Last Updated : 24 Jun, 2016 12:07 PM

 

Published : 24 Jun 2016 12:07 PM
Last Updated : 24 Jun 2016 12:07 PM

திரைப்பார்வை: உட்தா பஞ்சாப்- துரத்தும் குற்ற உணர்வின் குரல்

பஞ்சாபைப் பெரும்பாலும் கோதுமை வயல்களில் ‘டூயட்’ பாட மட்டுமே பாலிவுட் பயன்படுத்திவந்தது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ‘உட்தா பஞ்சாப்’ அந்த பிம்பத்தை உடைத்து, அங்கே நிலவும் சமூகப் பிரச்சினைகளை வெளிச்சம்போட்டுக் காட்டியிருக்கிறது.

பஞ்சாபில் போதைப் பழக்கத்துக்கு அடிமை யாக்கப்படும் இளைஞர்களின் வாழ்க்கையை மனதை உலுக்கும்படி பதிவுசெய்கிறது இந்தப் படம். இயக்குநர் அபிஷேக் சவுபே, போதைப் பழக்கத்தால் பஞ்சாப் இளைஞர்கள் பாதிக்கப்படுவதன் பின்னணியை எந்தச் சமரசமும் செய்துகொள்ளாமல் திரையில் கொண்டுவந்திருக்கிறார்.

போதைப் பழக்கத்துக்கு எதிராக ஒரு சமூகம் நடத்த வேண்டிய போரைப் பற்றித் தெளிவாகப் பேசுகிறது இந்தப் படம். தணிக்கை குழு குற்றம் சாட்டியபடி, இந்தப் படத்தில் போதைப் பழக்கத்தைக் கொண்டாடும் எந்த அம்சமும் இடம்பெறவில்லை. மாறாக, போதைப் பழக்கத்தின் விளைவுகளைச் சமூகத்தின் முகத்தில் அறையும்படி புரியவைக்க முயன்றிருக்கிறது இந்தப் படம்.

திசை மாறிய கலைஞன்

டாமி சிங் (ஷாஹித் கபூர்) என்கிற ‘கப்ரு’, போதை மருந்துக்கு அடிமையாகி, தன்னுடைய நட்சத்திர அந்தஸ்தை இழந்துகொண்டிருக்கும் ஒரு ‘ராக் பாடகன்’. அவன் (சிட்டா வே) போதையின் பெருமையைப் பாடிப் பல இளைஞர்களுக்குத் தவறான முன்மாதிரியாக இருக்கிறான். ஒரு கட்டத்தில், போதை ‘பார்ட்டி’ நடத்தியதால் கைதாகிச் சிறையில் அடைக்கப்படுகிறான்.

சிறையில் இருக்கும் இரண்டு சிறுவர்கள் இவனை அடையாளம் கண்டு இவனுடைய பாடலைப் பாடிக்காட்டுகிறார்கள். அப்போது, அங்கேயிருக்கும் ஒரு முதியவரின் குரல் “அம்மாவைக் கொன்றுவிட்டு, உங்களுக்குப் பாட்டு ஒரு கேடா?” என்று அதட்டுகிறது. அந்தச் சிறுவர்கள், “நாங்க ‘மால்’ வாங்க பணம் கேட்டால் கொடுக்கல. அதான் கொன்னுட்டோம்” என்று பெரிய வருத்தம் எதுவும் இல்லாமல் சொல்கிறார்கள்.

இதைக் கேட்ட பிறகு, டாமிக்குத் தான் எவ்வளவு பெரிய தவறு செய்துகொண்டிருந்தோம் என்று புரிகிறது. அந்தச் சிறுவர்களின் குரல் அவனைத் துரத்துகிறது. தான் செய்த தவறுக்கான குற்ற உணர்வு அவனைத் துரத்த, நிம்மதியழந்துபோகிறான். தன்னைத்தானே எதிர்கொள்ள முடியாமல் ஓடுகிறான்.

