Published : 21 Feb 2017 10:56 AM
Last Updated : 21 Feb 2017 10:56 AM

உலக சாதனை: விண்வெளியில் சதம் அடித்த இஸ்ரோ

இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை மகிழ்ச்சி பொங்க “கிரிக்கெட் வீரர்கள் மட்டுமல்ல, இஸ்ரோவும் சதம் அடிக்கும்” என அறிவித்தார். அதற்கு ஏற்ப பி.எஸ்.எல்.வி.யின் எக்ஸ் எல் மாடல் C37 ராக்கெட்டில் இந்தியாவின் மூன்று செயற்கைக்கோள் மற்றும் 101 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை இஸ்ரோ கடந்த வாரம் விண்ணில் ஏவியது. இதன் மூலம் இதுவரை ஒரே ராக்கெட்டில் 37 விண்கலங்களை விண்ணில் செலுத்திய ரஷ்யாவின் சாதனையை முறியடித்துப் புதிய உலக சாதனை படைத்துள்ளது இந்தியா.

இஸ்ரோவின் இந்த முயற்சியின் முக்கியத்துவம் 104 விண்கலங்களை ஒரே நேரத்தில் விண்ணில் செலுத்தியது மட்டுமல்ல. அத்தனை செயற்கைக்கோள்களைக் கிட்டத்தட்ட ஒரே உயரத்தில் ஒரே சமயத்தில் ஒன்றோடொன்று மோதிவிடாமல் விண்ணில் செலுத்தப் புது யுக்தியை வடிவமைத்ததுதான்.

மோதாமல் ஓடு!

ஓடும் பேருந்திலிருந்து கீழே குதித்தால் பஸ்ஸோடு கொஞ்ச தூரமாவது ஓட வேண்டும் அல்லவா? அதிலும் ஐந்தாறு பேர் அடுத்தடுத்துக் குதித்தால், முதலில் குதித்தவர் பேருந்தோடு ஓடி வரும்போது இரண்டாவதாகக் குதிப்பவரின் மீது மோதி விடக்கூடும். எனவே குதிப்பவர்கள் அடுத்துக் குதிப்பவரின் பாதையிலிருந்து விலகி ஓட வேண்டும். அவ்வாறு ஒன்றுடன் ஒன்று மோதிவிடாமல் 104 செயற்கைக்கோள்களையும், ஒவ்வொன்றாக 510 முதல் 524 கி.மீ. உயரத்தில் வெறும் 12 நிமிடக் கால அளவில் விண்ணில் ஏவ வேண்டும் என்பதுதான் இஸ்ரோ முன் இருந்த சவால்.

அடுத்தடுத்த சவால்கள்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சுவிஸ், அமெரிக்கா எனப் பல நாடுகளின் செயற்கைக்கோள்களை ஒன்றுடன் ஒன்று பிணைத்துப் பொதியாகக் கட்டுவது ஒரு சவால். கிட்டத்தட்ட ஒரே உயரத்தில் அவ்வளவு செயற்கைக்கோள்களையும் செலுத்துவது மற்றொரு சவால். இரண்டு பக்கமும் இரு வேறு எடையுடைய பையைக் கட்டி செல்லும்போது அதிலிருந்து ஒரு பை கழன்று கீழே விழுந்துவிட்டால் பேலன்ஸ் செய்வது எப்படிச் சிரமமோ, அவ்வாறு பல்வேறு எடைகளுடைய செயற்கைக்கோள்களை ஓன்றாக ராக்கெட்டிலிருந்து விடுவிப்பது மூன்றாவது சவால். வெறும் பத்து நிமிடத்தில் எல்லாச் செயற்கைக்கோள்களும் விடுபட்டு விண்ணில் செல்லும் பாதைகளைக் கண்காணித்து, அதனைப் பூமியில் உள்ள கட்டுப்பட்டு அறைக்குத் தெரிவித்து அந்தச் செயற்கைக்கோள்களைச் சரியான பாதைக்கு இயக்குவது பெரும் சவால்.

