Published : 22 Jan 2017 10:00 AM
Last Updated : 22 Jan 2017 10:00 AM

மதுரை மகளிர் திருவிழா: ஆசைகளை நிறைவேற்றிய பெருவிழா!

நூற்றுக்கணக்கான வாசகிகள் உற்சாகத்துடன் கலந்துகொண்ட மகளிர் திருவிழா கடந்த ஜனவரி 8-ம் தேதி மதுரை சமூக அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. ‘தி இந்து - பெண் இன்று’இணைப்பிதழ் சார்பாக நடத்தப்படும் இந்தத் திருவிழா இரண்டாவது ஆண்டாக மதுரை வாசகியரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ஜாலியான போட்டிகள், அசத்தலான பரிசுகள், வாழ்க்கைக்கு வழிகாட்டும் சிறப்புரைகள் எனப் பல்வேறு அம்சங்களுடன் களைகட்டியது.

ஆரோக்கியம் போற்றுவோம்!

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவியரின் இனிமையான தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது விழா. வேலம்மாள் கல்வி குழுமத்தின் அறங்காவலர் எம்.குஞ்சரவள்ளி, சமூக அறிவியல் கல்லூரியின் துணைத் தலைவர் டி. வி. பி. ராஜா ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி விழாவைத் தொடங்கி வைத்தனர்.

தி இந்து இணைப்பிதழ்களின் ஆசிரியர் அரவிந்தன் வரவேற்புரை ஆற்றினார். வாழ்த்துரை வழங்கிய தி இந்து குழும இயக்குநர்களில் ஒருவரும், மூத்த பொது மேலாளருமான வி. பாலசுப்ரமணியன் வாழ்த்துரை வழங்கினார்.

சிறப்புரை நிகழ்த்திய சமூக அறிவியல் கல்லூரியின் துணைத் தலைவர் ராஜா, “காலங்காலமாகப் பெண்கள்தான் குடும்பம் என்ற மிகப் பெரிய அமைப்பைத் திறம்பட நிர்வகித்துவருகிறார்கள். ஆகவேதான் அவர்களால் நாட்டையும் அதேபோல திறமையாக ஆளமுடிகிறது” என்றார்.

‘டீன் ஏஜ்’ குழந்தைகளைச் சமாளிப்பது எப்படி? என்ற தலைப்பில் உளவியல் மருத்துவர் ஷர்மிளா பாலகுரு பேசுகையில், “கவனமின்மை, மறதி, திடீர் கோபம், அதிகப்படியான மகிழ்ச்சி, திடீர் அழுகை, வெளியில் சகஜமாகப் பழகுதல் ஆனால் பெற்றோரிடம் ஓரிரு வார்த்தைகள் வெறுப்பாகப் பேசுதல் போன்றவை பொதுவாக டீன்ஏஜ் குழந்தைகளிடம் காணப்படும். இது சகஜம்தான் எனப் புரிந்துகொண்டு உங்கள் பிள்ளைகளுக்கு அன்பான தோழியாக இருந்து வழிநடத்துங்கள்” என்றார். வாசகியரின் கேள்விகளுக்கு நிதானமாகவும் தெளிவாகவும் பதில் அளித்தார்.

மகத்துவம் வாய்ந்த உணவு

“குழந்தைகள் ஆரோக்கியமாக வளர சிறுதானியம் அவசியம். சமையலுக்கும் பாத்திரத்துக்கும் நகமும் சதையுமான தொடர்பு உள்ளது. பாத்திரம் சரியாக இருந்தால்தான் சமையல் சரியாக இருக்கும். மண் சட்டிக்கு இருக்கும் மகத்துவம் வேறு எந்தப் பாத்திரத்துக்கும் வராது” என உணவின் மகத்துவத்தை எடுத்துரைத்தார் சமையல் கலைஞர் செஃப் தாமு.

