Last Updated : 18 Jun, 2017 11:57 AM

 

Published : 18 Jun 2017 11:57 AM
Last Updated : 18 Jun 2017 11:57 AM

களம் புதிது: சாமானியப் பெண்ணின் கார்ட்டூன் குரல்!

இந்தியாவின் பிரபல கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே. லக்ஷ்மணின் பேத்தி ரிமானிகா லக்ஷ்மண், தாத்தாவின் வழியைப் பின்பற்றி ‘சாமானியப் பெண்’ (Common Woman) என்ற புதிய கார்ட்டூன் கதாபாத்திரத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்.

புகழ்பெற்ற கேலிச்சித்திர ஓவியர் ஆர்.கே. லக்ஷ்மண். ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழுக்காக 1951-ம் ஆண்டு ‘சாமானிய மனிதன்’ கதாபாத்திரத்தை உருவாக்கினார் . ஒவ்வொரு நாளும் நடப்பு நிகழ்வுகளை, பிரச்சினைகளைச் சாமானிய மனிதரின் பார்வையில் அணுகும் வகையில் இந்தக் கேலிச்சித்திரங்கள் அமைந்திருந்தன. அவரைப் போலவே புகழ்பெற்றிருந்தது அவரது ‘சாமானிய மனிதன்’ கதாபாத்திரம்.

இப்போது அந்தப் பணியை அவருடைய பேத்தி ரிமானிகா தொடரவிருக்கிறார். தாத்தா உருவாக்கிய கதாபாத்திரத்தின் நீட்சியாக ‘சாமானியப் பெண்’ என்ற புதிய கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தப்போவதாக ரிமானிகா தெரிவித்திருக்கிறார். உலக கார்ட்டூனிஸ்ட் நாளன்று (மே 5-ம் தேதி) இந்த அறிவிப்பு வெளியானது.

சமத்துவப் பேச்சு

ஆர்.கே. லக்ஷ்மணால் தொடங்கப்பட்ட ‘ஆர்.கே. ஐ.பி.ஆர். நிர்வாகம்’ என்ற அமைப்பு இந்தப் புதிய கதாபாத்திரம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. “சமூகத்திலிருக்கும் ஒரு சாமானியப் பெண்ணின் கண்ணோட்டத்தை வெளிப்படுத்தும்படி இந்தப் புதிய கதாபாத்திரம் அமைந்திருக்கும். சமகாலப் பாலினப் பிரச்சினைகளைப் பற்றி இந்த கார்ட்டூன்களில் விவாதிக்கப்படும். இந்தப் புதிய தொடர், ‘சாமானிய மனிதன் - சாமானியப் பெண்’ என்ற தலைப்பில் வெளியாகும். ‘சாமானியப் பெண்’ கதாபாத்திரம், ‘சாமானிய மனித’னின் பேத்தியாகத் தொடரில் அறிமுகமாகும்.

தாத்தா சந்தித்த அதே சூழ்நிலைகளை அவருடைய பேத்தியான ‘சாமானியப் பெண்’ணும் சந்திக்கும்போது, அவள் எப்படிக் கையாளுகிறாள் என்பதைப் புதிய கார்ட்டூன் தொடர் பேசும். இந்த கார்ட்டூன் தொடர் பெண்களின் பிரச்சினைகளைப் பற்றி மட்டுமல்லாமல், ஆண்-பெண் சமத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் அமைந்திருக்கும். நகைச்சுவை சாரம் குறையாமல் இந்தத் தொடர் வெளியாகும்” என்றும் அந்த அறிவிப்பு தெரிவிக்கிறது.


ரிமானிகா

பெண் பார்வை

இந்தப் புதிய கதாபாத்திரத்தின் முதல் படம் சமீபத்தில் வெளியானது. ‘சாமானிய மனிதன்’ செடிக்குத் தண்ணீர் ஊற்றுகிறார், அதிலிருந்து வளர்ந்து ‘சாமானியப் பெண்’ வெளியே வருவதாக முதல் கேலிச்சித்திரம் அமைந்திருக்கிறது.

2015-ல் மறைந்த கார்ட்டூனிஸ்ட் லக்ஷ்மணுக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக இந்தப் புதிய கதாபாத்திரம் உருவாக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ‘சாமானியப் பெண்’ கதாபாத்திரத்தை உருவாக்கும் எண்ணத்தை ரிமானிகா பகிர்ந்துகொண்டபோது, ஆர்.கே. லக்ஷ்மண் பெரிதும் ஊக்குவித்திருக்கிறார்.

பொதுவாக இந்திய நாளிதழ்களில் ஆண் கார்ட்டூன் கதாபாத்திரங்களே அரசியல் பேசியிருக்கின்றன. அந்தப் பின்னணியில் இன்னும் ஒரு மாதத்தில் வெளிவரப்போகும் ரிமானிகாவின் ‘சாமானியப் பெண்’ கதாபாத்திரம் பெண்களின் பிரச்சினைகளைப் பேசுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x