அசாத்தியமான நானோ செயற்கைக்கோள்கள்

இந்தச் சாதனையைப் படிப்பினையாகக் கொண்டு மேலும் கற்றுக்கொள்ளும் நோக்கத்துடன் எட்டு வீடியோ கேமராக்கள் ராக்கெட்டில் பொருத்தப்பட்டன. இவை ராக்கெட் விண்ணில் செல்வது, பொதிகள் அவிழ்ந்து முறையாக விண்கலங்கள் விண்ணில் செலுத்தப்படுகிறதா என்பதையெல்லாம் ‘செல்ஃபி’ எடுத்துக் கண்காணித்துக் கட்டுப்பாட்டு அறையில் இருந்த விஞ்ஞானிகளுக்குத் தெரிவித்துக்கொண்டிருந்தன. இந்தத் தரவுகளை வைத்து மேலும் நுட்பமாக அடுத்த முறை செயல்படுத்தப் பாடம் கற்கலாம்.

நூற்றுக்கும் அதிகமான செயற்கைக் கோள்களை விண்ணில் முறையாக ஏவ இஸ்ரோ விஞ்ஞானிகள் முதலில், மூன்றிலிருந்து நான்கு நானோசெயற்கைக்கோள்களைப் பொதிந்து குவாட்ராபேக் பொதியாகச் செய்தனர். இவ்வாறு 101 நானோசெயற்கைக்கோள்கள் 25 குவாட்ராபேக் பொதியாகப் பொதியப்பட்டன. முதலில் இந்திய விண்கலங்கள் மூன்றையும் விண்ணில் செலுத்திய பிறகு, இந்த 25 குவாட்ராபேக் பொதிகள் ஒவ்வொன்றாக விண்ணில் செலுத்தப்பட்டன.

விண்வெளியில் ஒரு குவாட்ராபேக் செலுத்தியதும், அந்தப் பொதியில் உள்ள ஒரு கதவு திறந்து அதில் உள்ள பொறி உள்ளே பொதியப்பட்ட நானோசெயற்கைக்கோள்களை விண்ணில் வெவ்வேறு கோணத்தில் தள்ளிவிடும். மொத்தம் 12 நிமிடக் கால இடைவெளியில் பதினான்கு கிலோமீட்டர் ராக்கெட் பயணத்துக்குள் அனைத்துக் குவாட்ராபேக் பொதிகளும் விண்ணில் செலுத்துவது கத்தி மீது நடப்பது போன்ற சவால்.

போட்டாபோட்டி

2013-ல் அமெரிக்கா ஒரே ராக்கெட்டில் 29 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியது. இந்தச் சாதனையை முறியடிக்க 2014-ல் ரஷ்யா 37 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியது. அணுகுண்டு ஒப்பந்தத்தின் காரணமாக வீணாகிப்போன பழைய ஏவுகணைகளைப் புதுப்பித்து அமெரிக்காவும் ரஷ்யாவும் இந்தச் சாதனைகளைப் புரிந்தன. 2014-ல் 34 கியூப்சாட் செயற்கைக்கோள்களைச் சர்வதேச விண்வெளிக்குடில் பூமியைச் சுற்றிவரும்போது ஒவ்வொன்றாக விண்ணில் செலுத்தியது. ஆனால், ஒரே ராக்கெட் தனது ஒரே பயணத்தில் செலுத்தவில்லை என்பதால், இது சாதனையாகக் கருதப்படுவதில்லை.

இதற்கு முன்னர் இஸ்ரோ 2008-ல் 10 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியது. அதன் பின்னர் 2016-ல் 20 செயற்கைக்கோள்களைச் செலுத்திச் சாதனை படைத்தது. இதற்கெல்லாம் மகுடம் வைத்தது போல இப்போது ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவிப் புதிய உலக சாதனை படைத்துள்ளது இஸ்ரோ.

இந்த ராக்கெட்டில் பயணம் செய்யும் முக்கிய மையச் செயற்கைக்கோள் 664 கிலோ எடை உடைய கார்டோசாட் 2 (cartosat-2) வரிசை இந்தியச் செயற்கைக்கோள் ஆகும். அச்சில் இரண்டு கண்ணாடி வைத்து 45 டிகிரிவரை கண்காணிக்கக்கூடிய விண்வெளி கேமரா, எடை குறைவாகவும் அதே நேரம் உறுதிமிக்க கார்பன் ஃபைபர் உறுதிசெய்த பிளாஸ்டிக் பொருளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட நவீன எலக்ட்ரோ ஆப்ட்டிகல் கருவிகள், தரவுகளைச் சுருக்கிப் பொதியும் நவீன கணிதக் கணினி முறைகள், தரவுகளைப் பதிவிடக் கையடக்கமான ஹார்ட் டிஸ்க் போன்ற கருவிகள், விண்மீன்களைக் கண்டறிந்து விண்வெளியில் தன் இருப்பிடத்தை உணரும் உணர்வீர்கள் போன்ற நவீனத் அமைப்புகள் கொண்ட நவீன தொலையுணர்வு செயற்கைக்கோள்கள் (Remote Sensing Satellites) ஆகியவைதான் கார்டோசாட் வரிசை.