‘சின்னத்திரை சீரியல்கள் குடும்பங்களைச் சீர்படுத்துகிறதா, சீரழக்கிறதா?’என்ற தலைப்பில் பேச்சரங்கம் நடைபெற்றது. சீர்படுத்துகிறது என்று பேராசிரியர் நாகபுஷ்பமும் சீரழிக்கிறது என முனைவர் சங்கீத்ராதாவும் பேசினார்கள். பேச்சரங்கத்தின் நடுவர் ஏ. ரேணுகா தேவி, “இன்றைய இளம் பெண்கள் மிகவும் புத்திசாலிகள். ஆண்களுக்கு நிகராக எல்லாவற்றையும் செய்துகாட்டுகிறார்கள். ஆனால் சின்னத்திரை சீரியல்கள் அவர்களைப் பின்னுக்குத் தள்ள முயல்வது கண்டிக்கத்தக்கது. அவை குடும்பங்களைச் சீரழிக்கவே செய்கின்றன என்பது மறுக்கமுடியாத உண்மை” என்று தீர்ப்பு வழங்கினார்.

அழகுக்கு அழகு

‘விஎல்சிசி’ நிறுவனம் சார்பில் அழகுக் கலை நிபுணர்கள் விஜியும் சுகந்தியும் வாசகியர் பத்துப் பேருக்கு ‘மேக்-அப்’போட்டு அசத்தினார்கள். “எனக்கு‘மேக்-அப்’ போட்டுக்கொள்ளவேண்டுமென்று நீண்ட நாள் ஆசை. அந்த ஆசை இந்த மகளிர் திருவிழாவில் நிறைவேறியிருப்பதில் மகிழ்ச்சி” என்றார் வாசகி டி. கவிதா.

அசத்தலான போட்டிகள்

வாசகியரின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கு ஏற்றார்போல் ரங்கோலி, சிறுதானிய சமையல், ‘மைமிங்’(வசனமில்லா நாடகம்) போன்ற போட்டிகள் நடந்தன. வாசகியரை ஜாலியாக விளையாட வைக்கும் நோக்கத்தில் இட்லி சாப்பிடுதல், கப் அடுக்குதல், தலையில் ஸ்ட்ரா சொருகுதல், லெமன் அண்ட் ஸ்பூன், கயிற்றில் முடிச்சு போடுவது, பந்து பாஸ் செய்வது போன்ற போட்டிகளும் நடத்தப்பட்டன. மதுரை மாநகரின் சிறப்புகள் குறித்த கேள்விகளுக்குச் சரியாகப் பதிலளித்த வாசகிகளுக்கு ஆச்சரிய பரிசுகள் வழங்கப்பட்டன. பம்பர் பரிசுகளும் வழங்கப்பட்டன. பரிசு மழையால் வாசகியர் திக்குமுக்காடிப் போனார்கள். விழாவை ஜெயவல்லியும் சின்னத்திரை நடிகை தேவி கிருபாவும் சிறப்பாகத் தொகுத்து வழங்கினர்.

விழாவை தி இந்துவுடன் மதுரை சமூக அறிவியல் கல்லூரி, திருமங்கலம் அன்னை பாத்திமா கேட்டரிங் மற்றும் கலை அறிவியல் கல்லூரி, லலிதா ஜூவல்லரி, தி சென்னை சில்க்ஸ், தி சிட்டி கேப்ஸ், தங்கமயில் ஜூவல்லரி, கரூர் ஹெச் டூ ஹெச் ஆரஞ்ச் இம்பெக்ஸ், பொன்மணி வெட்கிரைண்டர், மை டிரீம்ஸ், சுப்ரீம் மொபைல்ஸ், அண்ணாச்சி விலாஸ் இட்லி மாவு, விஎல்சிசி, அஞ்சலி நல்லெண்ணெய், ஓம் முருகா பட்டு மஹால், அனிதா ஸ்டோர்ஸ், ஹோட்டல் தி மெட்ரோபோல், கண்ணன் பிராண்ட் புட்ஸ், கண்ணன் காபி ஆகிய நிறுவனங்கள் இணைந்து வழங்கின.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x