Published : 03 Apr 2017 10:57 AM
Last Updated : 03 Apr 2017 10:57 AM

ஜிஎஸ்டி: ஒரே நாடு ஒரே வரி

“ஜிஎஸ்டி” இந்த தாரக மந்திரத்தை உச்சரிக்காத இந்திய தொழில் நிறுவனங்கள் இன்று இல்லை.“சரக்கு மற்றும் சேவை வரி” (ஜிஎஸ்டி) சுதந்திர இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் மிகப்பெரிய “வரிச்சீர்த்திருத்தம்” என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

மத்திய அரசால் வசூலிக்கப்படும் கலால் வரி, சேவை வரி, விற்பனை வரி மற்றும் மாநில அரசால் வசூலிக்கப்படும் விற்பனை வரி, நுழைவு வரி, ஆடம்பர வரி போன்ற 23 மறைமுக வரிகளை உள்ளடக்கி ஜி.எஸ்.டி என்று ஒரே வரியாக அமல் செய்யப்பட உள்ளது.

ஏறத்தாழ 10 ஆண்டு போராட்டத்திற்கு பிறகு மத்திய அரசு, மாநில அரசுகளின் ஒப்புதலோடு, கூடிய விரைவில் அதாவது ஜூலை 1 முதல் ஜிஎஸ்டி-ஐ நடை முறைக்கு கொண்டு வர அனைத்து முன்னேற்பாடுகளையும் போர்க்கால அடிப்படையில் செய்து வருகிறது.

ஜிஎஸ்டி - தற்போதைய நிலை

மத்திய சரக்கு மற்றும் சேவை வரி (CGST), ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி (IGST), யூனியன் பிரதேச சரக்கு மற்றும் சேவை வரி (UTGST), மாநில அரசுகளுக்கு ஏற்படும் வரி இழப்பை ஈடுசெய்யும் மசோதா ஆகிய 4 துணை மசோதாக்கள் மக்களவையில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இதை தொடர்ந்து மாநில சரக்கு மற்றும் சேவை வரி (SGST) அனைத்து மாநில சட்டசபைகளில் நிறைவேற்ற வேண்டும். தமிழகத்திலும் அதற்கான பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.

மத்திய நிதியமைச்சர், மாநில நிதி யமைச்சர்கள் போன்ற 32 பிரதிநிதிகளைக் கொண்டு அமைக்கப்பட்ட ஜிஎஸ்டி அமைப்பு (GST Council) வரி விதிப்பு சம்பந்தமான அனைத்து முடிவுகளையும் எடுக்கும். இந்த அமைப்பு இதுவரை 12 முறை கூடி விவாதித்துள்ளது.

தற்போதைய நிலையில் வரி விகிதங்கள், ஜிஎஸ்டியின் கீழ் 5%, 12%, 18%, 28% என்ற 4 பிரிவுகளில் வரி விதிப்பு இருக்கும். கார், காற்றேட்டப்பட்ட குளிர்பானங்கள், புகையிலை மற்றும் ஆடம்பரப் பொருட்களுக்கு மாநில வரி வருவாய் இழப்புகளை ஈடுசெய்யும் வகையில் கூடுதல் வரி விதிப்புகள் முதல் 5 வருடங்களுக்கு விதிக்கப்பட உள்ளது.

தாக்கங்களும் பலன்களும்

“ஒரே நாடு ஒரே வரி” கேட்பதற்கு எளிமையாக இருந்தாலும் ஏராளமான மாதப்படிவங்களையும் காலப்படிவங் களையும் தாக்கல் செய்யப்பட வேண்டிய கட்டாயத்திற்கு வரிதாரர்கள் உள்ளாவார்கள்.இந்தியா போன்ற பெரிய நாடுகளில் சீர்திருத்த வரி அறிமுகப்படுத்தப்படும் போது ஆரம்ப காலத்தில்இது போன்ற சில நடைமுறைச் சவால்களும் சிரமங்களும் இருக்கத்தான் செய்யும். ஆனால் தொலைநோக்கில் பார்க்கும்போது இதன் பலன்களே அதிகம் இருக்கும்.

மாநிலங்களுக்கு தக்கபடி மாறும் பல்வேறு வரி விதிப்புகளை அகற்றி, நாடு முழுக்க ஒரே மாதிரியான விதிப்பு பின்பற்றப்படும்.

