Published : 04 Apr 2017 11:06 AM
Last Updated : 04 Apr 2017 11:06 AM

மனதில் நிற்கும் மாணவர்கள் 05 - எத்தனையோ பேருக்குத் தரவில்லை!

மாணவர் வேலைநிறுத்தப் போராட்டம். கல்லூரிக்கு வெளியே மாணவர்கள். இத்தகைய போராட்டத்தை எளிதாகப் பின்வாங்கச் செய்துவிடும் தந்திரங்களை ஆசிரியர்களாகிய நாங்கள் பயன்படுத்துவோம். மாணவர் உறுதியைக் குலைத்து எல்லாரையும் கல்லூரிக்குள் அனுப்ப முயன்றுகொண்டிருந்தோம்.

அடுக்கடுக்காய்க் கோரிக்கைகள்

முன்னிற்கும் சில மாணவர்களைக் குறிவைத்து அம்புகளை எய்தோம். “நீ எந்த டிபார்ட்மெண்ட்? உனக்கு அட்டண்டன்ஸ் இருக்குதா?”, “காலேஜ் கேட்ட மூட உனக்கு உரிமை கிடையாது. இதுக்காகவே உன்ன அரெஸ்ட் பண்ணலாந் தெரீமா?”, “எங்க உன்னோட ஐடி கார்டு? நீ இந்தக் காலேஜ் ஸ்டூடண்ட்தானா?”, “உனக்கு எத்தன பேப்பரு அரியர் இருக்குது?” இப்படிக் கேள்விகளாக அடுக்கிப் பலரை நிலைகுலையச் செய்துவிட்டோம்.

அப்போது அங்கே ஓரமாக நின்றுகொண்டிருந்தார் காந்தராசன். பெயரே வித்தியாசமானது. காந்தம் போல் இழுக்கும் ராசன். அவரை நோக்கி ஒரு வலிமையான குரல் “உனக்கு என்ன வேணும்?” என்றது. தாம் முன்னிற்கவில்லை என்றாலும் கோரிக்கைகளில் நியாயம் இருப்பதை அறிந்து ஆதரவு கொடுக்கவந்து நின்ற காந்தராசன் “அதாங்கய்யா உதவித்தொகை இன்னும் வர்ல. கழிப்பறை எல்லாம் சுத்தம் பண்ணி ரொம்ப நாளாயிருச்சு. ஒரே நாத்தம். குடிதண்ணி வர்ல. அப்பரம் அலுவலகத்துல மாணவர்கள ரொம்ப மோசமா நடத்துறாங்கய்யா” என்று அடுக்கிச் சொன்னார்.

யாரு யாரு, நானா?

“யாரு உன்னய ஆபிஸ்ல மோசமா நடத்துறாங்க” என்று எகிறியது அந்த வலிய குரல். அப்போது வந்து நின்ற பேருந்திலிருந்து இறங்கி வந்த அலுவலர் ஒருவர் “என்ன” என்று அருகில் வந்தார். காந்தராசன் உடனே அவரைக் கைகாட்டி “இவருகூட மாணவர்கள் கிட்ட கட்டணம் வாங்கும்போது மிச்சக் காசத் திருப்பித் தர மாட்டாருங்கய்யா” என்று சொல்லிவிட்டார். ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், மாணவர்கள் என்று கூடி நின்ற பெருந்திரளுக்கு முன்னால் கைகாட்டிக் குற்றம் சொன்னதும் அலுவலர் அதிர்ந்தார்.

அவமானத்தால் ஏற்பட்ட கோபத்தோடு, “யாரு யாரு, நானா? எவன் காச நான் தரல?” என்று கத்தினார் அவர். “ஒருத்தருக்காச்சும் சில்லற குடுத்திருக்கீங்களா? யாருக்குமே தந்ததில்ல. எனக்குக்கூட முந்தாநாள் ஒரு ரூவா நீங்க தர்ல” என்றார் காந்தராசன். தன் குட்டு அம்பலமாகிவிட்ட பதற்றத்தோடு “நானா? நானா மிச்சம் தர்ல? உன்னோட படிப்பு மேல சத்தியம் பண்ணிச் சொல்லு” என்றார். காந்தராசன் பதறவில்லை. “நீங்க மிச்சக் காசத் தர மாட்டீங்கன்னு எல்லார்த்துக்கும் தெரியும். இதுக்குப் போயி சத்தியமெல்லாம் எதுக்குங்கய்யா” என்றார்.