பயன்கள் பல

புவியியல் ஆய்வுகள், அறிவியல் ஆய்வுகள், சுற்றுச்சூழலைக் கண்காணித்து விபத்து ஏற்படும்போது அவசரத் தகவல்தொடர்பு தருவது உள்ளிட்ட பயன்கள் இந்தச் செயற்கைக்கோள்கள் மூலம் உண்டு.

விடா முயற்சி விண்ணில் வெற்றி!

பூமியிலிருந்து 510 கி.மீ. உயரத்தில் போலார் சன் சிங்க்ரோனஸ் ஆர்பிட் எனும் சூரிய ஒத்தியக்க துருவச் சுற்றுப்பாதையில் (sun synchronous polar orbit) இந்தச் செயற்கைக்கோள் ஏவப்பட்டுள்ளது.

முதன் முதலில் ஏவப்பட்ட கார்டோசாட்-2 பழுதடைந்தது

2008-ல் செழுமையூட்டப்பட்ட கார்டோசாட் 2A

2010-ல் கார்டோசாட் 2B

2016- ல் கார்டோசாட் 2C

இப்போது கார்டோசாட் 2D

பிறகு கார்டோசாட் 2E இந்த ஆண்டின் கடைசியில் ஏவப்படும்.

இஸ்ரோ 180 வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் உட்பட மொத்தமாக 226 செயற்கைக்கோள்களை இதுவரை விண்ணில் ஏவியுள்ளது. இந்த முறை ஏவப்பட்ட மூன்று செயற்கைக்கோள் உட்பட, இப்போது மொத்தம் 30 இந்தியச் செயற்கைக்கோள்கள் செயல்பாட்டில் உள்ளன. இதில் 11 தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள்.

இதுவரை பி.எஸ்.எல்.வி. ராக்கெட் 39 முறை ஏவப்பட்டுள்ளது. அதில் முதல் இரண்டில் ஒன்று முழு தோல்வி, ஒன்று பகுதி தோல்வி. மீதமுள்ள 37-ம் முழு வெற்றி.

நொடிக்கு நொடி!

ராக்கெட் ஏவப்பட்டு 17 நிமிடம் 29 விநாடி கடந்த பின்பு 510.3 கி.மீ. உயரத்தில் ராக்கெட் செல்லும் நிலையில் கார்டோசாட் 2 வரிசை முக்கிய செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது. அதன் பின்னர் 17 நிமிடம் 39 வினாடியில் 510.5 உயரத்தில் ஐ.என்.எஸ். 1A செலுத்தப்பட்டது. 510.6 கி.மீ. உயரத்தை 17 நிமிடம் 40 நொடியில் அடைந்தபோது ஐ.என்.எஸ். 1B செலுத்தப்பட்டது. பின்னர் 18 நிமிடம் 32 விநாடிக்குப் பிறகு ராக்கெட் 511.7 கி.மீ. உயரத்தை அடைந்தபோது முதல் குவாட்ராபேக் பொதி ஏவப்பட்டது. ராக்கெட் செலுத்தப்பட்டு 28 நிமிடம் 42 விநாடியில் இறுதி குவாட்ராபேக் பொதி 543 கி.மீ. உயரத்தில் செலுத்தப்பட்டது.

இஸ்ரோவின்தனிச் சிறப்பு விடுவிப்பு வரிசைத் தொடர் இந்த முறை பயன்படுத்தப்பட்டு அதில் வெற்றிகண்டுள்ளது

- சிவம், இஸ்ரோ விஞ்ஞானி

104 விண்கலங்களை வெற்றிகரமாகப் பொட்டலம் பொட்டலமாகக் கட்டிப் பொதியை ராக்கெட்டின் மூக்கின் மேல் வைப்பது பெரும் தொழில்நுட்பச் சவால். அதை வெற்றிகரமாக இஸ்ரோ செய்துகட்டியுள்ளது

- பி.ஜெயக்குமார், திட்ட இயக்குனர்

கட்டுரையாளர்,
அறிவியல் எழுத்தாளர்,
தொடர்புக்கு: tvv123@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x