வரி விதிப்பு என்பது வெளிப்படை யானதாக மாறிவிடும், எளிதானதாக இருக்கும். எனவே எந்த பொருளுக்கு வரி விலக்கு உள்ளது, எதற்கு வரி விலக்கு இல்லை என்பது போன்ற தகவல் கள் எளிதாக அனைவருக்கும் புரியும். முக்கியமாக வரிமேல் வரி வசூல் செய்யப்படும் சூழ்நிலை இருக்காது.

ஜிஎஸ்டி அமல் காரணமாக குறுகிய காலத்திற்கு பண வீக்கம் அதிகரிக்கும். இதனால் விலைவாசி உயர்ந்தாலும் கூட இது தற்காலிகமானதாகவே இருக்கும். பொது நிதி நிறுவனம், நாட்டின் வளர்ச்சி போன்றவற்றுக்கு ஆரோக்கியம் தரும்.

நிறுவனங்கள் வரி விலக்கு லாபங் களுக்கு ஏற்ப, தங்கள் தொழிலுக்கு ஏற்ற இடங்களில் நிறுவனங்களை தொடங்க முடியும். நிறுவனங்கள் இடையே ஆரோக்கிய போட்டி அதிகரிக்கும்.

நாட்டின் மொத்த பொருளாதார வளர்ச்சி (GDP) சுமார் 2% அதிகரிக்கும்.

பெட்ரோலியப் பொருட்கள், மதுபானங்கள் ஜிஎஸ்டி (வரி விகிதம்) அமைப்புக்குள் வருவதில்லை. மாநில அரசுகளே இந்த பொருட்களுக்கான வரியை தொடர்ந்து விதிக்கும். ரூ.50 லட்சத்திற்கு மிகாமல் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டுவரியாக (Compounding Rate) 1% வரி செலுத்தினால் போதுமானது. இது சிறு வியாபாரிகளுக்கு உதவியாக இருக்கும் என்றாலும் இதிலிருந்து INPUT CREDIT எடுக்க முடியாது என்பது வரிச் சங்கிலியை பாதிக்கும்.

தமிழ்நாடு நிலை

ஜி.எஸ்.டி.க்கு அனைத்து மாநிலங் களும் ஒப்புதல் அளித்துள்ளதாக கூறினாலும் சிறு வியாபாரிகள் தங்களது வர்த்தகத்தை இன்னும் மின்னணு முறைக்கு மாற்ற பயிற்சி தேவை.

இலகுவான (SEAMLESS), எளிதான (EFFORTLESS) மற்றும் தொடர்ச்சியாக (CONTINUITY) ஏற்படும் விதமாக மாற்றம் ஏற்பட அரசு முழு மூச்சில் முயற்சி எடுத்து வருகிறது. உதவிமையம் (HELP-DESK), இணையதளம் ஆகியவற்றின் மூலம் வரிதாரர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கும் கேள்விகளிக்கும் பதில் அளித்து வருகின்றனர்.

ஜிஎஸ்டி இணையதளத்தில் வணிகர்கள் தங்களின் விவரங்களை பதிவு செய்யும்படி தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.

தமிழ்நாடு வணிகவரித்துறையில் பதிவு பெற்ற வணிகர்கள் அனைவரும் ஜிஎஸ்டி. இணைய தளத்தில் தங்களது Digital Signature Certificate (DSC) (நிறுவனங்கள் என்றால்) அல்லது ஆதார் எண் உதவியுடன் மின் கையொப்பமிட்டு (e-Signature) (உரிமையாளர் / பங்குதாரர் என்றால்) தங்களது விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

வரிச்சங்கிலியில் பிணைந்திருப்பதின் மூலம் வரி மீது வரி வராமல் தவிர்க்க முடியும். வரி INPUT CREDIT இருப்பதால் பரிவர்த்தனை சங்கிலியில் ஈடுபட்ட அனைவரும் ஜிஎஸ்டி-யில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். இதனால் தற்போதைய வரிதாரர் எண்ணிக்கையைப் போல பல மடங்கு வரும் ஆண்டில் அதிகரித்து வரி வசூல் அதிக அளவு உயரும்.

