Last Updated : 04 Jan, 2017 10:42 AM

 

Published : 04 Jan 2017 10:42 AM
Last Updated : 04 Jan 2017 10:42 AM

கலாம் தாத்தாவுக்காக ஒரு பாப்பாவின் பாட்டு!

அப்துல் கலாம் தாத்தா இறந்து ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனாலும், அவர் மீதான குழந்தைகளுக்கு ஈர்ப்பு இன்னும் கொஞ்சமும் குறையவில்லை. அதற்கு கோவையைச் சேர்ந்த 11 வயது சிறுமி சவுபர்ணிகாவே உதாரணம். இந்தச் சிறுமி தன் சொந்த குரலில் பாடி “கலாமுக்கு சலாம்” என்ற ஆல்பத்தை வெளியிட்டுள்ளார்.

கோவையில் உள்ள யுவபாரதி பப்ளிக் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கிறார் சவுபர்ணிகா. பாட்டு பாடுவதில் இந்தச் சிறுமிக்கு அலாதி பிரியம். பாட மட்டுமல்ல, கீபோர்டு வாசிக்கவும் தெரியும். தன் திறமையை வெளிப்படுத்த தான் பாடிய பாடலை ஆல்பமாக வெளியிட விரும்பிய இந்தச் சிறுமி விரும்பினார். அப்படி விரும்பியபோது அப்துல் கலாம் தாத்தாவுக்கு அஞ்சலி செய்யும் பாடலாக இருக்க வேண்டும் என்று நினைத்தார் சவுபர்ணிகா. அதற்கு அவரது அப்பாவும் உதவ, ஆல்பம் தயாரானது.

“கலாம் பத்திய பாடலை ம. முத்தையா அங்கிள் எழுதிக்கொடுத்தாங்க. பாட்டுக்கு லியோ அங்கிள் இசையமைச்சாங்க. பாடல் வரிகள் எல்லாம் கலாம் தாத்தாவோட உரையைக் கேட்கிற மாதிரியே இருக்கும். அதனால, பாடலை விரும்பி பாடினேன்” என்கிறார் சவுபர்ணிகா. சவுபர்ணிகா பாடலை தனது செல்லக் குரலில் பாடியதோடு மட்டுமல்லாமல் பாடல் காட்சியிலும் தோன்றி நடித்துள்ளார்.

இதற்காகக் கலாம் தாத்தாவின் சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் நிறைய காட்சிகளை படம் பிடித்துள்ளனர். கலாம் தாத்தாவுக்கு ரொம்ப பிடிச்ச குழந்தைகளுக்காக குழந்தைகள் தினத்தன்று கோவை அறிவியல் மையத்தில் இந்தப் பாடல் முதன்முதலாக ஒளிபரப்பப்பட்டது. அதைத் தொடர்ந்து மேலும் பள்ளிகள் உள்பட பல இடங்களில் இந்தப் பாடல் ஒளிபரப்பட்டுள்ளது. இதன்மூலம் சவுபர்ணிகாவுக்குக் கிடைத்த பாராட்டு, மேலும் பல ஆல்பங்களை உருவாக்க வைத்திருக்கிறது. பெண் குழந்தைகளின் மீதான சீண்டல், நதி நீர் இணைப்பை வலியுறுத்தி அடுத்த ஆல்பங்களை வெளியிட சிறுமி சவுபர்ணிகாவும், அவரது அப்பா செல்வராஜூம் முடிவு செய்துள்ளார்கள்.