Last Updated : 28 Jan, 2017 08:31 AM

 

Published : 28 Jan 2017 08:31 AM
Last Updated : 28 Jan 2017 08:31 AM

என் வீடு என் அனுபவம்: தானாய் வளர்ந்த வீடு

வாடகை வீட்டில் வசிக்கும் எல்லோருக்குமே சொந்தமா ஒரு வீடு கட்ட வேண்டும் என்பது ஒரு வகையான சாதனைக் கனவு என்றுதான் சொல்ல வேண்டும். வீட்டுக்கு அருகில் போக்குவரத்து வசதி இருக்க வேண்டும். அதேசமயம் நெறுக்கடியாக இல்லாமல் கொஞ்சம் வசதியான இடத்தில் இருக்க வேண்டும்.

இப்படி ஏகப்பட்ட நிபந்தனைகள் வேற மனதுக்குள் ஓடும். சிறு வயதில் இருந்தே சொந்த வீடு கட்டும் ஆசை இருந்தும், வீட்டுப் பொருளாதார சூழ்நிலை காரணமாக அதை அம்மாவிடமோ அப்பாவிடமோ வெளிப்படுத்தியது இல்லை. ஆனால் கண்டிப்பாகச் சொந்த வீடு கட்டியே ஆக வேண்டும் என மனதுக்குள் தீ பிடிக்க ஆரம்பித்தது கல்லூரி பருவத்தில் தான். நண்பர்களை அதிகமாக வீட்டுக்கு அழைக்கவும் முடியாது. அப்படியே அழைத்தால் வீட்டு உரிமையாளரிடம் கூறி முன் அனுமதி வாங்க வேண்டும்.

ஒரு மாதிரி கொடுமையான விஷயமாகத் தோன்றும். கொஞ்ச நாட்களில் ஐந்து வருடமாகப் பக்கத்து வீட்டில் இருந்த நண்பர்கள் புது வீடு கட்டிப் போனார்கள். இதுவும் ஒரு காரணம். கல்லூரி முடியும் முன்பே அப்பாவை நச்சரிக்க ஆரம்பித்தேன், ‘வீடு கட்ட வேண்டும்’ என்று. ஆனால் அப்பா, “பல செலவுகள் இருக்கின்றன. பிறகு பாப்போம்” என்று சொல்லி ஏமாற்றம் அளித்து விட்டார். கொஞ்ச நாட்கள் கழித்து அவருக்கே பொண்ணுக்கு வீடு கட்டித்தான் கல்யாணம் பண்ண வேண்டும் எனத் தோன்ற ஆரம்பித்துவிட்டது. அதனால் மறுபடியும் வீடு கட்டும் பேச்சு தொடங்கியது. அப்பா எப்பவுமே ஜாதகத்தை ரொம்ப நம்புபவர்.

வீடு என்ற பேச்சை எடுத்ததுமே வீட்டில் இருக்கும் எல்லோருடைய ஜாதகத்தையும் எடுத்துக் கொண்டுபோய் ஜோசியரிடம் நின்றார். அவர், “கட்டங்கள் சரியில்லை, இப்போதைக்கு வீடு காட்டும் பாக்கியம் இல்லை. பொண்ணுக்குக் கல்யாணம் செய்துவிட்டு வீடு கட்டிக் கொள்ளுங்கள்” எனச் சொல்லிட்டார்.

சரி கொடுத்து வைத்தது அவ்வளவுதான் என விட்டுட்டேன். 2014-ல் சென்னையில் இருந்தபோது திடீர் எனத் தொலைபேசியில் அழைத்து, “வீடு கட்ட இடம் வாங்கலாம் என இருகிறோம்” என்றார் அப்பா. அவ்வளவு சந்தோஷம். உடனே மாசி மாதத்தில் பாலக்கால் போட்டோம். வெளிப்புற வேலைகள் எல்லாம் ரொம்ப சீகிரம்மாவே முடிந்தது. கான்கிரீட் போட்டு முடிந்ததும் வேலை ஆமை வேகத்தில்தான் சென்றது. ஏனெனில் வீட்டிலிருக்கும் எல்லோரின் விருப்பத்துக்கும் தகுந்தாற்போல் இருக்க வேண்டும்.