தயார் நிலை என்ன?

அரசாங்கத்தின் தயார் நிலையை ஒப்பிட்டு பார்க்கும்போது வரிதாரர்களது தயார் நிலை சற்று குறைவாக இருப்பதாகத்தான் தோன்றுகிறது.பெரிய கம்பெனிகள் இது குறித்த தயார் நிலைக்கு ஏற்கனவே ஆயத்தப்படுத்தி கொண்டுள்ள நிலையில் சிறு நிறு வனங்கள் இந்த சட்டம் குறித்த முழு விவரங்களும் தெரியாத நிலையில் உள்ளனர். இதற்காக பல தொழில் அமைப்புகளும் மத்திய அரசின் மறைமுக வரி இலாகாவும் அதாவது கலால் வரி, சேவை வரி இலாகாவும் பல கருத்தரங்கங்களை நடத்தி வந்தாலும் இன்னும் தெளிவான நிலைக்கு செல்ல வேண்டிய தூரம் சற்று அதிகமாகத் தான் இருப்பது போல் உள்ளது.

தற்போது எந்த மாநிலத்தில் உற்பத்தி செய்யப்படுகிறதோ அங்கே வரி செலுத்தப்படுகிறது. புதிய ஜிஎஸ்டி முறைப்படி எந்த மாநிலத்தில் நுகர்வு (Destination based) செய்யப்படுகிறதோ அந்த மாநிலத்தில் வரி செலுத்த வேண்டும்.

இது தமிழ்நாடு போன்ற உற்பத்தி மாநிலங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படும். இதை ஈடு செய்யும் விதமாக வருவாய் இழப்பு மசோதாவும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கவனிக்க வேண்டியவை

கடந்த அரசாங்கத்தால் செய்ய முடியாத ஜிஎஸ்டி சட்டத்தை மாநில அரசுகளின் ஒப்புதலோடு நிறைவேற்றியதன் மூலம் இந்த அரசு பெரும் சாதனையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் பல கடந்த கால வரலாற்று அனுபவங்களையும் கவனத்தில் கொண்டு ஜிஎஸ்டி -யை நடைமுறைப்படுத்த வேண்டும்.

கடந்த ஆண்டின் பணமதிப்பு நீக்கம் கருப்புப் பணத்தை ஒழிக்க ஏற்படுத்தப்பட்ட அபாரமான திட்டம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் நடைமுறைப்படுத்தப்பட்டதில் ஏற்பட்ட குளறுபடிகளையும், பலவீனங்களையும் ஜிஎஸ்டி நடைமுறையில் அரசு அனுமதிக்கக் கூடாது.

தற்போதைய முறையில் மத்திய இலாகாக்களும் அரசு மாநில இலாகாக்களும் இணைந்து செயல்பட வேண்டிய அவசியம் உள்ளது. மேலும், 5 வகை வரி விகிதங்களுடன் சரக்கு மற்றும் சேவைக்கான வரியாக விதிக்கப்பட இருக்கிறது. தற்போதைய சேவை வரி 15% என்னவாக மாறும் என்பதையும் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கால்பந்தாட்டத்தில் கோல்போஸ் டுக்கு 50 அடி முன்பாக பந்து இருப்பது போன்ற நிலையில் ஜிஎஸ்டி அமல்படுத்தப்படும் நிலை உள்ளது. பல நாடுகளில் வரிதாரர்களை அரசாங்கம் வாடிக்கையாளர்களாக கருதுகிறது.

காந்தியடிகள் கூறியது “வாடிக்கை யாளர்களே நமது கடவுள். அவர்களைத் தான் நாம் சார்ந்து இருக்கிறோம். வாடிக்கையாளர்களின் நலனில் தான் நமது எதிர்காலம் உள்ளது”. நம் நாட்டிலும் ஜிஎஸ்டி-ன் வரிதாரர்களை வாடிக்கையாளராக கருதி அவர் களுக்கு ஏற்படும் ஐயங்களையும் தேவைகளையும் பூர்த்தி செய்து உரிய வரியை வசூல் செய்யும் பட்சத்தில் இந்தியா ஜிஎஸ்டி நடைமுறையில், உலகில் சிறப்பான இடம் பெறும்.

karthikeyan.auditor@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x