Published : 18 Jul 2016 10:59 AM
Last Updated : 18 Jul 2016 10:59 AM

இந்திய சாலைக்கு வரும் பொன்விழா கார்!

1964-ம் ஆண்டு ஏப்ரல் 15-ம் தேதி, அமெரிக்காவில் அந்தக் கார் அறிமுகப்படுத்தப்பட்ட தினம். முதல் நாளன்றே 22 ஆயிரம் கார்கள் விற்றுத் தீர்ந்தன. பொன்விழா கண்ட இந்த காரை ஏறக்குறைய 52 ஆண்டுக்கால இடைவெளிக்குப் பிறகு இப்போதுதான் இந்தியச் சந்தைக்கு அறிமுகப்படுத்துகிறது ஃபோர்டு. சொகுசு காரான ஃபோர்டு முஸ்டாங் கடந்த வாரம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த ஆண்டில் மட்டும் சர்வதேச அளவில் 1.10 லட்சம் முஸ்டாங் காரை விற்பனைசெய்துள்ளது ஃபோர்டு.

ரூ. 65 லட்சம் விலையிலான இந்தக் காருக்கு இந்தியாவிலும் அமோக வரவேற்பு, அறிமுகமான ஓரிரு நாளிலேயே முன் பதிவுகள் குவிந்தன. ஆகஸ்ட் மாதத்தில் இந்த கார் டெலிவரி செய்யப்படும்.

இனி இந்தக் காரை வாங்க விரும்புவோர் சில காலம் காத்திருக்க வேண்டும். அடுத்த கட்டமாக இந்த கார் இறக்குமதி செய்யப்படும்போதுதான் அது வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படும்.

இந்தியாவில் உள்ள சர்வதேச கார் பந்தய மைதானத்தில் (புத் சர்கியூட்) இந்தக் காரை ஓட்டிப் பார்க்கும் வசதியை அறிமுக தினத்தில் ஃபோர்டு நிறுவனம் செய்திருந்தது.

50 ஆண்டு பாரம்பரியத்தைக் கொண்ட இந்தக் கார் இளம் தலைமுறையினரைக் கவரும் வகையில் வெளிவந்துள்ளது. இந்தக் காரின் செயல்பாடு, சொகுசான பயணம் இவை அனைத்தும் 25 வயது இளைஞரையும் கவரும். 55 வயதுப் பிரிவினரும் இதை ரசிப்பர்.

இந்தியாவில் அறிமுகமான முஸ்டாங் கார் இந்த பிராண்டின் ஆறாவது தலைமுறையைச் சேர்ந்ததாகும். 1968-ல் வெளியான அமெரிக்காவின் மிகச் சிறந்த ``புல்லிட்’’ எனும் திரில்லர் திரைப்படத்தில் கார் சேஸிங்கில் நாயகன் ஸ்டீவ் மெக்கீன் பயன்படுத்தியது இந்த முஸ்டாங் ரகக் காரைத்தான். அதே பழமை மாறாமல் புதியநுட்பத்துடன் இது வெளிவந்துள்ளது.

50 ஆண்டுகளாக பவனி வரும் இந்தக் காரில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முஸ்டாங் பொன்விழா கொண்டாட்டத்தையும் வாடிக்கையாளர்களால் கொண்டாடப்பட்ட காரும் இதுவே.

முந்தைய மாடல்களில் உள்ள சிறப்பு செயல்பாடு மாறாமல் நவீன வடிவமைப்பில் மிகச் சிறப்பாக இது வெளிவந்துள்ளது. நீண்ட பானட் அமைப்பே இன்ஜின் நீண்ட இடத்தை ஆக்கிரமித்துள்ளதைப் பறைசாற்றுகிறது.

இந்தியாவுக்கென வலதுபுறம் ஸ்டியரிங் வீல் பொறுத்தப்பட்டு அளிக்க முடிவு செய்துள்ளது ஃபோர்டு.

இந்தியச் சந்தையில் அறிமுகமாகியுள்ள இந்த கார், டெல்லி ஆட்டோ எக்ஸ்போவுக்கு முன்பாகவே காட்சிப்படுத்தப்பட்டது. இந்தியா மட்டுமின்றி பிரிட்டன் சந்தையைப் பிடிக்க வலதுபுற ஸ்டீரிங் கார் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்தியச் சந்தைக்கென இன்டிகேட்டர் கட்டுப்பாட்டு அமைப்பும் இடமாற்றப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள பிளாட் ராக் ஆலையில் ஒருங்கிணைக்கப்பட்டு முழுவதுமாக தயாரிக்கப்பட்ட நிலையில் (சிபியு) இந்தியாவில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது ஃபோர்டு இந்தியா.

இந்தியாவிற்கென டிஐ-விசிடி வி8 மாடல் தயாரிக்கப்பட்டுள்ளது. எகோபூஸ்ட் இருப்பது சிறம்பம்சமாகும். 401பிஎஸ் பவர் மற்றும் 515 நியூட்டன் மீட்டர் டார்க் அளவுகளைக் கொண்டு சீறிப் பாயும் வகையில் இது உருவாக் கப்பட்டுள்ளது. 6 கியர்களுடன் இரட்டை கிளட்ச் வசதியோடு அதாவது தானியங்கி கியர் மாற்ற வசதியோடு இது வந்துள்ளது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 250 கி.மீ ஆகும்.

நான்கு வெவ்வேறு விதமான பயணத்துக்கேற்ப ஓட்டும் விதத்தை தேர்வு செய்யலாம். சாதாரணம், ஸ்போர்ட் பிளஸ், பந்தய மைதானம், பனி மற்றும் ஈரமானதளம் ஆகியவற்றில் பயண தளத்துக்கேற்றதைத் தேர்வு செய்யலாம்.

கார் பந்தயங்களுக்கு ஏற்றதாக வடிவமைக்கப்பட்டிருந்தாலும் இது சாலைப் பயணத்திற்கும் உகந்தது. பாதுகாப்பு அம்சமாக 8 ஏர் பேக்குகள் இதில் உள்ளன. டிரைவர் இருக்கையை தானியங்கி முறையில் அட்ஜெஸ்ட் செய்யலாம். மழைத் தூறல் தொடங்கியவுடனேயே வைபர் வேலை செய்யும். அந்த வகையில் மழை உணர் கருவி கொண்டது.

சாலையில் உறுதியான பிடிப்புடன் செல்வதற்கு ஏதுவாக 19 அங்குல அலாய் சக்கரம், அதிவேகத்தில் சென்றாலும் துல்லியமாக பிடிக்கும் பிரேக், பின்பகுதி சஸ்பென்ஷன் சொகுசான பயணத்தை அளிக்கும்.

6-வது தலைமுறையாக இந்தியச் சந்தையில் வந்துள்ள இந்த கார் 6 கண்கவர் வண்ணங்களில் வந்துள்ளது. அறிமுகத்தின்போதே அனைத்தும் விற்பனையாகியதிலிருந்தே முஸ்டாங் இந்தியச்சாலையில் மிகச் சிறந்த வரவேற்பைப் பெறுவது நிச்சயம்.

50 ஆண்டுகளாக பவனி வரும் இந்தக் காரில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முஸ்டாங் பொன்விழா கொண்டாட்டத்தையும் வாடிக்கையாளர்களால் கொண்டாடப்பட்ட காரும் இதுவே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x