காந்தராசன்

வெகுளித்தனத்தால் குட்டு வெளியானது

அன்றாட உணவுக்கே அல்லல்படும் அடித்தட்டு மாணவர்கள் பயிலும் இடம். அவர்களிடம் சந்தர்ப்பம் நேரும்போதெல்லாம் பிடுங்கித் தின்னும் இயல்பு கொண்டவர்கள் பலர். அதில் முதலாமவர் அவர். மாணவர்களிடம் எரிந்து விழுவதும் ஏதாவது வகையில் பணம் பிடுங்குவதும் அவர் இயல்பு. ஒரு ரூபாயில் தொடங்கி பத்து இருபது நூறு என்று வேலைக்கேற்ப விரியும் அவர் கை. அப்பேர்ப்பட்டவரின் முகத்திரை கிழிந்து அப்பட்டமாயிற்று. அதைச் சாதித்தது காந்தராசனின் வெகுளித்தனம்.

மழுங்கிய அஸ்திரம்

நாளைக்கு ஏதாவது ஒரு வேலையாக அலுவலகத்தில் போய் நிற்க வேண்டுமே, இன்னும் சான்றிதழ்கள் பெற வேண்டுமே என்பதை எல்லாம் அவர் நினைத்துப்பார்க்கவில்லை. அந்தச் சமயத்தில் அவர் மனதில் இருந்ததை எல்லாம் வெளிப்படுத்திவிட்டார். உடனே சூழலைச் சமாளிக்க அந்த வலிய குரல் முனைந்தது. “நீ எந்த டிபார்ட்மெண்ட்? எங்க உன்னோட ஐடி?” என்று முனை மழுங்கிய அஸ்திரத்தை ஏவியது. ஒரு நிமிடம் திகைத்துப் போன காந்தராசன் “கல்லூரிக்குள்ள ஐடி கேளுங்க. வெளியில எதுக்குக் கேக்கறீங்க?” எனத் தர்க்கரீதியாகப் பதிலுக்கு கேள்வி கேட்டார்.

அங்கே நின்றிருந்த எனக்கு காந்தராசனைக் காப்பாற்றியாக வேண்டிய கட்டாயம். மேலும் எதுவும் அவர் பேசிச் சூழல் மோசமாகிவிடக்கூடும். “படிக்கற பையனுக்கு இதெல்லாம் எதுக்குப்பா. போப்பா போ” என்று ஆசிரியருக்கே உரிய அதட்டலோடு அவ்விடத்தை விட்டுக் காந்தராசனை அப்புறப்படுத்தினேன்.

வேலையில்லாப் பட்டதாரி

அவமானப்பட்ட அலுவலருக்குக் கையும் காலும் நடுங்கி வாய் குழறிற்று. வழியெல்லாம் ஏதேதோ புலம்பிக்கொண்டு அலுவலகம் சென்றார். அதன் பின் ஏதோ வேலையாக அலுவலகத்துக்குச் சென்ற என்னுடைய துறை ஆசிரியர் ஒருவரிடம் அந்த அலுவலர் ஒரு ரூபாய் நாணயத்தைக் கொடுத்து “அந்தப் பையனிடம் கொடுத்திருங்க” என்றிருக்கிறார். அதை பெற்று வந்த ஆசிரியர் காந்தராசனிடம் நீட்டி “இந்தாப்பா” என்றார்.

காந்தராசன் வாங்கிக் கொள்ளவில்லை. “எத்தனையோ பேருக்கு அவர் சில்லறை தரவில்லை. எல்லாருக்கும் திருப்பித் தருவாரானால் இந்த ஒரு ரூபாயை நான் வாங்கிக்கொள்கிறேன்” என்று சொல்லி மறுத்துவிட்டார். அந்த ஆசிரியரும் யார் யார் மூலமோ அதைக் காந்தராசனிடம் சேர்க்க முயன்றார். முடியவில்லை.

எப்படியாவது அந்த மாணவரிடம் சேர்த்துவிடுகிறேன் என்று உறுதி கொடுத்து வாங்கி வந்த ஆசிரியர் இப்போது அவமானப்பட்டார். காந்தராசனிடம் சேர்க்க முடியவில்லை. தன் இயலாமையை அலுவலரிடம் சொல்லவும் முடியவில்லை. என்ன செய்வது? கடைசியில் அந்த ஒரு ரூபாய் நாணயம் பாவத்தின் கழுவாயாகக் கோயில் உண்டியலில் போய் விழுந்தது.

நேர்மையும் கடும் உழைப்பும் வெகுளித்தனமும் கொண்ட காந்தராசன் இன்றைக்கு எம்.ஏ.,பி.எட்., முடித்த வேலையில்லாப்பட்டதாரி. கிடைக்கும் உடல் உழைப்பு வேலைகளைச் செய்தபடி அவர் தம்பியை எம்.பி.பி.எஸ். படிக்க வைக்கிறார். நேர்மை உழைப்பும் மிகுந்த அவருக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும்.



பெருமாள்முருகன், எழுத்தாளர்,
தமிழ்ப் பேராசிரியர் தொடர்புக்கு: murugutcd@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x