Published : 02 Feb 2014 00:00 am

Updated : 06 Jun 2017 19:04 pm

 

Published : 02 Feb 2014 12:00 AM
Last Updated : 06 Jun 2017 07:04 PM

தியாகராஜ ஆராதனை: பெண் பெருமையும் தியாகராஜரும்

ஜனவரியில் திருவையாற்றில் தியாகராஜரின் 167வது ஆராதனை விழா நடந்துகொண் டிருந்தது. மாண்டலின் ஸ்ரீநிவாஸ் ‘சீதம்மா மாயம்மா’ என்று மிடுக்காக தொடங்கியபோது, கூட இருந்த ஹரித்துவாரமங்கலம் பழனிவேலின் கைகள் தவிலில் விளையாட, மாதிரிமங்கலம் சுவாமிநாதன் மிருதங்கம் வாசிக்க, அலையென மோதிய கூட்டத்தில் ஆண்களுக்கு ஈடாக எங்கும் பெண்கள், பெண்கள். தியாகராஜர் சீதையை தன் தாயாகப் போற்றிய அந்த வசந்தா ராகக் கீர்த் தனை, மகிழ்ச்சி அலையில் ஆழ்த்தியது.

தியாகராஜ ஆராதனையில் பார்க்க வந்தவர்களாகட்டும், அல்லது மறுநாள் பஞ்சரத்னம் பாடத் திரளாக வந்த இசை கலைஞர்கள் ஆகட்டும்; இதில் பெரும் பகுதி பெண்கள். சுதா ரகுநாதன் தொடங்கி மஹதி, அக்கரைச் சகோதரிகள் எனப் பல பெண் கலைஞர்கள் தியாகராஜருக்கு அஞ்சலி செலுத்த வந்திருந்தனர்.

பெரும்பாலான ஆண் கலைஞர்கள் வாத்தியங்களை முழங்க, கலைஞர்களும், பார்வையாளர்களும் பஞ்சரத்ன கீர்த்தனைகளை சேர்ந்து பாடியது பெரும் உத்வேக அலைகளை உருவாக்கியது.

திருவையாற்றில் நடந்த இந்த விழாவின் ஹைலைட், பல இசைக்கல்லூரிகளில் இருந்து வந்திருந்த இளம் மாணவிகள். ஒரே நிறத்தில் புடவை அணிந்து அவர்கள் கூட்டம் கூட்டமாக ஆர்வத்துடன் பஞ்சரத்னத்தை பாடியது கூடுதல் சுவாரஸ்யம். நாதஸ்வரம் போன்ற ஆண்களே பெரும்பாலும் வாசிக்கும் இசைக்கருவிகளில்கூட, பெண்கள் முத்திரை பதித்துக்கொண்டிருந்தனர்.

தியாகராஜர் எனும்போது பெண்களுக்கு இவ்வளவு பக்தி ஏன்? பெரும் இராம பக்தராக அறியப்படும் தியாகராஜர், அம்பாளை நினைத்து உருக்கமாக பற்பலப் பாடல்களை பாடியிருக்கிறார். ‘சீதம்மா மாயம்மா’ என்ற கீர்த்தனையில் சீதை என் தாய், இராமன் என் தந்தை என்று சீதைக்கே முதலிடம் கொடுத்தார்.

இதே போன்று ‘சீதா பதி’ (ராகம் கமாஸ்), ‘ஸ்ரீ ஜானகி’ (ராகம் ஈச மனோஹரி), ‘மா ஜானகி’ (ராகம் காம்போதி) என்று பல கீர்த்தனைகளில் சீதையை முன்வைக்கிறார்.

“இராமன் ஜானகியின் கை பிடித்ததால் அன்றோ இராவணனை கொன்றவன் என்ற கீர்த்தியுடன் விளங்குகிறார்,” என்று தியாகராஜர் பெண்ணின் பெருமையை முன்வைக்கிறார். மேலும், தியாகராஜர் பார்வதி தேவியைப் பற்றிய பல பாடல்களை மனமுருகி பாடியிருக்கிறார்.

‘அம்ப நின்னு’ என்னும் ஆரபி ராகப் பாடலில், குயிலைப் பழிக்கும் இனிய குரலுடைய பார்வதி, தியாகராஜரின் தெளிவான இதயத்தில் சஞ்சரிப்பவள் என்று பாடினார்.

‘சுந்தரி நின்னு’ எனும் ஆரபி ராகக் கீர்த்தனையில் திரிபுரசுந்தரி தேவியை வர்ணித்துப் பூரிக்கிறார். “திடமான உன் தைரியத்தைக் கண்டு மேரு மலையே சிலையானது,” என்று பெண்ணின் தைரியத்தை இந்தப் பாடலில் கூறுகிறார்.

அடாணா ராகத்தில் ‘அம்ம தர்மசம்வர் தனி’ என்று திருவையாற்றில் உள்ள தர்மசம்வர்தனி அம்மனை குறித்து அவர், “தியாகராஜரின் குல தெய்வமே” என்று புகழ்கிறார். மற்றும் திருவொற்றியூரிலுள்ள அம்மனைக் குறித்த ‘சுந்தரி நிந்நிந்த’ என்ற பேகட ராகப் பாடலில் அம்மனை அன்னையாகவும், இவ்வுலகை விளையாட் டாகப் படைத்தவள், எனவும் வர்ணிக்கிறார்.

தியாகராஜரின் மிக மிகப் பிரபலமான பாடல்கள்: ‘தரிநி தெலுசு’ (ராகம் சுத்த சாவேரி), ‘சுந்தரி நீ திவ்ய’ (ராகம் கல் யாணி), ‘சிவே பாஹி’ (ராகம் கல்யாணி) என்று பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.

இவற்றில் தாயாகவும், தியாகராஜன் துதிப்பவளாகவும், எளியவர்களைக் காப்பவளாகவும், அற்புத அழகை கொண்டவளாகவும் திருவொற்றியூர் அம்மனைப் பாடிக் கொண்டாடினார் தியாகராஜர்.

இப்படிப்பட்ட தியாகராஜரை பெண்கள் திரண்டு வந்து திருவை யாற்றில் அந்த ‘சீதம்மா மாயம்மா’ என்று மாண்டலின் இசைத்ததும் பரவசம் அடைந்ததில் ஆச்சரியம் உள்ளதா என்ன?

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தியாகராஜர்திருவையாற்றுஅம்ப நின்னுபெண்கள்தியாகராஜ ஆராதனை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author