Published : 11 Nov 2013 12:00 AM
Last Updated : 11 Nov 2013 12:00 AM

ஐ.ஐ.டி.யில் சேர ஆசையா?

பிளஸ் டூவில் நன்றாகப் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு ஐ.ஐ.டி. என்ற மூன்றெழுத்தின் மீது எப்போதும் ஒரு கண் இருக்கும். ஐ.ஐ.டி. மாணவர்களை பெரிய பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் மாதம் ரூ..5 லட்சம், ரூ..6 லட்சம் சம்பளத்தில் கொத்திக்கொண்டு போய்விடுகின்றன. இதனால், ஐ.ஐ.டி. பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பட்டப் படிப்புகளைப் படிக்க மாணவ-மாணவிகள் இடையே போட்டி நிலவுகிறது.

சென்னை, ஹைதராபாத், மும்பை, டெல்லி உள்பட 15 இடங்களில் ஐ.ஐ.டி. எனப்படும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்வி நிறுவனங்கள் உள்ளன. ஐ.ஐ.டி.யில் சேர நுழைவுவாயிலாக இருப்பது ஜெ.இ.இ. என்று சொல்லப்படும் கூட்டு நுழைவுத்தேர்வுதான் (ஜாயிண்ட் என்ட்ரன்ஸ் எக்ஸாமினேஷன்). இந்தத் தேர்வு, மெயின், அட்வான்ஸ்டு என இரண்டு நிலைகளைக் கொண்டது. ஜெ.இ.இ. மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்த கட்ட தேர்வான அட்வான்ஸ்டு தேர்வுக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். அதில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் மெரிட் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

ஜெ.இ.இ. முதல்கட்ட தேர்வான மெயின் தேர்வு மதிப்பெண் மற்றும் பிளஸ் டூ தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஐ.ஐ.ஐ.டி. (இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப்் இன்பர்மேசன் டெக்னாலஜி), என்.ஐ.டி. (நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப்் டெக்னாலஜி) போன்ற மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் பொறியியல் படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.

ஜெ.இ.இ. மெயின் நுழைவுத் தேர்வு அகில இந்திய அளவில் நடத்தப்படுகிறது. பிளஸ் டூ தேர்ச்சி பெற்ற மாணவர்களும், தற்போது பிளஸ் டூ படித்துக்கொண்டிருப்பவர்களும் ஜெ.இ.இ. நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். 1.10.1989 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்தவராக இருக்க வேண்டும். ஆதி திராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் என்றால் 1.10.1984 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்தவராக இருக்கலாம். ஒரு மாணவர் 3 முறை மட்டுமே ஜெ.இ.இ. நுழைவுத்தேர்வை எழுத முடியும்.

நுழைவுத்தேர்வில் (மெயின்) 2 பிரிவுகள் உள்ளன. முதல் பிரிவு பி.இ., பி.டெக். படிப்பில் சேர விரும்புவர்களுக்கு உரியது. இதில், பிளஸ் டூ இயற்பியல், வேதியியல், கணிதம் பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன. இந்தக் கேள்விகள் மாணவர்களின் மனப்பாட அறிவை இல்லாமல், அவர்களது புரிந்துகொள்ளும் திறனை ஆராயும் வகையில் இருக்கும். இந்தத் தேர்வை ஆன்லைனிலும் எதிர்கொள்ளலாம்.

2வது பிரிவு, பி.ஆர்க், பி.பிளான் படிப்புகளுக்கானது. இதில் கணிதம், ஓவியத் திறமை, நுண்ணறிவுத் திறன் தொடர்பான கேள்விகள் இடம்பெறும். இந்தத் தேர்வுக்கு ஆன்லைன் முறை கிடையாது. ஒவ்வோர் ஆண்டும் ஏறத்தாழ 14 லட்சம் மாணவர்கள் இத்தேர்வை எழுதுகிறார்கள். 1.5 லட்சம் பேர் அடுத்தகட்டத்துக்குச் செல்கிறார்கள். அடுத்தகட்ட அட்வான்ஸ்டு தேர்வு மே மாதத்தில் நடத்தப்படும்.

2014ஆம் ஆண்டுக்கான ஜெ.இ.இ. மெயின் நுழைவுத்தேர்வுக்கு தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது. இதற்கு நவம்பர் 15ஆம் தேதி முதல் டிசம்பர் 26ஆம் தேதி வரை ஆன்லைனில் (www.jeemain.nic.in) விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்ப முறை இந்த ஆண்டுதான் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சாதாரண ஓ.எம்.ஆர். விடைத்தாள் முறையிலான தேர்வு (ஆப்-லைன்) வரும் ஏப்ரல் 6ஆம் தேதி அன்றும் (தமிழ்நாட்டில் கோவை, மதுரையில்) ஆன்லைன் தேர்வு (சென்னை மட்டும்) ஏப்ரல் 9, 11, 12, 19 என அடுத்தடுத்து நடத்தப்பட இருக்கின்றன. ஐ.ஐ.டி. கனவை நனவாக்கிக் கொள்ளத் தயார் ஆகுங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x