Published : 08 Mar 2014 12:00 AM
Last Updated : 08 Mar 2014 12:00 AM

குரூப்-4 தேர்வு: கடலூர் பொறியாளர் முதலிடம்

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வில் கடலூரைச் சேர்ந்த பொறியாளர் கே.பி.பாலாஜி, மாநில அளவில் முதலிடத்தைப் பிடித்தார். அவர் 300-க்கு 267 மதிப்பெண் எடுத்துள்ளார்.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் மற்றும் பில் கலெக்டர், வரைவாளர் ஆகிய பதவிகளில் 5,566 காலி இடங்களை நிரப்புவதற்கு குரூப்-4 தேர்வு நடத்தப்பட்டது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்திய இந்தத் தேர்வை 12 லட்சத்து 22 ஆயிரத்து 272 பேர் எழுதினர். குரூப்-4 தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி 10-ம் வகுப்பு என்ற போதிலும் பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள், பொறியியல் பட்டதாரிகள் என உயர்கல்வி முடித்தவர்களும் எழுதினர்.

கடலூர் பொறியாளர் முதலிடம்

குரூப்-4 தேர்வு முடிவு கடந்த புதன்கிழமை மாலை வெளியிடப்பட்டது. குறைந்தபட்ச மதிப்பெண்ணான 90 மற்றும் அதற்கு மேல் மார்க் எடுத்தவர்களின் ரேங்க் பட்டியல் டி.என்.பி.எஸ்.சி. இணையளதளத்தில் வெளியிடப்பட்டது. பொதுவான ரேங்க் மட்டுமின்றி இடஒதுக்கீட்டு பிரிவு வாரியான ரேங்கும் வெளியானது. 12 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் எழுதிய தேர்வில் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ரெட்டியார் காலனியைச் சேர்ந்த பொறியாளர் கே.பி.பாலாஜி (22) முதலிடத்தைப் பிடித்துள்ளார். அவரது பெற்றோர் கே.பாலகிருஷ்ணன்-பி.அமுதா. கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றவரான பாலாஜி, 300-க்கு 267 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

குரூப்-4 தேர்வைப் பொருத்தவரை நேர்முகத்தேர்வு எதுவும் கிடையாது. எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றாலே வேலை உறுதிதான். பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, வரும் 24-ம் தேதி தொடங்கும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

இணையதளம் முடக்கம்

தேர்வு வெளியிடப்பட்ட புதன்கிழமை மாலை முதல் டி.என்.பி.எஸ்.சி. இணையதளம் சரியாக இயங்கவில்லை. தேர்வு முடிவுகளை ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானோர் பார்க்க முயன்றதால் சர்வரில் தொழில்நுட்ப பிரச்சினை ஏற்பட்டிருக்கக் கூடும் என்று டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த தொழில்நுட்பப் பிரச்சினை வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு மேல்தான் சரியானது. அதன்பிறகே தேர்வு முடிவுகளை இணையதளத்தில் எவ்வித சிரமும் இன்றி தேர்வர்கள் பார்க்க முடிந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x