Published : 25 Jan 2014 12:00 AM
Last Updated : 25 Jan 2014 12:00 AM

தேர்வு நடந்து ஓராண்டாகியும் குரூப்-2 ரிசல்ட் வரவில்லை- பட்டதாரிகள் அதிருப்தி

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வில் நேர்காணல் கொண்ட பதவிகளுக்கு முடிவு வெளியிடப்பட்டு ஓராண்டு ஆகும் நிலையில், நேர்காணல் அல்லாத பதவிகளுக்கான முடிவு இன்னும் வெளியிடப்படவில்லை. இதனால், தேர்வெழுதிய 8 லட்சம் பட்டதாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

நகராட்சி ஆணையர், சார்-பதிவாளர், தலைமைச் செயலக உதவி பிரிவு அதிகாரி, இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி, தொழிலாளர் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட பதவிகளை நிரப்ப குரூப்-2 தேர்வும், பல்வேறு துறைகளில் உதவியாளர் பணியிடங்களை உள்ளடக்கிய பதவிகளை நிரப்ப குரூப்-2-ஏ தேர்வும் டிஎன்பிஎஸ்சி மூலம் தனித்தனியே நடத்தப்படுகிறது.

முன்பு, குரூப்-2 என ஒரே தேர்வாக நடத்தப்பட்டது. தற்போது நேர்காணல் உள்ள பணியிடங்களுக்காக குரூப்-2, நேர்காணல் இல்லாத பணியிடங்களுக்காக குரூப்-2ஏ என பிரித்து நடத்தப்படுகிறது. அந்த வகையில், 1,069 நேர்காணல் பதவிகளையும், 2006 நேர்காணல் அல்லாத பதவிகளையும் நிரப்பும் வகையில் 2012-ம் ஆண்டு டிசம்பர் 4-ம் தேதி குரூப்-2 தேர்வு நடத்தப்பட்டது. 8 லட்சம் பட்டதாரிகள் தேர்வு எழுதினர்.

தேர்வர்கள் ஏமாற்றம்

இந்நிலையில், நேர்காணல் பதவிகளுக்கு மட்டும் 2013-ம் ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. தேர்வில் வெற்றிபெற்றவர்கள் மார்ச்சில் நடந்த நேர்முகத் தேர்வில் பங்கேற்றனர். அதற்கான முடிவுகளும் வெளியிடப்பட்டு, தேர்வானவர்கள் கடந்த ஜூன் மாதத்தில் பணியிலும் சேர்ந்துவிட்டனர்.

நேர்முகத்தேர்வு அல்லாத பணிகளுக்கு ஓராண்டாகியும் இன்னும் முடிவு வெளியிடப் படவில்லை.

ஒரே நேரத்தில் தேர்வு எழுதியவர்களில் ஒரு சாரார் பணியிலேயே சேர்ந்து விட்ட நிலையில், மற்றொரு பிரிவினருக்கு தேர்வு முடிவே அறிவிக்கப்படாததால், அவர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.

காரணம் என்ன?

தேர்வு முடிவு வெளியிட்டு அதன்பிறகு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி இறுதி தேர்வு பட்டியல் வெளியிட குறைந்தபட்சம் ஒரு மாதமாவது ஆகும்.

காலதாமதம் குறித்து டிஎன்பிஎஸ்சி தரப்பில் விசாரித்தபோது, ‘அறிவிக்கப்பட்ட 2006 காலியிடங்களில் 1242 இடங்களுக்கு மட்டும் பணியாளர் குழு (ஸ்டாப் கமிட்டி) முதலில் ஒப்புதல் அளித்தது. தற்போது 1940 இடங்களுக்கு அனுமதி கிடைத்திருக்கிறது. விரைவில் தேர்வு முடிவு வெளியிடப்படும்’ என்கிறார்கள்.

ஆர்ப்பாட்டம்

இந்நிலையில், தேர்வு முடிவு தாமதம் ஆவதை கண்டித்து, தேர்வு எழுதிய 100 இளைஞர்கள் சென்னை பாரிமுனையில் உள்ள டிஎன்பிஎஸ்சி தலைமை அலுவலகம் முன்பு வெள்ளிக் கிழமை காலை ஆர்ப்பாட்டம் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x