக்கும். கண் தெரியாததால மெதுவாத்தான் வேலை செய்ய முடியும். ஆனா, வேலை நேர்த்தியா இருக்கும்.

மார்க்கெட்டுல பேன்ஸி சேர்கள், சோபாக்கள், இருக்கைகள், படுக்கைகள்னு வந்துட்டதால வயர் சேர்களுக்கும் கட்டில்களுக்கும் மவுசு இல்லாமப் போச்சு. அதனால, எங்களை மாதிரி ஆளுங்களுக்கும் போதிய வேலையும் இல்லை.

மாற்றுத் திறனாளிகள்னா எந்த வேலையும் செய்ய லாயக்கில்லாதவங்கன்னு சொல்லி ஒதுக்கி வெச்சிடுறாங்க. இந்த எண்ணம் மாறணும். மத்தவங்களுக்கு இல்லாத ஏதாவது ஒரு திறமை, மாற்றுத் திறனாளிங்ககிட்ட இருக்கும். அதை வெளிக்கொண்டு வருவதற்கு வாய்ப்புகளை வழங்கணும். எனக்கு தன்னம்பிக்கை இருக்கு. என்னைப் பார்த்து மற்றவர்கள் பரிதாபப்படுவதை அவமானமாக நினைக்கிறேன். இதுவரை நான் யாரிடமும் கையேந்தியது இல்லை; இனியும் ஏந்தப் போவதில்லை. விழுவதே எழுவதற்குத்தானே.. வீழ்ந்து போவதற்காக இல்லையே..!’’ உத்வேகமான வார்த்தைகளை உரக்கச் சொன்னார் ராஜன்!

3 வருட போராட்டம்

வாழ்க்கையின் வருத்தங்களை வார்த்தைகளாய் வடித்த ராஜன், தனது எதிர்காலம் பற்றியும் பேசினார்.

"இந்தத் தொழிலை நம்பி ரொம்ப நாளைக்கு கால்த்தை ஓட்ட முடியாது. மாற்றுத் திறனாளிக்கான அரசின் உதவித் தொகை கேட்டு மூணு வருஷமா போராடிக்கிட்டு இருக்கேன். நூறு சதவீதம் ஊனம் இருந்தாலும், 'உனக்கு கைத்தொழில் இருக்கு.. சொத்துபத்து இருக்கு'ன்னு சொல்லியே அதிகாரிகள் என்னோட மனுவை தட்டிக்கழிக்கிறாங்க. போதிய வருமானம் இல்லாத காரணத்தால் திருமண ஆசையையும் விட்டாச்சு. அரசின் உதவித் தொகை கிடைச்சா நல்லாயிருக்கும். அப்பப்ப சேர் பின்ற தொழிலையும் பாத்துக்கிட்டு காலத்தை கழிச்சிருவேன்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x