Last Updated : 14 May, 2017 02:15 PM

 

Published : 14 May 2017 02:15 PM
Last Updated : 14 May 2017 02:15 PM

அலசல்: விதிமுறைக்கு விலை கண்ணியமா?

அப்பா பைக் ஓட்டப் பின்னால் உட்கார்ந்து கல்லூரிக்குப் போய்க்கொண்டிருந்தார் அக்கா. திடீரென சுடிதாரின் துப்பட்டா பைக் சக்கரத்தில் சிக்கியது. என்ன நடக்கிறது என சுதாரிப்பதற்குள் இழுத்துப் போர்த்தியிருந்த துப்பட்டாவோடு தெருவில் சுருண்டு விழுந்தாள் அக்கா. எப்படியோ சிறு காயங்களுடன் தப்பித்துக்கொண்டாள். ஆனால், காயம் ஆறிய பிறகும் கல்லூரிக்குச் செல்ல மறுத்துவிட்டாள். சொல்லப்போனால் வீட்டு வாசலைத் தாண்டிச் செல்லவே அவளுக்குப் பல மாதங்கள் ஆனது. திடீரென அவளுடைய மேலாடை இழுக்கப்பட்டு விபத்து ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து அவளால் மீள முடியவில்லை. எவ்வளவு சொல்லியும் அவள் படிப்பைத் தொடர மறுத்துவிட்டாள். இன்றும் எங்களை வாட்டும் சம்பவம் அது.

நேரமோ திராணியோ இல்லையே!

ஒரு விபத்தில் தற்செயலாக மேலாடை அவிழ்ந்ததையே ஒரு பெண்ணால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றால் நீட் தேர்வு விதிமுறை என்கிற பெயரில் உள்ளாடையைக் களையச் சொல்லும் அத்துமீறல் எத்தகைய தாக்கத்தை ஒரு பெண்ணின் மனதில் ஏற்படுத்தும்? ஏதோ ஒரு சில அதிகாரிகள் செய்த தவறு என்று இந்தப் பிரச்சினைக்கு முடிவுகட்டிவிட முடியாது. பரவலாக கேரளா, தெலங்கனா, கர்நாடகம், தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இதுபோன்ற பல அத்துமீறல்கள் நடந்தேறியுள்ளன.

மருத்துவக் கல்லூரியில் படிக்கும் வாய்ப்புக்காக இடைவிடாது படித்து, தேர்வு நாளுக்காகக் காத்திருந்த இளைஞர்களில் பலர் இப்போது அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்கள். அதிலும், சோதனைச் சாவடியில் மெட்டல் டிடெக்டர் ஒலி எழுப்பியதால் உள்ளாடையைக் கழற்றி எறியச் சொன்னது, ஜீன்ஸ் பேண்ட்டின் இரும்புப் பொத்தானை வெட்டி எறிய வலியுறுத்தியது, அவிழ்க்க முடியாத தங்கக் கம்மலை வெட்டும் நிலைக்குத் தள்ளியது உள்ளிட்ட அத்துமீறல்களை, எதிர்க்கக்கூடப் போதிய நேரமோ திராணியோ இல்லாத மாணவிகளின் நிலை அவலமானது.

வெறும் அசவுகரியமா?

ஒரு விதிமுறையைப் பின்பற்ற மறுத்தால் அதற்கு ‘உரிய’ நடவடிக்கைகளை மட்டுமே எடுக்கலாம். ஆனால் இங்கே நடந்தது என்ன? இதில் சகித்துக்கொள்ள முடியாதது, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் இத்தகைய மனித உரிமை மீறல் சம்பவங்களுக்கு அளித்திருக்கும் விளக்கம். பகிரங்கமாக மன்னிப்பு கோராமல், இதுபோன்ற துரதிருஷ்டவசமான சம்பவங்கள் நிகழ்ந்ததற்கு வெறுமனே வருந்துவதாகத் தெரிவித்துள்ளது. சிலர் அதிகப்படியாகவும் தீவிரமாகவும் விதிமுறைகளை நடைமுறைப்படுத்தியதால் மாணவர்களுக்கு இத்தகைய அசவுகரியம் நிகழ்ந்துவிட்டது என விளக்கம் அளித்துள்ளது. மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலைத்தான் வாரியம் பின்பற்றியதாகவும், முன்கூட்டியே தேர்வு குறித்த விதிமுறைகளை மிகத் தெளிவாக வாரியம் விளக்கியிருந்தாகவும் சொல்லியிருக்கிறது.

