Published : 10 Dec 2013 00:00 am

Updated : 06 Jun 2017 15:59 pm

 

Published : 10 Dec 2013 12:00 AM
Last Updated : 06 Jun 2017 03:59 PM

‘யானைகளுக்கு இவரைத் தெரியும்

உங்களுக்கு யானைகளைத் தெரிந்திருக்கலாம். யானைகளுக்கு உங்களைத் தெரிந்திருக்குமா? தமிழக வன முகாம்களில் உள்ள யானைகள் ஒருவரைத் தங்கள் குடும்ப உறுப்பினராகவே கருதி வந்தன என்றால், அது டாக்டர் வி.கிருஷ்ணமூர்த்தியைத்தான். யானைகளுடன் ஆத்மார்த்தமான உறவைப் பகிர்ந்துகொண்ட அவர், நண்பர்களால் டாக்டர் கே என்று அழைக்கப்பட்டார். ஆனால், "யானை டாக்டர்" என்று சொன்னால்தான் பலருக்கும் தெரியும்.

சுருக்கமாகச் சொல்வதென்றால் யானைகளைப் பற்றிய நடமாடும் நூலகம் என்று அவரைச் சொல்லலாம். வாழ்நாள் முழுக்கக் காடுகள், யானைகளுடனே கழித்தவர் அவர்.


தமிழகத்தின் முக்கியக் காட்டுயிர் நிபுணர்களில் ஒருவரான அவர், யானைகளுக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்துக்கொண்டவர். தமிழக வனத் துறையில் விலங்கு மருத்துவராகக் கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் பணியாற்றினார். அர்ப்பணிப்பு உணர்வு மிகுந்த அவர், உலகிலேயே அதிக யானைகளுக்குப் பிரசவம் பார்த்தவர், பல நூறு அறுவைசிகிச்சைகள் செய்தவர், அதிக யானைகளைச் சவப்பரிசோதனை செய்தவர்.

அவரது நிர்வாகத்தின் கீழ் செயல்பட்ட முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாம் உலகத் தரத்துக்கு உயர்ந்தது. வேறெங்கும் இல்லாத வகையில் அந்த முகாம் யானைகள் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்ந்தன. அதிக இனப்பெருக்கமும் செய்தன. தமிழகக் கோவில் யானைகளுக்குப் பராமரிப்பு முகாம் நடத்த வேண்டும் என்ற திட்டம் அவரது யோசனைதான்.

பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும், தன் பணியைத் தொடர்ந்து வந்தார். நாட்டின் பல்வேறு மாநில அரசுகளும், அண்டை நாடுகளும் காட்டு யானைகளைப் பிடிக்கவும், வளர்ப்பு யானைகளைப் பராமரிக்கவும் அவரையே நாடி வந்தன.

1989இலேயே மனிதர்கள் - யானை எதிர்கொள்ளல் (Man - Elephant conflict) அதிகரித்துவிடும் என்பதை உணர்ந்து அவர் சிந்தித்து வந்தார். மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் மனிதர்கள் - யானை எதிர்கொள்ளல் நிகழ்ந்தபோது, பழங்குடிகள் யானைகளை எதிரிகளாகப் பார்க்க ஆரம்பித்தனர். அப்போது பிரச்சினைக்குரிய காட்டு யானைகளைப் பிடிப்பதற்குப் பல்வேறு முறைகளைப் பற்றி அவர் ஆராய்ச்சி செய்தார். மயக்க மருந்து ஊசியைச் செலுத்தி யானைகளைப் பிடிக்கும் முறையில் முன்னோடியாக மாறினார்.

வளர்ப்பு யானை பராமரிப்பு குறித்த அவரது கையேடு உலகெங்கும் பயன்படுத்தப்படுகிறது. International Union for the Conservation of Natural Resources (IUCN), Asian Elephant Specialist Group போன்ற முக்கியமான சர்வதேச ஆய்வுக் குழுக்களில் அவர் உறுப்பினராக இருந்தார்.

இவரது பணியில் உத்வேகம் பெற்ற டைரக்டர் ஹாரி மார்ஷல் அமெரிக்காவில் உள்ள பி.பி.எஸ். அலைவரிசைக்காக தி எலிபென்ட் மென், தி எலிபென்ட் மவுன்டென் ஆகிய இரண்டு ஆவணப் படங்களை எடுத்துள்ளார்.

டாக்டரின் மகன் ஸ்ரீதர், நினைவுகூரும் ஒரு சம்பவம்:

என் அப்பா இறப்பதற்கு, ஆறு மாதங்களுக்கு முன் நடந்த சம்பவம் இது. அப்போது முதுமலை கிராமம் ஒன்றில் விஷம் தோய்க்கப்பட்ட ஒரு பொறியில் சிக்கிக்கொண்ட ஒரு சிறுத்தை ஊனமுற்றுவிட்டது. அந்தச் சிறுத்தை கிராமத்தில் மாடுகளைச் சாப்பிட்டுவந்ததால், கிராம மக்கள் பொறி வைத்துப் பிடித்துள்ளனர். அந்தச் சிறுத்தை மோசமான நிலையில் முதுமலைக்குக் கொண்டுவரப்பட்டது. இதை அறிந்து என் அப்பா, சிறுத்தைக்குச் சிகிச்சை அளிக்க அங்கே சென்றார். அந்தச் சிறுத்தை பிழைப்பதற்கு வாய்ப்பில்லை என்றே எல்லோரும் நினைத்தார்கள். ஆனால், என் அப்பா சிறுத்தைக்கு இரவு முழுக்க டிரிப்ஸில் விஷ முறிவு மருந்தைச் செலுத்தியுள்ளார். காலையில் அந்தச் சிறுத்தை உற்சாகமாக எழுந்துவிட்டது. இவ்வளவுக்கும் அப்போது அப்பா நுரையீரல் நோய்த்தொற்றால் அவதிப்பட்டு, மூச்சுத் திணறிக்கொண்டிருந்தார். இந்தச் சம்பவத்தை என்னால் மறக்கவே முடியாது.

(டிசம்பர் 9 - டாக்டர் கிருஷ்ண மூர்த்தியின் 11வது நினைவு நாள்)டாக்டர் வி.கிருஷ்ணமூர்த்திநினைவு நாள்யானைகள்மருத்துவர்காட்டுயிர் நிபுணர்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

weekly-news

சேதி தெரியுமா?

இணைப்பிதழ்கள்

More From this Author

x