Last Updated : 20 Jul, 2016 12:31 PM

 

Published : 20 Jul 2016 12:31 PM
Last Updated : 20 Jul 2016 12:31 PM

பொம்மியின் அழகான நாட்கள்!

குழந்தைகளின் மன உலகில் திருவிழாக்களைக் கொண்டுவரும் கதை சொல்லிகள் இன்று இல்லாமலே போய்விட்டார்கள். இன்று குழந்தைகளுக்கு இருக்கிற ஒரே பொழுதுபோக்கு டி.வி.க்கள்தான். அதனை மனதில்கொண்டு சுட்டி டி.வி. நாள்தோறும் விதவிதமான அம்சங்களை கொடுத்துவருகிறது. சுட்டி டி.வி.யைத் தொடர்ந்து பார்த்து ரசிக்கும் குழந்தைகள் அத்தனை பேருக்கும் அதில் வருகிற பொம்மி பாத்திரம் ரொம்பவும் அறிமுகம்.

புகழ்பெற்ற சோட்டா பீம், டோரா போன்ற கதாபாத்திரங்களுக்கு இணையாக பொம்மியையும் கொண்டுசெல்லும் எண்ணத்தில், பொம்மியை வைத்து சீரியல் டைப் நிகழ்ச்சியை வழங்கி வருகிறது சுட்டி தொலைக்காட்சி. கார்ட்டூன் பாத்திரமான பொம்மி, மற்ற மனித பாத்திரங்களுடன் உலா வருவது குழந்தைகள் மத்தியில் குதூகல வரவேற்பை பெற்றிருக்கிறது.

இந்தத் தொடரைப் பற்றியும் இன்றைய குழந்தைகளின் மன உலகம் பற்றியும் சுட்டி டி.வி.யின் கிளஸ்டர் ஹெட் கவிதா ஜாபின் நம்மிடம் பகிர்ந்துகொண்டார். “ ‘பொம்மி’என்று பொது பெயராக இந்த சீரியல் அமைந்தாலும் பொம்மியும் நண்பர்களும் என்பதுதான் இதற்கு அடிப்படை.

திங்கள் முதல் வெள்ளி வரை நாள்தோறும் மாலை 5 மணிக்கு பொம்மி குழந்தைகளை வசீகரித்து வைத்திருக்கிறாள். இந்த சீரியலில் பொம்மி என்ற கார்ட்டூன் பாத்திரத்துடன் சந்தோஷ், பிண்டு, சோனா என்கிற நிஜ பாத்திரங்களும் உலா வருகிறார்கள். இந்த மூன்று பேருக்கும் எல்லா வகையில் உதவி செய்யும் பாத்திரத்தில் பொம்மி தோன்றி எல்லோர் மனதிலும் இடம்பிடித்துவிட்டாள்.

இந்தத் தொடரை ஏ.ஆர்.ரமேஷ் இயக்கியுள்ளார். தமிழ் சேனல் உலகில் இதுபோல கார்ட்டூன் சித்திரமும் நிஜ மனிதர்களும் இடம்பெறுகிற உத்தியில் வந்து வெற்றிபெற்ற சீரியல் இதுதான் ஃப்ர்ஸ்ட். பொதுவாகவே குழந்தைகளின் உலகம் என்பது சின்னச் சின்ன சம்பவ இழைகளை கொண்டதுதான். பெரியவர்கள் அத்தனை பேரும் அந்த வாழ்வை கடந்துதான் வந்திருப்போம்.

ஆனால், அதனை நாம் தொலைத்துவிட்டுத்தான் அடுத்த நிலைக்குப் போகிறோம். எப்போதாவது நுண் உணர்வுகள் திடுக்கிட்டு விழிக்கும்போது, ‘அட, குழந்தைகளாகவே இருந்திருக்கலாமே…’ என்று ஒரு சில வினாடிகள் நினைத்துப் பார்ப்போம். அதுவும் மின்னல் வெட்டும் நேரம்தான். அதற்குள் அடுத்து பணிகளும், பொறுப்புகளும், வேறு வேறு கவலைகளும் அந்தத் தருணத்தை கபளீகரம் செய்துவிடும்.

திரும்பவும் இயல்பான வாழ்வு நிலைக்குத் திரும்பிவிடுவோம். இந்த பொம்மி சீரியல் குழந்தைகளை மட்டுமல்ல; பெரியவர்கள் கண்டு களிக்கும்போது அவர்கள் மீண்டும் சிலேட்டு பருவத்துக்கும், லார்வா நாட்களுக்கும் திரும்பி கைபிடித்து அழைத்து செல்லும். அந்த வகையில் ‘பொம்மி’ வெற்றி பெற்றுவிட்டாள்” என்று சொன்னார் கவிதா ஜாபின்.

- கவிதா ஜாபின்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x