Published : 05 Jul 2016 11:51 am

Updated : 14 Jun 2017 14:14 pm

 

Published : 05 Jul 2016 11:51 AM
Last Updated : 14 Jun 2017 02:14 PM

அறிவியல் சாதனையாளர்: நீங்களும் விஞ்ஞானிதான்!

பொதுவாகவே, பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் படிப்புகள் மீதான ஆர்வம் குறைந்துகொண்டேபோகிறது. அவர்கள் பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் படிப்புகளில் சேரப் போட்டிபோட்டுக்கொண்டு விண்ணப்பிப்பதே இதற்குச் சான்று. அண்மைக் காலமாகக் கலை அறிவியல் கல்லூரிகளில் சேரும் ஆர்வம் மாணவர்களிடம் சற்று அதிகரித்திருந்தாலும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் படிப்புகளுக்கு வேலைவாய்ப்புகள் எவ்வாறு உள்ளதோ அதே அளவுக்கு, இன்னும் சொல்லப்போனால் அதைவிட மேலாகவே அறிவியல் படிப்புகளுக்கு வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன.

ஆனால், அவை பற்றிய விழிப்புணர்வு மாணவர்களிடம் இல்லாததுதான் குறை. இத்தகைய சூழலில் பள்ளி மாணவர்கள் இடையே விஞ்ஞான ஆர்வத்தை ஊக்குவித்து வளர்த்தெடுக்கும் வகையில் ‘தி இந்து’ குழுமம், எஜுகேஷன் பிளஸ், ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ‘வெற்றிக்கொடி’ இணைப்பிதழ், சென்னை சாய்ராம் கல்விக் குழுமம் ஆகியவை ஒன்றுசேர்ந்து அறிவியல் விருதுகள் வழங்கும் திட்டத்தைத் தொடங்கியுள்ளன. அதன்படி, சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பள்ளிகளில் (சிபிஎஸ்இ பள்ளிகள் உள்பட) இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் உள்ளிட்ட அறிவியல் பாடங்களில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு ‘தி இந்து’ அறிவியல் விருதுகள் வழங்க முடிவு செய்தன.


விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை கீழ்ப்பாக்கம் பவன்ஸ் ராஜாஜி வித்யாஷ்ரம் பள்ளியில் ஜூன் 26-ம் தேதி மாலையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினரான தமிழகக் கடலோரப் பாதுகாப்புப் படை கூடுதல் டிஜிபி சி. சைலேந்திரபாபு, சாய்ராம் கல்விக் குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி சாய்பிரகாஷ் லியோ முத்து, ‘தி இந்து’ முதுநிலை நிர்வாக ஆசிரியர் பி.ஜேக்கப், பவன்ஸ் வித்யாஷ்ரம் பள்ளியின் மூத்த முதல்வர் ஜெ.அஜீத் பிரசாத் ஜெயின் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்ற தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது.

பெண்கள் அறிவியலை வென்றெடுக்க வேண்டும்

“அறிவியல் துறையில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவாகவே உள்ளது. பெண்களில் 40 சதவீதம் பேர் அறிவியல் துறையைத் தேர்வுசெய்தாலும்கூடத் தலைமைப் பதவிகளில் மிகவும் குறைவாக இருக்கிறார்கள். நிறைய பெண்கள் அறிவியல் துறைக்கு வந்து தலைமைப் பதவிகளுக்கு வர வேண்டும்” எனத் தொடக்கவுரை ஆற்றிய ‘தி இந்து’ முதுநிலை நிர்வாக ஆசிரியர் ஜேக்கப் கூறினார்.

விழாவின் அடுத்த நிகழ்வாக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 6 மாணவர்களுக்கு ‘தி இந்து- இன்ஸ்கூல்’ சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. எவர்வின் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி ஹர்சினி, அகர்வால் வித்யாலயா பள்ளி மாணவி ஊர்மிளா, வேலம்மாள் பள்ளி மாணவி ராகேஷ், செயின்ட் தாமஸ் பள்ளி மாணவர் அரவிந்த்குமார், நசரேத் பள்ளி மாணவர் சாமுவேல், ரோஸ்லின் மெட்ரிக் பள்ளி மாணவி லோக அட்சயா ஆகிய 6 பேருக்கும் உதவித்தொகையை வழங்கினார் ‘தி இந்து’ இணை ஆசிரியர் கிருத்திகா ரெட்டி. இந்த மாணவ-மாணவிகளுக்குப் பிளஸ்-2 முடிக்கும் வரை 2 ஆண்டு காலத்துக்கு உதவித்தொகை கிடைக்கும் என்பது குறிப்பிடத் தக்கது.

சிறப்பு விருந்தினரான தமிழகக் கடலோரப் பாதுகாப்பு படை கூடுதல் டிஜிபி சைலேந்திரபாபு, பிளஸ் 2 தேர்வில் அதிக அறிவியல் பாடங்களில் மதிப்பெண் எடுத்த மாணவ-மாணவிகளுக்கு ‘தி இந்து’ அறிவியல் விருதுகளை வழங்கிக் கவுரவித்தார். தோழமையான ஆசிரியர்போல மாணவர்களிடம் உரையாடியவர் அறிவியல் படிக்கும் எல்லோரும் விஞ்ஞானிகள்தான் என ஊக்கமளித்துப் பேசினார்.

