Published : 02 Jan 2016 11:25 AM
Last Updated : 02 Jan 2016 11:25 AM

ரியல் எஸ்டேட் 2015

> ஜனவரி 3, ரிசர்வ் வங்கி, குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்தது. முன்பையில் நடந்த ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை அறிவிப்பின்போது அதன் ஆளுநர் ரகுராம் ராஜன் அறிவித்தார். இதன் மூலம் வீட்டுக் கடன் வட்டி 0.25 சதவீதம் குறைக்கப்பட்டது. மார்ச், ஜூன், அக்டோபர் என இந்த ஆண்டில் நான்கு முறை கடன்களுக்கான வட்டியை ரிசர்வ் வங்கி குறைத்தது குறிப்பிடத்தக்கது.

> ஜனவரி 4, தமிழ்நாடு அரசின் ‘அம்மா சிமெண்ட்’ தன் விற்பனையை திருச்சியில் தொடங்கியது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்துக்குச் சொந்தமான 5 கிட்டங்கிகள் மூலம் இந்த விற்பனை தொடங்கியது. ஒரு சிமெண்ட் மூட்டையின் விலை ரூ. 190. 26.09.2014 அன்று தமிழக அரசு இந்தத் திட்டத்தை அறிவித்திருந்தது.

> ஜனவரி 13, இந்தியாவின் வர்த்தக ரியல் எஸ்டேட் வளர்ச்சி கண்டுள்ளதாக சிபிஆர்இ ரியல் எஸ்டேட் ஆய்வு நிறுவனத்தின் அறிக்கை வெளியானது.

> பிப்ரவரி 24, நிலம் கையகப்படுத்தும் மசோதா நாடாளுமன்ற விவாதத்துக்குக் கொண்டுவரப்பட்டது.

> மார்ச் 17, தொழிற்சாலைகளைக் காட்டிலும் வீடுகள், அதிக அளவு பசுமைக்குடில் வாயுவை வெளியிடுவதாக பெங்களூரூ சுற்றுச்சூழல் அறிவியல் மையத்தின் அறிக்கை கூறியது. இந்தப் பசுமைக்குடில் வாயுக்களால் பூமி வெப்பமடைந்து வருவது குறிப்பிடத்தகுந்தது. பசுமைக் குடில் வாயு வெளியேற்றும் நகரங்களில் சென்னைக்கு இரண்டாம் இடம். 19.5 சதவீதம் பசுமைக்குடில் வாயுக்கள் சென்னை வீடுகள் மூலம் வெளியேற்றப்படுகின்றன என அந்த அறிக்கை சுட்டிக்காட்டியது.

> ஏப்ரல் 8, ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சி அளிக்கும் நோக்கத்துடன் கொண்டுவரப்பட்ட ரியல் எஸ்டேட் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. பிறகு இரு சபைகளுக்கும் விவாதத்துக்கு வந்தது.

> ஜூன் 25, பிரதமர் நரேந்திர மோடி, அம்ருத் (AMRUT) என அழைக்கப்படும் நகர மேம்பாட்டுத் திட்டத்தை (Ata> Mission for Rejuvenation and Urban Transformation) தொடங்கிவைத்தார்.

> ஆகஸ்ட் 25, மவுலிவாக்கம் கட்டிட விபத்து தொடர்பான ஒரு நபர் கமிசன் அறிக்கைச் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி ஆர்.ரகுபதி தலைமையிலான இந்த அறிக்கை, விதிக்குப் புறம்பாகக் கட்டியதனால்தான் விபத்து ஏற்பட்டதாகக் குற்றம் சாட்டியது. 2014-ம் ஆண்டு ஜூன் 28-ம் தேதி நடந்த இந்த விபத்தால் 61 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

> ஆகஸ்ட் 27, மத்திய வீட்டு வசதித் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு 98 ஸ்மார்ட் சிட்டி நகரங்களின் பட்டியலை வெளியிட்டார். அவற்றில் தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருப்பூர், வேலூர், சேலம், திண்டுக்கல், தஞ்சை, தூத்துக்குடி, திருநெல்வேலி, ஈரோடு ஆகிய நகரங்கள் ஸ்மார்ட் சிட்டிகளாக உருவாக உள்ளன.

> ஆகஸ்ட் 29, நிலம் கையகப்படுத்தும் மசோதாவை மத்திய அரசு கைவிட்டது. 2013-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் இந்த மசோதா கொண்டுவரப்பட்டது. ஆனால் பாஜக அரசு அதில் மேற்கொண்ட சட்ட திருத்தத்தால் காங்கிரஸ் கடும் எதிர்ப்புத் தெரிவித்தது என்பது குறிப்பிடத்தகுந்தது.

> செம்படம்பர் 9, ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவரான குமார மங்கலம் பிர்லா, மும்பையின் மலபார் ஹில் பகுதியில் உள்ள ஜாட்டியா மாளிகையை 425 கோடி ரூபாய்க்கு வாங்கினார். இந்திய அளவில் நடந்த விலை மதிப்பான வீடு விற்பனையாக அது ரியல் எஸ்டேட் உலகின் பேசுபொருளானது. இதற்கு முன்பு 2011-ல் இதே பகுதியில் மகேஸ்வரி இல்லம் 400 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது. அதற்கு அடுத்தபடியாக மெராங்கர் இல்லம் 2014-ல் 372 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது.

> செப்டம்பர் 13, பூனாவைச் சேர்ந்த தொழிலதிபர் சிரஸ் பூனாவாலா அமெரிக்க அரசாங்கத்துக்குச் சொந்தமான லிங்கன் ஹவுஸை ரூ.750 கோடி ரூபாய்க்கு வாங்கினார். இந்தக் கட்டிடம் 1957-ல் இருந்து 2011 வரை அமெரிக்காவின் தூதரகமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது.

> அக்டோபர் 4, மும்பையில் சிமெண்ட் விலையை காரணமில்லாமல் உயர்த்தியதற்காக சிமெண்ட் தயாரிப்பு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சிசிஐ அமைப்பில் (CCI-Competition Commission of India), இந்திய ரியல் எஸ்டேட் உருவாக்குபவர்கள் கூட்டமைப்பான கிரெடாய் வழக்குத் தொடுத்தது.

> அக்டோபர் 28, துபாயில் இந்திய முதலீட்டாளர்களின் ஆதிக்கமே தொடர்கிறது என துபாய் நிலத் துறையின் அறிக்கை (Dubai Land Department Report) வெளியானது. இந்திய முதலீட்டாளர்கள் 2015 முதல் அரை யாண்டில் சுமார் 200 கோடி அமெரிக்க டாலர் பணத்தை ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்துள்ளனர் என அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. கடந்த ஆண்டும் இந்திய முதலீட்டாளர்களே துபாய் ரியல் எஸ்டேட்டில் ஆதிக்கம் செலுத்தினர்.

> டிசம்பர் 1, வரலாறு காணாத வெள்ளத்தால் சென்னை நகரத்தின் பெரும் பகுதிகள் மூழ்கியது. இது சென்னை மட்டுமல்லாது தமிழகத்தின் பல பகுதிகளிலும் ரியல் எஸ்டேட் தொழிலில் பாதிப்பை விளைவித்தன.

> டிசம்பர் 22, ரியல் எஸ்டேட் மசோதாவை மத்திய அரசு தள்ளிவைப்பதாக அறிவித்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x