Published : 10 Jun 2017 11:56 am

Updated : 10 Jun 2017 11:56 am

 

Published : 10 Jun 2017 11:56 AM
Last Updated : 10 Jun 2017 11:56 AM

கடலம்மா பேசறங் கண்ணு 6: குளுவர!

6

குளுவர - தென்மேற்குப் பருவகாலம் தென்னெல்லைக் கடற்கரைக்குத் தருகிற அனுபவத்தை என் சிறு பருவ நினைவுகளிலிருந்து அகழ்ந்தெடுக்க முயல்கையில், இந்தச் சொல்தான் அலைமோதுகிறது.‘கடற்கரை வாழ்வில் மாதங்களை மீன்களின் பெயரால் காலண்டராய்க் குறித்துவிடலாம்’ என்று ஏதோவொரு கட்டுரையில் நான் குறிப்பிட்டிருந்தது, சூழலியல் வரலாற்று ஆய்வாளர் மகேஷ் ரங்கராஜனுக்கு வியப்பூட்டியதாக மொழிபெயர்ப்பாளர் வ. கீதா சொன்னார்.


விடியலில் காத்திருப்புமாவீரர்கள் மட்டுமே கடலுக்குள் போகத் துணிகிற காலம் அந்த ஆனி – ஆடி ‘குளுவர‘ காலம். நெடுங்கடல் நீரோட்டங்களின் போக்கில் அடித்துவரப்படும் மீன்கள் குளிர் பொறுக்கமாட்டாமல், இறந்து கரையொதுங்கும். இரவும் பகலும் பிரியும் காலை வேளைகளில் என் வயது சிறுவர்கள் அலைவாய் நெடுக சங்குத்துறைவரை நடந்து போவோம். கரையொதுங்கும் மீன்களைப் பொறுக்கி வருவோம். கடல் பனிக்கட்டி போலக் குளிர்ந்து கிடக்கும். அதை ‘நச்சம்‘ என்போம்.விடியலில் கரைக்கு வரும் மடிவலைகளை எதிர்நோக்கி அலைவாய்க்கரையில் ஆண்களும் பெண்களும் சிறுவர்களும் காத்துக் கிடப்பார்கள். பெட்டிக்காரிகள் (தலைச்சுமடு மீன்காரிகள்), குட்டைக்காரர்கள் (தலைச்சுமடு மீன்காரர்கள்), சவளக்காரர்கள் (மிதிவண்டி மீன்காரர்கள்), கரைசேரும் தங்கள் கணவர்கள், மகன்களுக்குச் சுடுகஞ்சி – கருப்புக்கட்டி, மருந்துக்கஞ்சியுடன் (பருத்திப்பால் கஞ்சி) காத்துநிற்கும் தாய்மார் / மனைவிமார், கரைசேரும் மடிவலைகளுக்குக் குற்றேவல் புரியும் விடலையர், முதியோர், ஏலக்காரர்கள், கீலம்வெட்டிகள் (மீன் வெட்டுபவர்கள்), சுமைகூலித் தொழிலாளிகள், அண்டை உள்ளூர்க் கிராமங்களிலிருந்து சமையலுக்கு கறிமீன் வாங்குவதற்கு மாம்பழம், பனங்கிழங்கு, நுங்கு வகையறாக்களுடன் வருகிற நாடார் – நாடாத்திகள், நாவிதர், மெலிஞ்சி… இப்படிப் பலரும் அங்கிருப்பார்கள்.

நாவிதர் உமல்!பழங்குடிச் சமூகங்கள் அடிப்படையில் தாய்மை அக்கறை மிகுந்தவை. தம்மைத் தேடி வந்தோரையும் சார்ந்திருப்போரையும் அது அக்கறையுடன் அரவணைத்துக்கொள்ளும். நெய்தல் சமூகங்களில் சேவையாற்றும் சிறுபான்மை எண்ணிக்கையினர் இருப்பார்கள். சிகை திருத்துபவர்களும் மெலிஞ்சியும் அதில் முக்கியமானவர்கள்.மெலிஞ்சி (கோவிலான்/மணியக்காரர்) கோவில் வழிபாட்டு வேலை செய்பவர், வழிபாட்டு வேளைகளில் மணியடிப்பவர். சுமார் 50 – 100 குடும்பங்களில் ஆண்களுக்குச் சிகை திருத்தும் வேலையுடன் அக்குடும்பங்களில் நேரும் சாவை வெளியூர் உறவினர்களுக்கு அறிவிப்பவர்கள் ‘நாவிதர்கள்’. மடிவலைக் காலங்களில் நாவிதர்கள் தாம் சேவை புரியும் மடிகளில் ஒரு உமலைக் கொடுத்துப் போவார்கள். கட்டுமரத்தில் மடிவலையுடன் எடுத்துச் செல்லப்படும் இந்த நாவிதர் உமலில், அன்றைய மீன்பாட்டில் ஒரு சிறு பகுதியைப் பகிர்ந்து போடுவார்கள்.‘சோந்தை‘ எனப்படும் இந்த மீன் கொடைதான் நாவிதரின் வாழ்வாதாரம். சோந்தை என்னும் சொல்லுக்கு ‘சார்ந்திருப்பவர்‘ எனத் தமிழ் அகராதி பொருள் தருவதாக அருள்சாமி என்னும் ஆர்வலர் குறிப்பிடுகிறார்.