அறிவியல், பிரபஞ்சத்தின் தோற்றம், அறிவியலின் அடிப்படைக் கூறுகள் எனப் பல்வேறு விஷயங்கள் தொடர்பாக சைலேந்திரபாபு கேள்விக் கணைகளைத் தொடுக்க, அவற்றுக்குச் சளைக்காமல் பதிலளித்தனர் மாணவர்கள். சரியான பதிலளித்தவர்களுக்குப் புத்தகங்களைப் பரிசளித்தார். அதனை அடுத்து மாணவர்களுக்குப் பதக்கமும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டன. அந்த மாணவர்களை உருவாக்கிய பள்ளிகளுக்கும் கேடயங்கள் வழங்கிக் கவுரவிக்கப்பட்டன.

மாதா, பிதா, கூகுள்!

வாழ்த்துரை வழங்கிய சாய்ராம் கல்விக் குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி சாய்பிரகாஷ் லியோ முத்து, “‘மாதா, பிதா, குரு’ என்பது மாறி ‘மாதா, பிதா, கூகுள்’ என்று சொல்லும் அளவுக்கு நிலை மாறிவிட்டது. இன்று மாணவர்களுக்கு வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. இந்த வாய்ப்புகளை அவர்கள் நல்லமுறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். உயர்ந்த லட்சியத்தை வகுத்து அதை நோக்கி இடைவிடாது உழைக்க வேண்டும். சாதிப்பது கஷ்டம்தான். ஆனால் சாதனை நிகழ்த்திய பின்னர் உலகம் உங்களைக் கொண்டாடும்” என்றார்.

பவன்ஸ் ராஜாஜி வித்யாஷ்ரம் பள்ளியின் மூத்த முதல்வர் ஜெ.அஜீத் பிரசாத் ஜெயின் பேசுகையில், “அறிவியல் பாடங்களில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை ஊக்குவிக்கிறீர்கள். மகிழ்ச்சி. அதேநேரம் தற்போது காமர்ஸ் படிப்புக்குக் கடுமையான போட்டி நிலவுகிறது. எனவே, காமர்ஸ் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களையும் கவுரவிக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார். நிறைவாக, ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் இணைப்பிதழ்களின் ஆசிரியர் அரவிந்தன் நன்றியுரை கூறினார்.

ஏடிஜிபி சைலேந்திரபாபுவுடன் சாய்ராம் குழும சி.இ.ஓ. சாய் பிரகாஷ் லியோ முத்து (இடது) மற்றும் பவன்ஸ் ராஜாஜி வித்யாஷ்ரம் கல்லூரியின் சீனியர் பிரின்ஸிபால் அஜீத் பிரசாத் ஜெயின்

எதையும் அப்படியே நம்பாதீர்கள்!

மாணவர்களை, “படி படி” என்று நச்சரித்தால் அவர்களுக்குப் படிப்பைக் கண்டாலே வெறுப்புதான் உண்டாகும். படி எனச் சொல்வதற்குப் பதிலாகக் கண்டுபிடி, ஆய்வு செய், புலனாய்வு செய் என்று சொன்னால் ஊக்கம் பெற்று ஆர்வத்தோடு படிக்கத் தொடங்குவார்கள். அதிலும் அறிவியல் படிக்கும் ஒவ்வொரு மாணவரும் விஞ்ஞானிதான். எனவே, அறிவியல் மாணவர்களே உங்களை விஞ்ஞானி எனச் சொல்லிக்கொள்ளுங்கள்.

ஒருவகையில் பார்த்தால் மனிதர்களாகிய நாம் அனைவருமே விண்வெளிப் பயணிகள்தான். காரணம் மணிக்கு ஒரு லட்சம் கிலோ மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் செல்லும் ஒரு விண்கலத்தில் (அதாவது பூமியில்) நாமெல்லாம் பயணம் செய்துகொண்டிருக்கிறோம். இந்தப் பிரபஞ்சம் எப்படித் தோன்றியது, நீர் எப்படி உருவானது என்று ஆராய்ந்து பார்த்தாலும், மனித உடலில் உள்ள கோடிக்கணக்கான அணுக்களை ஆராய்ந்து பார்த்தாலும் அறிவியலின் மகத்துவம் புரியும். அறிவியல் ஆதாரம் இல்லாமல் எதையும் அப்படியே நம்பாதீர்கள்.

ஒரு குறை என்னவென்றால் அறிவியல் படிப்பின் மகத்துவத்தை உணராமல் இருக்கிறோம். அதனால் அறிவியலைப் பிரபலப்படுத்தத் தவறிவிட்டோம். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த அறிவியல் படிப்பு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைச் சுதந்திரமாகச் சிந்திக்க அனுமதிக்க வேண்டும். மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும். இது அரசின் விருப்பம். இன்னும் சொல்லப்போனால் நமது அரசியல் சாசனத்தின்படி அறிவியலை வளர்ப்பது நமது அடிப்படைக் கடமையும்கூட


நீங்களும் விஞ்ஞானிஅறிவியல் சாதனையாளர்அறிவியல் படிப்புகள்தொழில்நுட்பப் படிப்புகள்ஆசிரியர் ஜேக்கப்தி இந்து’ அறிவியல் விருதுகள்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x