Published : 03 Dec 2013 12:00 AM
Last Updated : 03 Dec 2013 12:00 AM

சிறகு மனிதன் பால்பாண்டி!

‘நான் என் மனைவியோட வாழ்ந்த நாட்களைவிட பறவைகளோடு வாழ்ந்த காலமே அதிகம்" என்கிறார் சிறகு மனிதன் எஸ்.பால்பாண்டி. கூந்தங்குளம் பறவை சரணாலயத்தில் 24 ஆண்டுகள் காவலராகப் பணியாற்றிவர். 40 ஆண்டுகளுக்கு மேலாகப் பறவைகளைப் பின்தொடர்பவர்.

வானத்தில் சிறகடிக்கும் பறவைகளோடு பறந்துகொண்டிருக்கும் பால்பாண்டியை, திருப்பூர் நஞ்சராயன்குளத்தில் வாழும் பறவைகளைக் காணத் திருப்பூர் இயற்கை கழகத்தின் தலைவர் த.செந்தில்ராஜன், செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் அழைத்து வந்திருந்தனர். பறவைகளைச் சந்திக்க வந்திருந்த பால்பாண்டியை சந்தித்தேன்.

அவரது சமீபத்திய சந்தோஷம், இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் சமீபத்தில் இந்தியா வந்திருந்தபோது தன்னைச் சந்தித்துப் பேசியதைச் சிலாகித்து மனம் நெகிழ்கிறார்.

பறவை குஞ்சுகள்

"திருநெல்வேலி மாவட்டம் கூந்தங்குளம்தான் என் சொந்த ஊர். கூந்தங்குளம் பறவை சரணாலயத்தில் எட்டு ரூபாய் சம்பளத்தில் காவலராக வேலையைத் தொடங்கினேன். இதுவரை 237 வகையான பறவைகளை, பார்த்துப் பதிவு செய்திருக்கிறேன்.

அப்படி வரும் பறவைகளில் சில வகைகள் மழைக்கும், காத்துக்கும் மரத்தின் கொப்பிலிருந்து கீழே விழும். தரையில் விழுந்த பறவைக் குஞ்சுகளை நானும் என் மனைவியும் எடுத்து வளர்த்திருக்கோம். குஞ்சுகள், மீன் மட்டும்தான் சாப்பிடும். வீட்டுல சோறு இல்லைன்னா, அதைப்பத்தி கவலைப்படாம மீன் வாங்கிப் போட்டு வளர்த்திருக்கோம். பல கஷ்டங்களை அனுபவிச்சிருக்கோம். பறவைகள் மேல இருந்த ஆர்வம் பசியையே மறக்கடிச்சிருக்கு.

என் மனைவி வள்ளித்தாயும் கூந்தங்குளம் வந்த பறவைக் குஞ்சுகளுக்குத் தாயாக இருந்திருக்கிறார். பறவைகளையே குழந்தைகளாக நினைத்து வாழ்ந்த அவர், பத்தாண்டுகளுக்கு முன் உயிர் இழந்தார்.

இப்படி நான் பறவைகளோடயே வாழ்ந்ததால நிறைய அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் என்னோட அனுபவத்தைப் புத்தகங்களில் குறிப்பிட்டிருக்காங்க" என்கிறார் வறுமையைக் கடந்த பெருமிதத்தோடு.

கேரளா, வட இந்தியா, உலக நாடுகளின் பறவை ஆராய்ச்சியாளர்களுக்குப் பறவைகளைப் பற்றி இவர் தரும் தகவல்கள் முக்கியமாகத் திகழ்ந்துள்ளன. கூந்தங்குளத்துக்கு வரும் பறவை ஆராய்ச்சியாளர்கள் தேடிப்பிடிக்கும் முதல் நபர் பால்பாண்டிதான்.

இந்த அளவிற்குப் பறவைகளைப் பற்றி நுட்பமான கள விஷயங்களை இவர் சேகரித்து வைத்திருக்கிறார்.

கேரளா முதல்வர் அச்சுதானந்தன் உள்படப் பலரது கைகளில், தன் பறவைச் சேவைக்கு விருது பெற்றுள்ளார். கேரளாவில் மட்டும் 14க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார்!

சார்லஸ் பாராட்டு

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் சமீபத்தில் இந்தியா வந்திருந்தபோது, இவரைப் பார்த்து வியந்தார். "யு ஆர் நாட் பேர்டுமேன், சூப்பர்மேன்!" என்றபடி பறவைகளின் வாழ்க்கை குறித்துச் சிலாகித்துப் பேசியதை வாழ்க்கையில் மறக்க முடியாத தருணமாகக் குறிப்பிடுகிறார் பால்பாண்டி. மேலும், ’உங்களுக்குப் பிறகு இதுபோல யாரை உருவாக்கி வைத்திருக்கிறீர்கள்?’ என்று இளவரசர் கேள்வி எழுப்பியபோது, தனது பேரனுக்குப் பயிற்சி தந்துவருவதாக இவர் சொல்லியிருக்கிறார்.

இங்கிலாந்து இளவரசர் சார்லஸே வியந்து பாராட்டியிருந்தாலும், பால்பாண்டி மனதில் லேசான வருத்தம் சிறகடிக்கிறது. வாழ்க்கையையும் குடும்பத்தையும் பறவைகளுக்காகச் செலவிட்ட தனக்குத் தமிழக அரசு சார்பில், சிறிய அங்கீகாரம்கூடக் கிடைக்காமல் இருப்பது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது என்கிறார் வருத்தத்துடன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x