மேலும் மூவர்

இதற்கிடையில், பிஹாரில் இருந்து பஞ்சாபிற்கு வேலைபார்க்க வரும் ஓர் இளம்பெண்ணுக்கு (ஆலியா பட்) போதைப் பொருள் கிடைக்கிறது. அதை விற்று வாழ்க்கையில் முன்னேறிவிடலாம் என்று அவள் நினைக்கிறாள். ஆனால், அவளுடைய முட்டாள்தனமான முடிவின் விளைவு கொடூரமானதாக இருக்கிறது.

சர்தாஜ் சிங் (தில்ஜித் தோசாஞ்), தம்பியைப் போதைப் பழக்கத்தில் இருந்து காப்பாற்றுவதற்காக போதைக் கடத்தல் கும்பலைப் பின்தொடரும் காவலாளர். டாக்டர் பிரீத் (கரீனா கபூர்) பஞ்சாபை போதையில் இருந்து மீட்கப் போராடும் மருத்துவர். போதைக்கு அடிமையாகியிருக்கும் சமூகமும் போதைப் பொருள் வர்த்தக வலைப்பின்னலும் இந்த நான்கு பேரின் வாழ்க்கையில் எந்த மாதிரியான விளைவை ஏற்படுத்துகின்றன என்பதுதான் ‘உட்தா பஞ்சாப்’.

துணிச்சலான பதிவு ஏன்?

வணிகரீதியான அம்சங்களுடன் எடுக்கப்படும் படத்திலும் சமூகத்துக்கான செய்தியை வலிமையாகக் கொடுக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார் இயக்குநர் அபிஷேக். சுதிப் ஷர்மாவின் திரைக்கதை முதல் பாதியில் பார்வையாளர்களை மிரட்டிவிடுகிறது. இரண்டாம் பாதியில் பாலிவுட்டுக்கே உரிய நாடகத்தனமான சில காட்சிகளைத் தவிர்த்திருந்தால், இன்னும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.

கதாபாத்திரங்களின் தேர்வும் கச்சிதம். ஷாஹித், ஆலியாவின் நடிப்புத் திறனைச் சிறந்த முறையில் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர். கரீனா, பஞ்சாபி நடிகர் தில்ஜித் இருவரும் தங்கள் கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

ஆனால், படம் முடியும்போது, ஷாஹித், ஆலியாவின் நடிப்பே மனதில் நிற்கிறது. அமித் திரிவேதி இசையமைத்திருக்கும் பாடல் ‘இக் குடி’ கவனத்தை ஈர்க்கிறது. பெனிடிக்ட் டெய்லர், நரேன் சந்தாவர்கர் பின்னணி இசையும் திரைக்கதையின் பதற்றத்தை உணரவைக்கிறது.

நான்கு வெவ்வேறு பாதைகளில் நான்கு கதாபாத்திரங்களின் கதைகளைச் சொன்னபடி படத்தைக் கொண்டுசெல்கிறார் இயக்குநர். முக்கியக் கதாபாத்திரங்களின் தனித்தன்மையான கட்டமைப்பு படத்தை நம்பகத்தன்மை கொண்டதாக ஆக்குகிறது. உதாரணமாக, சர்தாஜின் தம்பி ‘பல்லி’ (பிரப்ஜோத் சிங்) கதாபாத்திரத்தைச் சொல்லலாம்.

அவனுடைய கதாபாத்திரம் போதைக்கு அடிமையாகும் இளைஞர்கள் தங்களுக்குள் தாங்களே நடத்தும் போராட்டத்தைத் தெளிவாகத் திரையில் கொண்டுவருகிறது. ஆனால், போதை மருந்தை விநியோகிக்கும் கும்பலுக்கும் பின்னால் இருக்கும் அரசியல்வாதிகளையும், காவல்துறையையும் படம் மேலோட்டமான சித்தரிப்பின் மூலம் கடந்து சென்றுவிடுகிறது. அந்தப் பகுதியை இன்னும் அழுத்தமாகவும் தெளிவாகவும் அமைத்திருந்தால் படம் மேலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.

எது எப்படியிருந்தாலும், போதை மருந்துக்கு அடிமையான ஒரு சமூகத்துக்கான செய்தியைத் துணிச்சலாகப் பதிவுசெய்ததற்காக ‘உட்தா பஞ்சாப்’ திரைப்படத்தை எல்லா வகையிலும் வரவேற்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x