Last Updated : 06 May, 2017 10:27 AM

1  

Published : 06 May 2017 10:27 AM
Last Updated : 06 May 2017 10:27 AM

புற்றுநோய்க்கு ஆயுர்வேத சிகிச்சை: கேரளத்தில் ஒரு ஆச்சரிய மருத்துவர்

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பெருந்தலமன்னா பேருந்து நிலையத்துக்கு எதிர்ப்புறம் பிரியும் சின்ன சாலையில் அரை கிலோ மீட்டர் நடந்தால் அரசு ஆயுர்வேத மருத்துவர் மனோஜ்குமாரின் கிளினிக் இருக்கிறது. ஆயுர்வேத மருத்துவம் பயின்று 1998 முதல் அரசு ஆயுர்வேத மருந்தகத்தில் முதன்மை மருத்துவ அலுவலராகப் பணியாற்றி வரும் ஏ.மனோஜ்குமார், ஆயுர்வேத மருந்துகளின் மூலம் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கிறார்.

‘ஈரல் புற்றுநோய்க்கான ஆயுர்வேதச் சிகிச்சை முறைகள்’ குறித்துத் தனது சிகிச்சை அனுபவங்களை உள்ளடக்கி, இவர் சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரையை (19.09.2015), ஜெர்மனியைச் சேர்ந்த ஐரோப்பிய ஆயுர்வேத அகாடமி என்ற அமைப்பு சிறந்த ஆயுர்வேதச் சிகிச்சை முறை என அங்கீகரித்துள்ளது. இதே சிகிச்சைக்காக இந்திய மருத்துவ முறைகளின் அமைப்பான ஆயுஷ்ஷின் கீழ் இயங்கும் கேரள அரசு மருத்துவப் பிரிவு, 2015-ம் ஆண்டின் சிறந்த மருத்துவருக்கான விருதை இவருக்கு வழங்கியுள்ளது.

தமிழகம், கேரளத்தைச் சேர்ந்த நோயாளிகள் இவரிடம் அதிகமாகச் சிகிச்சை பெறுகின்றனர். கத்தியில்லை, ரத்தமில்லை, உள் நோயாளி சிகிச்சை இல்லை. தான் தயாரிக்கும் ஆயுர்வேத மருந்துகளின் மூலமாகவே நாள்பட்ட புற்றுநோய்களுக்கும் இவர் சிகிச்சை அளிக்கிறார்.

சில நோயாளிகள்

டாக்டர் மனோஜ்குமாரை சந்தித்தபோது, சிகிச்சைக்கு வந்திருந்த பெண்ணுக்கு 48 வயது. மலப்புரம் அருகே அமரம்பலம் கிராமத்தைச் சேர்ந்தவர். நான்கு வருடங்களுக்கு முன்பு எலும்பில் புற்று ஏற்பட்டு, கருப்பைக்கும் பரவி, வயிற்றுவலியால் துடித்து ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அறுவைசிகிச்சைதான் வழி, அதைச் செய்தாலும் பிழைக்க வாய்ப்பு குறைவு என்று மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். அந்நிலையில் உறவினர் ஒருவர் மூலம் இங்கு வந்துள்ளார். இரண்டு மாதம் டாக்டர் மனோஜ்குமார் அளித்த ஆயுர்வேத மருந்துகள், அந்தப் பெண்ணைப் புற்றுநோயிலிருந்து மீட்டுள்ளன.

இதேபோல் கோவையை சேர்ந்த ஒருவருக்குப் பிரைன் ட்யூமர். திடீரென்று வாய், கை கால்கள் கோணி நினைவிழந்து விட்டார். அத்தனை சோதனைகளையும் செய்து பார்த்த புகழ்பெற்ற ஆங்கில மருத்துவர் குழு ஒன்று, ‘மூளையில் குறிப்பிட்ட அளவு புற்று கட்டி. அதை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவதுதான் வழி. ஆனால் பிழைப்பதற்கு உத்தரவாதம் இல்லை!’ என்றே சொல்லிவிட்டது. அவருக்கு டாக்டர் மனோஜ்குமார் இரண்டு மாதம் சிகிச்சை அளித்தார். இப்போது மனிதர் எழுந்து உட்கார்ந்துவிட்டார். இப்படிப் பல உதாரணங்கள் உள்ளன.

- ஆயுர்வேத டாக்டர் ஏ.மனோஜ்குமார்

ஆயுர்வேத மருத்துவத்தில் பொதுவாக வழங்கப்படும் கஷாயம், சூரணம், மாத்திரை வடிவங்களிலேயே இங்கே புற்றுநோய்க்கும் மருந்து வழங்கப்படுகிறது. அதில் சில மருந்துகளை டாக்டர் மனோஜ்குமாரே தயாரிக்கிறார். செலவும் அதிகப்படியாக ஆவதில்லை.

அனுபவம் தந்த சிகிச்சை

“நான் ஆயுர்வேதத்தில் பொது மருத்துவர்தான். கேன்சர் பேஷண்ட் வந்தபோது ஆயுர்வேதத்தில் உள்ள சில மருந்துகளைக் கொடுத்துப் பார்த்தேன். ஒரு ஸ்பிரிசுவல் நேச்சர் என்று சொல்லுவார்களே, அப்படி அந்த மருந்துகள் அவர்களைக் குணப்படுத்தியதைக் கண்டு, அதில் ஆர்வம் கொண்டேன். பிறகு அந்தச் சிகிச்சைக்கான மருந்துகளை அனுபவம் மூலமாகக் கையாள ஆரம்பித்தேன். அது வெற்றிகரமாக அமைய, அது குறித்த ஆராய்ச்சியில் இறங்கினேன். ஒரு நோயாளியைப் பார்த்தால் அவருக்கு எந்த அளவு அந்த நோயின் தன்மை இருக்கிறது என்பதைப் பொருத்தே மருந்து கொடுக்கிறேன்.

கருப்பை புற்றுநோய் என்றால் ஒரே மருந்து கொடுப்பார்கள். நான் அப்படிக் கொடுப்பதில்லை. நோயாளியின் உடல் தன்மைக்கும், நோய்த் தன்மைக்கும் ஏற்ப வேறு வேறு மருந்துகளே கொடுக்கிறேன். அது குணமாகும்போது ஒவ்வொரு முறையும் மருந்தை மாற்றிக் கொடுக்கிறேன். ரத்தப் புற்றுநோயில் பல வகைப்பட்டவர்கள், கருப்பை புற்றுநோய், ஈரல் புற்றுநோய், வயிற்றுப் புற்றுநோய் என உள்ளவர்கள் பல தரப்பட்டவர்களும் என்னிடம் சிகிச்சை பெற்றுள்ளனர்.

நான் ஒரு அரசு மருத்துவர். எனது வேலைநேரம் போக எஞ்சிய நேரத்தில்தான் புற்றுநோய் சிகிச்சைக்காக நேரம் ஒதுக்குகிறேன்,” என்கிறார் டாக்டர் மனோஜ்குமார், அமைதியாக.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x