கிரானைட் கல் போடுவதா? டைல்ஸ் ஓட்டுவதா? இப்படிக் குழப்பம் ஒரு மாதத்துக்கு வேலையை நிறுத்தி வைத்தது. கிரானைட் என்று முடிவுசெய்த பின்னர் அதைத் தேர்ந்தெடுப்பதில் நான் ஒரு புறம் என்றால் என் தம்பி இன்னொரு புறம். அப்பா ஒரு புறமும் அம்மா மற்றொரு புறமும். வளரும் எங்கள் வீடும் வேறோரு புறம் நின்றுகொண்டது. இறுதியில் ஒரு வழியாக கிரானைட் வடிவமைப்பைத் தேர்ந்தெடுத்தோம். பிறகு குளியலறை டைல், உள் அலங்கார வடிவமைப்பு என எல்லோரும் கலந்து முடிவு எடுக்கவே சில மாதங்கள் ஆகி விட்டன.

இந்த வேலைகள் முடிந்ததும் தச்சு வேலைகள் தொடங்கியது. இந்த வேலை முடிய முழுதாக நாலு மாதங்கள் எடுத்தன. தச்சு வேலை முடிந்த பிறகு மின் சாதனங்கள் மற்றும் தண்ணீர்க் குழாய்க்கான பணிகள் தொடங்கியது. வீட்டில்அனைவரும் வேலைக்கு செல்வதால் தினமும் காலை மாலை வேளைகளில் வீட்டைப் பார்ப்பதோடு சரி. தொழிலாளர்களின் ஒத்துழைப்பில் எங்கள் வீடு அதுவாக வளர்ந்து வந்ததது. ஒன்றரை ஆண்டுகள் கழித்து நவம்பர் 6, 2016 அன்று நெருங்கிய சொந்தங்கள் மற்றும் நண்பர்களை மட்டும் அழைத்து கிரகப்பிரவேசத்தைக் கொண்டாடினோம்.

வெறும் பணம் இருந்தால் மட்டும் வீட்டைக் கட்டிவிட முடியாது என்ற உண்மையை இந்த அனுபவத்தால் நன்கு அறிந்து கொண்டேன். வேலையாட்களின் ஒத்துழைப்பும் நேரமும் கைகூடி வந்தால் அனைத்தும் சாத்தியமாகும். இப்போது எங்கள் புதிய வீட்டுக்குள் என் அறைக்குள் ஒரு சிட்டுக்குருவி வந்து தன்னுடைய வீட்டைக் கட்டிக்கொண்டுள்ளது. இப்போது குருவியோடு நானும், என்னோடு குருவியுமாகப் புதிய கூட்டில் சந்தோஷமாக இருக்கிறோம்.



சொந்த வீடு, தி இந்து
கஸ்தூரி மையம்,
124, வாலாஜா சாலை, சென்னை-600 002.
மின்னஞ்சல் முகவரி: sonthaveedu@thehindutamil.co.in

என் வீடு என் அனுபவம்

புதிய தலைமுறை நினைத்தால் எதுவும் சாத்தியமாகும். புதிய ஆண்டில் புதிய லட்சியங்களை எடுத்து அதை அடைய முயலும் அக்னிக் குஞ்சுகள் அவர்கள். நம்பிக்கைக்கும் சாதனைக்குமான வடிவமாகத் தங்கள் வாழ்க்கை மாற்ற நினைக்கும் புதிய தலைமுறையினர் தாங்கள் வீடு கட்டிய/வாங்கிய அனுபவத்தை இங்கே பகிர்ந்துகொள்ளலாம். இது உங்களுக்கான பகுதி. இந்த முயற்சியால் உங்களுக்கு ஏற்பட்ட சிரமங்களையும் சுவாரசியங்களையும் எங்களுக்கு எழுதுங்கள்.

அனுப்ப வேண்டிய முகவரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x