இவ்வளவு அத்துமீறல் நடந்த பிறகும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அளித்திருக்கும் விளக்கத்திலேயே அதன் அணுகுமுறை அப்பட்டமாக வெளிப்படுகிறது. மனித உரிமை மீறலில் ஈடுபட்ட அதிகாரிகள் அதிகப்படியான பொறுப்பின் காரணமாகவே இப்படி நடந்துகொண்டதாகச் சொல்வது என்ன நியாயம்? அதேபோல மாணவர்களுக்குக் குறிப்பாகப் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அவமானத்தை, ‘அசவுகரியம்’ என எளிதாகக் கடந்து விட முடியுமா?

ஏவப்பட்ட வன்முறை

நீட் தேர்வைப் பொறுத்தவரை அதன் விதிமுறைகளை நடைமுறைப்படுத்திய விதத்தில் மட்டும் சிக்கல் இல்லை. அது வடிவமைக்கப்பட்ட விதத்தில் இருந்தே சிக்கல் தொடங்குகிறது. முழுக்கைச் சட்டை, அடர்த்தியான நிற ஆடைகள், ஷூ, காதில் வளையம், கழுத்தில் சங்கிலி அல்லது அட்டிகை போன்ற எவ்விதமான நகைகளையும் அணியக் கூடாது என்பதையெல்லாம்கூட ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், அவற்றை அணிந்து வந்ததாலேயே அவர்களைக் கேவலமாகக் கையாண்ட விதத்தை எப்படி ஏற்றுக்கொள்ளவது?

அதிலும், திருமணம் ஆனவர்களோ ஆகாதவர்களோ கண்டிப்பாகச் சேலை அணியக் கூடாது, பர்தா அணியக் கூடாது உள்ளிட்ட விதிமுறைகள் இவர்களுடைய பார்வையை அப்பட்டமாக்குகிறது. காலங்காலமாக இவற்றை மட்டுமே அணிந்துவரும் பெண்கள் மருத்துவர் ஆகும் தகுதி அற்றவர்கள் என்பதுதான் இதன் அர்த்தமா? தேர்வில் முறைகேடுகளைத் தவிர்க்கவே இத்தகைய நடவடிக்கைகள் என்றால், பின்பு சோதனைக் கருவிகள் எதற்கு?

“தேர்வைக் கறாராக நடத்துவதாகச் சொல்லித் தலைமுடியைக் கலைப்பது, கம்மல்- மூக்குத்தியைக் கழற்றச் சொல்வது எல்லாம் அநாகரிகமான செயல். தவறு நிகழ்ந்துவிடக் கூடாது என்பதற்காக ஒட்டுமொத்த மாணவர் சமூகத்தையே குற்றவாளிகள்போல நடத்தியது அவர்கள் மீது ஏவப்பட்ட உளரீதியான வன்முறை. அதிலும் தேர்வாளர்களுக்கு முன்கூட்டியே சீருடை எதுவும் பரிந்துரைக்கப்படவில்லை. மாறாக எதையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்றுதான் சொல்லியிருக்கிறார்கள். அதில் சில சமூகத்தினர் காலங்காலமாகப் பின்பற்றிவரும் உடைக்கு தடாலடியாக மறுப்புத் தெரிவிப்பது மனித உரிமை மீறல். அதை மேற்கொண்டு எச்சரிப்பது, இடை நீக்கம் செய்வது மட்டும் தீர்வாகிவிடாது. அவர்கள் உடனடியாகப் பணியிலிருந்து நீக்கப்பட வேண்டும்” என்கிறார் மக்கள் சிவில் உரிமை கழகத்தின் அகில இந்தியத் துணைத் தலைவரான பேராசிரியர் சரஸ்வதி.

இன்று நம்மைச் சோதனைகளுக்கு உட்படுத்திக்கொள்ள எல்லோரும் தயாராகிவிட்டோம். ஷாப்பிங் மால், ரயில் நிலையங்கள் எனப் பல இடங்களில் நம்முடைய உடலும் உடைமையும் சோதிக்கப்படுகின்றன. ஆனால், சோதிக்கப்படுபவர்களுக்கும் உரிமைகள் இருக்கின்றன. இந்த உரிமை மீறல்களை விதிமுறைகளின் பெயரால் நியாயப்படுத்த முடியாது. அரசும் இடைநிலைக் கல்வி வாரியமும் இதுபோன்ற அத்துமீறல்கள் மீண்டும் நிகழாத வண்ணம் தேர்வுகளை எழுதும் மாணவர்களுக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x