பட்சி பறவை பதினெட்டு சாதிக்கும்அலைவாய்க்கரையில் மீன் ஏலமிடுகையில் மெலிஞ்சி உமலை நீட்டுவார். அவருக்கான பங்கு ஏலத்தின்போது வழங்கப்படுகிறது. இது தவிரக் கணவரை இழந்தோர், ஆதரவற்றோர், உடல் ஊனமுற்றோர் என இரப்போர் எவரானாலும் வருவோர்க்கெல்லாம் மீன் கிடைக்கும். பாலூட்டும் தாய்க்கு வழங்கப்படும் பாலூறச் செய்யும் மீன்களுக்கு அலைவாயில் எவரும் பணம் கேட்பதில்லை.தாய்மை அக்கறை என்பது இதுதான். பழங்குடி மண்ணுக்கே உரிய பண்பு. வலைக்காலம், தூண்டில் மீன்பிடி காலத்தைவிட மடிவலை, கரைமடிவலைக் காலங்களில் இப்பண்பைப் பரவலாகக் காண முடியும். ஆக, மடிவலைக் காலம் ஊர் செழிக்கும் கொண்டாட்டக் காலம். பட்சி பறவை பதினெட்டு சாதியும் மனமும் வயிறும் நிறையும் காலம்.

மாதத்துக்கொரு வாசனைஒரு பாரம்பரியக் கடலோடி கிராமத்தின் மாதங்களை மீன்களால் குறித்துவிடலாம் என்பதைப்போலவே, மாதவாரியான வாசனைகளால் அலைவாய்க்கரையைக் குறித்துவிடலாம். சித்திரையில் குதிப்பும் சள்ளை மீனும் ஒரு வகையான வாசனையை எழுப்பும். சாவாளை மீனுக்கு மாறுபட்ட வாசனை. கெளிறு (கெழுது – மீசை மீன்) வருகையில் மற்றொரு வாசனை. சுறா, திருக்கை உள்ளிட்ட குருத்தெலும்பு மீன்களுக்குத் தனித்துவமான வாசனை.கல்இறால், இறால் முதலிய இனங்களுக்கு ஒரு வாசனை. நெத்திலி மீனில்கூட மடிவலை, வலை நெத்திலிக்கு வேறுவேறு வாசனைகள்.ஜப்பானியர் வயலில் நெல் முற்றிக்கிடக்கும் வாசனையை மிகவே விரும்புவார்கள். நம் கடற்கரைகளில் நன்றாய் வெய்யிலில் உலர்ந்த நெத்திலிக் கருவாட்டின் வாசனைக்குக்கூட அது போன்ற ஈர்ப்பு உண்டு.தாழ்த்துவலைக் காலத்தில் எங்கள் ஊர்களில் அழுகிய மீனின் வாடை சற்றுத் தூக்கலாகவே இருக்கும். வலையில் சிக்கி இறந்து ஓரிரு நாட்களுக்குப் பிறகு கரைசேரும் அழுகிய மீனுடன் பதமான மீனும் சேர்ந்தே வரும். வியாபாரிகள் அழுகிய மீனை – பாரை, கலவா, விளமீன் போன்ற அளவில் பெரிய மீன்களை– மிகக் குறைந்த விலைக்குக் கொள்முதல் செய்வார்கள். இவற்றைச் செவுள் – குடல் அகற்றி, கடல்நீரில் கழுவி உப்பிட்டுப் பதப்படுத்தக் கைதேர்ந்த ‘கீலம்வெட்டிகள்‘ இருப்பார்கள். இந்த மீன்கள்தான் ஊறைக் கருவாடாகும்.

சொல் புதிதுகுளுவர: குளிர்வாடைக் காலம்உமல்: கட்டுமரத்தில் அறுவடை மீனைப் பத்திரப் படுத்தும் பனையோலைக் கடகம்தாழ்த்துவலை: உட்கடலில் ஓரிரு நாட்கள் அமிழ்த்தி வைக்கப்படும் வலை(அடுத்த வாரம்: பஞ்சம்)கட்டுரையாளர், பேராசிரியர் மற்றும் கடல் சூழலியல் - வள அரசியல் ஆய்வாளர். | தொடர்புக்கு: vareeth59@gmail.com


கடலம்மா பேசறங் கண்ணுகுளுவரதொடர்கடல்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author